‘இந்த மிரட்டல் வேலைகள் என்னிடம் நடக்காது!’ - எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சீறிய விவேக் #VikatanExclusive

விவேக் ஜெயராமன்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்களும் சசிகலா குடும்பத்தைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளன. ‘ஜெயா டிவியைக் கைப்பற்றும் முயற்சி ஒருக்காலும் நடக்காது. என்னை மிரட்டிப் பணிய வைக்க ரெய்டு பயத்தைக் காட்டுகிறார்கள். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்' எனக் குடும்ப உறவுகளிடம் கொதித்திருக்கிறார் ஜெயா டி.வி நிர்வாகி விவேக் ஜெயராமன். 

அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காத நிலையில் அவரால் நியமிக்கப்பட்ட தினகரனால் அறிவிக்கப்பட்ட நியமனங்கள் அனைத்தும் செல்லாது என்ற தீர்மானமும், ‘ஜெயா டிவி-யும் நமது எம்.ஜி.ஆர் நாளிதழும் கழகத்தின் சொத்துகள். அவற்றை சட்டரீதியாக மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்தை எதிர்த்து நேற்று அறிக்கை வெளியிட்ட ஜெயா தலைமைச் செயல் அதிகாரி விவேக் ஜெயராமன், ‘இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடிய சிலர் ஜெயா தொலைக்காட்சியையும் நமது எம்.ஜி.ஆரையும் மீட்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தீர்மானம் இயற்றியுள்ளனர். இது மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஜெயா தொலைக்காட்சியும் ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளேடும் தனியார் நிறுவனங்கள். யாரும் சர்வசாதாரணமாக உள்ளே புகுந்து கை வசமாக்கக்கூடிய நிலையில் இரு நிறுவனங்களும் இல்லை. இந்த விவரங்கள் தெரிந்திருந்தும், அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக ஜெயா தொலைக்காட்சியை மீட்கப் போவதாக தீர்மானம் இயற்றி இருப்பது மக்கள் அபிமானம் பெற்ற ஓர் ஊடகத்துக்கு விடப்பட்டிருக்கும் பகிரங்க மிரட்டலாகத்தான் தெரிகிறது. இருப்பினும் இந்த மிரட்டல்களை நெஞ்சுறுதியோடு எதிர்த்து நிற்போம்' எனக் காட்டமாக விமர்சித்திருந்தார். 

எடப்பாடி பழனிசாமிவிவேக்கின் கோபம் குறித்து நம்மிடம் பேசிய மன்னார்குடி குடும்ப உறவினர் ஒருவர், “சசிகலா குடும்பத்திலேயே மிக அமைதியானவர் விவேக். வர்த்தகத்தை மட்டுமே முழு நேரமாக கவனித்து வருகிறார். அரசியல் சர்ச்சைகளுக்கு அவர் இடம் கொடுத்தது கிடையாது. ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் போட்டியிட்டபோது, மறைமுகமாகத் தேர்தல் வேலைகளைப் பார்த்தார். திகார் சிறையில் தினகரன் இருந்தபோது, நாஞ்சில் சம்பத் நடத்திய பொதுக் கூட்டங்களைத் தொடர்ந்து ஜெயா டிவி-யில் ஒளிபரப்பினார். இதன்பிறகு, மதுரை மேலூரில் பிரமாண்ட பொதுக் கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று கவனித்தார் விவேக். தவிர, அமைச்சர்களின் ஊழல் முறைகேடுகளைத் தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது ஜெயா டிவி. இதையெல்லாம் கண்டு கொதித்துப் போய்த்தான், ‘ஜெயா டிவி-யைக் கைப்பற்றுவோம்’ எனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இந்தத் தீர்மானம் வெளியில் வந்த நேரத்தில், ‘முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசுகிறேன்’ எனக் கிளம்பத் தயாரானார் விவேக். அவரைச் சமாதானப்படுத்தவும் மிகக் கடுமையான விமர்சன அறிக்கையைத் தயாரித்தார். அதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. அவரது கோபத்துக்கு தினகரன் எதிர்ப்பு காட்ட, 'மாமா' என்று அழைப்பவர் அந்த நிமிடத்தில், ‘என்ன சார் நினைச்சுட்டு இருக்காங்க. இப்படியொரு வெளிப்படையான மிரட்டல் வரும்போது அமைதியாக இருக்க முடியாது சார்’ எனக் கொதித்திருக்கிறார்.

இறுதியில், சில திருத்தங்களுக்குப் பிறகு அறிக்கை வெளியானது என விவரித்தவர், “சில நாள்களுக்கு முன்பு வரையில் அமைச்சர்களுக்கு எதிராக செய்தி வெளியிடாமல், ஜெயா டிவி அமைதியாகத்தான் இருந்தது. தினகரனை நீக்கிய பிறகுதான் வலுவாகக் களம் இறங்கினர். இதுவரையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எந்தச் செய்தியையும் அவர்கள் வெளியிடவில்லை. நேற்று அவருடைய கொடும்பாவி எரிப்பு செய்தியை ஜெயா டிவி வெளியிட்டது. ஆட்சியில் உள்ளவர்களோடு நேரடியாக மோதத் தயாராகிவிட்டனர். 

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெற்றிவேல் எம்.எல்.ஏ-விடம் பேசிய கொங்கு அமைச்சர் ஒருவர், ‘அந்தக் குடும்பத்திலேயே அந்தத் தம்பிதான் அமைதியானவர். எல்லோருமே அவர் மீது பாசம் வைத்துள்ளனர். கொஞ்ச காலம் ஜெயா டிவியை அடக்கி வாசிக்கச் சொல்லுங்கள்’ எனக் கூறியிருக்கிறார். இதை பெங்களூரு சென்றபோது சசிகலாவிடமும் கூறியிருக்கிறார் வெற்றிவேல். இதைக் கேட்ட விவேக், ‘ என் மீதுள்ள பாசத்தில் அவர் கூறவில்லை. என்னை அவர் மிரட்டியிருக்கிறார். இதுகூடவா உங்களுக்குத் தெரியவில்லை? இந்த மிரட்டல் எல்லாம் என்னிடம் செல்லுபடியாகாது எனக் கூறுங்கள்’ என சிரித்துக்கொண்டே கூறியிருக்கிறார். நேற்று எடப்பாடி பழனிசாமி போட்ட தீர்மானத்துக்கு எதிராக நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்தார் விவேக். ‘லீகல் நோட்டீஸ் இப்போதைக்கு அனுப்ப வேண்டாம்’ எனக் குடும்ப உறவுகள் கூறியுள்ளனர். ஜெயலலிதாவே ஒருமுறை பேசும்போது, ‘ஜெயா டிவி என்பது அ.தி.மு.க-வின் ஆதரவு சேனல்’ எனக் கூறியிருக்கிறார்.

ஜெயா டிவியின் பங்குகளில் பெரும்பகுதி சசிகலாவிடம் இருக்கிறது. ஆட்சியில் உள்ளவர்களால் அதைக் கைப்பற்ற முடியாது. எனவேதான், விவேக்கை குறிவைத்து காய்களை நகர்த்தி வருகின்றனர். இரண்டாயிரம் கோடி மதிப்புள்ள ஜாஸ் சினிமாஸின் வரவு செலவை குறிவைக்கத் தொடங்கியுள்ளனர். என்னதான் கணக்கு வழக்குகளைச் சரியாகக் கையாண்டாலும், சிறிய சிறிய விஷயங்களை எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும். மீண்டும் தினகரன் மீது கை வைத்தால், அரசியல் பழிவாங்கல் என்பது தெரிந்துவிடும். அதனால்தான் விவேக்கை குறிவைக்கிறார்கள். ராமமோகன ராவ் பெயரைக் கெடுத்ததுபோல், விவேக் ஜெயராமனையும் அவமானப்படுத்தும் முடிவில் இருக்கிறார்கள். ஒருவாரமாக, ரெய்டு நடக்கப் போகிறது. ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் சென்னை வந்துள்ளனர் எனப் பீதியை கிளப்பி வருகின்றனர். ‘என்ன நடந்தாலும் கவலையில்லை' என்ற மனநிலையில் இருக்கிறார் விவேக்” என்றார் விரிவாக. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!