குர்மீத்துக்கு எதிராக மோடி தொகுதியில் கொந்தளித்த சாமியார்கள்!

கார்ப்பரேட் சாமியார்கள் பணம், செல்வாக்கு, அதிகாரப் பலத்தில் மிதப்பவர்கள். சாமி என்ற பெயரில் சொத்துக்குவிப்பு, எதிர்ப்பவர்களை கொலை செய்வது, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவது, அரசியலில் மூக்கை நுழைப்பது, பிற மதத்தவரை அவமதிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதுதான் வாடிக்கையாக இருக்கிறது.  

குர்மீத்துக்கு எதிராக போராடிய சாதுக்கள்

தமிழகத்தில் ஆதீனங்கள் ஓரளவுக்குச் சிறப்பாகச் செயல்பட்டு வந்தாலும் சில ஆதீனங்கள் அரசியல் தலைவர்களுடன் நெருக்கமாக இருப்பது உண்டு.  மதுரை ஆதீனம் அதிகாரத்தில் இருப்பவர்களுடன் நெருங்கிப் பழகுவார். ஜெயலலிதா இறப்புக்குப் பின்தான், அவரின் அரசியல் நடவடிக்கை குறைந்துள்ளது. அ.தி.மு.க-வில் நிலவி வரும் குழப்பங்கள் அவரைக் குழம்ப வைத்து விட்டது போலும். குன்றக்குடி ஆதீனம் போன்று மக்கள் சேவையே மகேசன் சேவையாக வாழ்பவர்களும் உண்டு.  

நித்யானந்தா போல மின்னல் வேகத்தில் வளர்ந்து வீழ்ந்த கார்ப்பரேட் சாமியார்களும் உண்டு. மேற்குத் தொடர்ச்சி மலை அடியில் ஆசிரமம் அமைத்து அசைக்க முடியாமல் வலம் வரும் சாமியார்களும் இருக்கிறார்கள். தமிழகத்துச் சாமியார்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டவர்தான்  ஹரியானா சாமியார் குர்மீத்சிங், நம்ம ஊர் சாமியாரெல்லாம் இவர் முன் ஒன்றுமே கிடையாது. இவர்  நடித்த 'மெசேஞ்சர் ஆஃப் காட்'  பார்த்தாலே அலறி விடுவோம். மெஸ்செஞ்சர் ஆஃப் காடுக்கு ஆப்பு வைத்து விட்டது மெசேஸ் ஃப்ரம் ஜஸ்டிஸ் என்று இப்போது கேலி சித்திரங்கள் வெளியிடப்படுகின்றன. 

இதுவரை, பல சாமியார்கள் மீது பல்வேறுக் குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் பிரதமர் தொகுதியான வாரணாசியில் உள்ள சாதுக்கள் எதையும் கண்டுகொள்வதில்லை. ராமன் ஆண்டால் என்ன... ராவணன் ஆண்டால் என்ன என்பதுதான் சாதுக்களின் போக்கு. தற்போது, முதன்முறையாக சாமியார் ஒருவரை எதிர்த்து சாதுக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வாரணாசியில் திரண்ட சாதுக்கள்,  குர்மீத்துக்கு எதிராகக் கோஷமிட்டனர். குர்மீத்தை தூக்கிலிட வேண்டும் என்ற பதாகைகளுடன்  அவருக்கு எதிராக கோஷமிட்டனர். 

போராட்டத்தில் பங்கேற்ற சாது துனி பாபா ''சாமியார்கள் ஆடம்பரத்தை விடுத்து,. எளிமையான வாழ்க்கையை வாழ வேண்டும். இவரைப் போன்றவர்கள் மக்களுக்குத் தவறான முன்னுதாரணம் '' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!