கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு யாருக்கு?

அ.தி.மு.க-வில் தற்போது அணிகள் இணைந்துவிட்டாலும், தினகரன் பிரிவினர் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டனர். இந்த நிலையில், அ.தி.மு.க-வின் தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ-க்கள் தங்களது நிலைகுறித்து ஆலோசனைசெய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய தனியரசு, "கடந்த 26 வருடங்களாகச் சிறையிலிருந்த பேரறிவாளனை பரோலில் விடுவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அதற்காக, இன்று தமிழக முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளோம். தற்போது, அ.தி.மு.க பிரிந்துள்ளது. இதெல்லாம் பா.ஜ.க-வின் சூழ்ச்சி என்பது அனைவருக்கும் தெரியும். அந்தச் சூழ்ச்சிக்கு யாரும் இரையாகிடக்கூடாது. யாருக்கு ஆதரவு என்பது குறித்து நாங்கள் ஆலோசிக்கவில்லை. ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால், அதுகுறித்து முடிவு செய்வோம். முதல்வர், தினகரன் அணியை அழைத்துப் பேச வேண்டும்" என்றார்.  

மனித நேய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தமிமுன் அன்சாரி பேசுகையில், "அ.தி.மு.க மூலம் பா.ஜ.க திராவிடக் கட்சிகளை அழிக்க முயல்கிறது. அதற்குத் துணை போகக்கூடாது. ஆட்சியைச் சுமுகமாக நடத்த தினகரன் தரப்பை அழைத்துப் பேச வேண்டும்" என்றார்.

அதன் பின்னர் பேசிய நடிகர் கருணாஸ், "கடந்த தேர்தலில் அம்மா எனக்கு வாய்ப்பளித்தார். அதற்குக் காரணம் சசிகலாதான். வெறும்
10 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருந்த பன்னீர்செல்வத்தை அழைத்துப் பேசிய நீங்கள் 20 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருக்கும் தினகரனை ஏன் அழைத்துப் பேசக்கூடாது. விரைவில் பேசி நல்ல முடிவுக்கு வருவார்கள் என்று நம்புகிறோம். பா.ஜ.க-வின் சூழ்ச்சிக்குத் தமிழகம் இரையாகிடக்கூடாது. கட்சியிலிருந்து சசிகலாவை நீக்கினால், அது பின்விளைவை ஏற்படுத்தும்" என்றார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!