Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தினகரன் ஆதரவாளர்களைச் சிறைக்கு அனுப்பிய கொறடா! கொந்தளிப்பில் அரியலூர்!

எடப்பாடி பழனிசாமி, தினகரன் இவர்களில் யார் அ.தி.மு.க-வை கைப்பற்றப்போவது என்ற போட்டி உச்சத்தைத் தொட்டுக்கொண்டிருக்கும் நிலையில், தினகரன் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கட்சி நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்துக்கொண்டிருக்கிறார்.

       

இதைக் கண்டித்து ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆதரவாளர்கள் தினகரனின் கொடும்பாவிகளைக் கொளுத்திவருகிறார்கள். பதிலுக்கு தினகரன் ஆதரவாளர்களும் தஞ்சை உள்ளிட்ட பல இடங்களில் முதல்வரின் கொடும்பாவிகளைக் கொளுத்திவருகிறார்கள். ஆனால், அவர்கள் கைது செய்யப்படவில்லை. அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் உத்தரவால் ஐந்து பேர்களைக் கைதுசெய்து 15 நாள் ரிமாண்ட் செய்திருக்கிறது காவல்துறை.

                          

"இதை சும்மா விடப்போவதில்லை" என்று எச்சரித்திருக்கிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள். இதனால் பதற்றமான சூழ்நிலை அரியலூரில் நிலவுகிறது.

                                

கைது செய்யப்பட்டு இரவு நேரத்தில் நீதிபதியின் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்ட தினகரன் அணியைச் சேர்ந்த கோகுலிடம் பேசினோம். "தமிழ்நாட்டில் அம்மா ஒருவர்தான் இல்லை. இங்கு என்னென்ன கூத்து நடக்கிறது என்று பாருங்கள். இங்கு தடியெடுத்தவரெல்லாம் முதல்வர்னு சொல்கிற கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது தமிழகம். அம்மா இருக்கும்போது இரும்புப் பெண்மணியாக வலம்வந்ததோடு, மத்தியில் ஆளும் கட்சிகள் அம்மாவிடம் கேட்டுவிட்டு உள்ளே நுழைய முடியும் என்ற கட்டுப்கோப்பாக ஆட்சியை நடத்திவந்தார். அம்மா இறந்த பிறகு ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் பி.ஜே.பி-யிடம் ஒவ்வொன்றையும் கேட்டுவிட்டுதான் இங்கு செயல்படுத்துகிறார்கள். அப்துல் கலாம் நினைவு மண்டபம் திறக்க வந்த மோடியை சந்தித்து அரை மணி நேரம் பேசுகிறார்  ஓ.பன்னீர்செல்வம்.

                      

பின்பு எடப்பாடியைத் தனியாகச் சந்திக்கிறார். பல மாதங்களாக எதிர்க்கட்சித் தலைவர், மோடியைச் சந்திக்க நேரம் கேட்கிறார். ஆனால், இன்றளவும் நேரம் கொடுக்கவில்லை. ஆனால், இவர்கள் இருவரையும் மாத்தி மாத்தி சந்தித்துக்கொண்டிருக்கிறார். அப்போ என்ன நடக்கிறது. அதேபோல் அம்மா இறந்த பிறகு, சின்னம்மா ஆளுநரைச் சந்திக்க நேரம் கேட்டபோது அவர் நேரமும் தரவில்லை; இங்கு வரவுமில்லை. ஆனால், இரு அணிகளும் இணைப்பு நடக்கும் முன்பே ஐந்து மணி நேரமாகக் காத்திருந்து இரு அணிகளையும் கைப்பிடித்து இணைத்துவிட்டுச் செல்கிறார். என்ன நடக்குது தமிழ்நாட்டில். இவர்கள் அ.தி.மு.க என்று சொல்வதைவிட பி.ஜே.பி என்று சொல்லிவிட்டு ஆட்சியை நடத்தலாமே.

மக்கள் தண்ணியில்லாமல் தவித்தபோது ஒரு கிணற்றையே பொதுமக்களுக்கு தர மறுத்தவர் துணைமுதல்வர். கோடிக்கணக்கில் சொத்து சேர்த்ததோடு இடத்து பிரச்னையிலும் சிக்கியிருப்பவர் முதல்வர். பணம், பதவி ஆசைகளுக்காக அம்மாவின் அரசைக் கூறுபோட்டு விற்றுக்கொண்டிருக்கிறார்கள். அம்மாவின் ஆட்சி பி.ஜே.பி பக்கம் போய்விடக் கூடாது என்பதற்காக இரவு பகலாக உழைத்துக்கொண்டிருக்கிறார் தினகரன். அவரது கொடும்பாவிகளை இந்தக் கயவர்கள் கொளுத்துகிறார்கள். நான் அம்மாவின் உண்மைத்தொண்டன் என்பதால்தான் இவர்களின் கொடும்பாவியைக் கொளுத்தினேன்.பல மாவட்டங்களில் எடப்பாடி, ஓ.பி.எஸ் கொடும்பாவிகளைக் கொளுத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை.

              

ஆனால், கொறடா சொன்னார் என்ற ஒரே காரணத்துக்காக எங்களைக் கைது செய்திருக்கிறார்கள். எங்களுக்கு கொறடா ஒரு பொருட்டே இல்லை. 15 நாள்கள் இல்லை 500 நாள்கள் சிறையில் அடைத்தாலும் கட்சியைக் காப்பாற்ற இருக்கும் தினகரனுக்காக சிறைக்குச் செல்கிறேன் என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது" என்று ஆவேசத்துடன் முடித்தார்.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement