வெளியிடப்பட்ட நேரம்: 14:57 (29/08/2017)

கடைசி தொடர்பு:15:44 (29/08/2017)

‘அ.தி.மு.க-வின் புதிய அத்தியாயமாகுமா செப்டம்பர் 12?’ - அடுத்த அரசியல் சதுரங்க வேட்டை #VikatanExclusive

 சசிகலா, தினகரன்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, பொதுக்குழுவில் பொதுச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்ட சசிகலாவின் பதவி, அதே பொதுக்குழுவால் செப்டம்பர் 12-ல் பறிக்கப்பட உள்ளது. பொதுக்குழுவில், அ.தி.மு.க-வின் புதிய அத்தியாயம் எழுதப்படவிருக்கிறது.

சசிகலா குடும்பத்தினருக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்தப் போராட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. செப்டம்பர் 12-ம் தேதி, பொதுக்குழுவில் சசிகலா, தினகரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதற்கு எப்படிப் பதிலடி கொடுக்கலாம் என்ற தீவிர ஆலோசனையில் தினகரன் ஈடுபட்டுள்ளார். சட்டரீதியாக எதிர்கொள்வது குறித்தும், பொதுக்குழுவில் சசிகலாவுக்கு எதிராக எடுக்கப்படும் முடிவுகளை முறியடிக்கவும் வியூகம் அமைத்துவருகிறார்.

ஏற்கெனவே, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கட்சிப் பதவியிலிருந்து நீக்கி, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் தினகரன். அடுத்து, முதல்வரை மாற்ற வேண்டும், கட்சிக்குத் துரோகம்செய்த ஓ.பன்னீர்செல்வத்துக்குக் கொடுக்கப்பட்ட துணை முதல்வர் பதவி மற்றும் கட்சிப்பதவி ஆகியவை பறிக்கப்பட வேண்டும் என்ற இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர், தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள்.

தினகரனின் நடவடிக்கைகளுக்குக் கடிவாளம் போட, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தீவிர ஆலோசனையில் உள்ளனர். டெல்லியிலிருந்து கிடைக்கும் சிக்னலுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர். தேர்தல் ஆணையமே, சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி செல்லாது என்று அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

இதையொட்டி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் டெல்லியில் முகாமிட்டு, தேர்தல் ஆணைய அதிகாரிகளின் அனுமதிக்காகக் காத்திருக்கின்றனர். தேர்தல் ஆணையம்மூலம் தங்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவிடாமல் தடுக்க, தினகரன் தரப்பும் டெல்லிக்குச் சென்று மனு கொடுத்துள்ளது. இது, தற்காலிக நடவடிக்கை என்றாலும், பொதுக்குழுவில் சசிகலாவுக்கு எதிராக முடிவு எடுக்கவிடாமல் தடுக்க தினகரன் தரப்பு முழுவீச்சில் களமிறங்கியுள்ளது.

பொதுக்குழு, செயற்குழுவில் பங்கேற்க உள்ள நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள தினகரன் தரப்பு, முக்கிய வாக்குறுதிகளையும் கொடுத்துவருகிறது. இந்தப் பொறுப்பு, தினகரனின் நம்பிக்கையைப் பெற்ற இரண்டு நிர்வாகிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை ரகசியமாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாக உள்வட்டாரங்கள் தெரிவித்தன.

டெல்லியில், தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துவிட்டுப் பேசிய தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, 'இரட்டை இலைச் சின்னத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் கொடுக்கக்கூடாது' என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.க-வின் இரட்டை இலைச் சின்னத்துக்கு சசிகலாவும் ஓ.பன்னீர்செல்வமும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் உரிமை கோரியதால், சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. தற்போது, அ.தி.மு.க-வில் அ.தி.மு.க. அம்மா அணியும், புரட்சித் தலைவி அம்மா அணியும் இணைந்துவிட்டதால், இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் அமைச்சர்களும் எம்.பி-க்களும் ஈடுபட்டுள்ளனர். இதற்கு செக் வைக்கத் திட்டமிட்ட தினகரன், தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளார். இதனால், இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுப்பதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் சசிகலா, தினகரனுக்கு எதிராக தீர்மானத்தைக் கொண்டுவர எடப்பாடி பழனிசாமி தரப்பும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் ஆர்வம் காட்டியபோது, மூன்று அமைச்சர்கள் மற்றும் சில எம்.எல்.ஏ-க்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனால், கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. சசிகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முன் எதிர்ப்பு தெரிவித்தவர்களை சமரசம் செய்ய, எடப்பாடி பழனிசாமி தரப்பும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் முடிவுசெய்துள்ளது. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தினகரன்


இதற்கிடையில், அ.தி.மு.க-வின் விதிப்படி பொதுக்குழுவுக்கே இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது. அதன்அடிப்படையிலேயே சசிகலாவை பொதுச் செயலாளராக்கிய அதே பொதுக்குழு, அவரை நீக்கவும் தயாராகிவிட்டது. சசிகலாவை, பதவியிலிருந்து நீக்கிய தீர்மான நகலை தேர்தல் ஆணையத்திடம் கொடுப்பதோடு, புதிய நிர்வாகிகள் பட்டியலும் கொடுக்கப்பட உள்ளது. அதற்குள் இரட்டை இலைச் சின்னம் கைக்கு வந்துவிட்டால், தொண்டர்களைச் சிதறவிடாமல் சசிகலாவுக்கு எதிரான நடவடிக்கையை எந்தவித தடங்கலும் இல்லாமல் எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உள்ளது.

புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களில் சிலருக்கு, எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து தூது விடப்பட்டுள்ளது. அதில், சிலரை அமைச்சராக்குவதாகவும் வாக்குறுதி அளிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால், புதுச்சேரி ரிசார்ட்டில் எம்.எல்.ஏ-க்களில் சிலர் விரைவில் முதல்வரைச் சந்திக்கலாம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால், இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், தினகரனுக்கு ஆல்இன் ஆளாக இருந்த தமிழக டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துள்ளார். அப்போது அவர், கையில் ஒரு கடிதத்தையும் கொண்டுசென்றுள்ளார். அதைப் படித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சில அறிவுரைகளைச் சொல்லியனுப்பியிருக்கிறார். இதனால், தளவாய் சுந்தரம், அணி மாற வாய்ப்புள்ளதாகவும் தகவல் உள்ளது. ஆனால், இதை தளவாய் சுந்தரத்தின் ஆதரவாளர்கள் மறுத்துள்ளனர். தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் அரசியல் சதுரங்க வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலாவுக்கு எதிராக செப்டம்பர் 12-ம் தேதி அ.தி.மு.க-வில் புதிய அத்தியாயம் எழுதப்பட உள்ளது. அதை ஒன்றரைக் கோடி தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


டிரெண்டிங் @ விகடன்