வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (29/08/2017)

கடைசி தொடர்பு:16:11 (29/08/2017)

தினகரனுக்கு எதிராக சிரிப்பு போராட்டம் நடத்திய எடப்பாடி ஆதரவாளர்கள்!

கடலூர் மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க-வினர் டி.டி.வி.தினகரன் உருவப்படத்தைச் செருப்பால் அடித்து, கொடும்பாவி எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க., டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என மூன்று அணிகளாக உடைந்தது. சமீபத்தில், எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைந்துவிட்டன. அதன்பிறகு, அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தமிழகம் முழுவதும் கட்சி முக்கியப் பொறுப்பிலிருந்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை நீக்கிவிட்டு, தனது ஆதரவாளர்களைப் பொறுப்பாளராக நியமித்துவருகிறார். 


 அதன்படி, கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத்தை கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வனையும், எம்.பி.அருண்மொழித்தேவனை மேற்கு மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக பாலமுருகனையும் நியமித்தார். இதற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து, அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் எம்.பி.அருண்மொழித்தேவன் ஆதரவாளர்கள் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி என மாவட்டம் முழுவதும் டி.டி.வி.தினகரன் உருவப்படத்தைச் செருப்பால் அடித்து, கொடும்பாவி எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மாவட்டம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதனிடையே அ.தி.மு.கவில் உறுப்பினரே இல்லாத டி.டி.வி.தினகரன், கட்சியில் சிலரை நீக்குவதாக தினம் தினம் அறிவிப்பு வெளியிட்டு வரும் அவரது செயலை கண்டிக்கும் விதமாக கடலூர் கிழக்கு - மேற்கு மாவட்டங்களில் சுமார் 50 இடங்களில் சிரிப்பு போராட்டம் நடத்தினர். இதில் சிதம்பரத்தில் MLA பாண்டியன் கலந்து கொண்டார்.