விலையேறிய வைக்கோல்... விலையாகும் மாடுகள்... வேதனையில் விவசாயிகள்! | Nagai Farmers unable to feed their cattle

வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (29/08/2017)

கடைசி தொடர்பு:12:15 (01/09/2017)

விலையேறிய வைக்கோல்... விலையாகும் மாடுகள்... வேதனையில் விவசாயிகள்!

அதிக விலைக்கு விற்கப்படும் வைக்கோலை வாங்கி மாடுகளுக்கு உணவாகக் கொடுக்க முடியாததால், நாகை மாவட்டத்தில் தாங்கள் வளர்க்கும் மாடுகளைச் சந்தையில் கொண்டுவந்து விற்கும் கொடுமை நிகழ்ந்து வருகிறது.  

காவிரியில் தண்ணீர் வராததால் நிலத்தடிநீரை நம்பி போர்வெல் வைத்திருக்கும் விவசாயிகள் மட்டும்தான் குறுவை சாகுபடி செய்கிறார்கள். இதனால், குறுவை சாகுபடி பரப்பு பெருமளவு குறைந்துவிட்டது. இதில் கிடைக்கும் வைக்கோலை மாட்டுப்பண்ணை வைத்திருக்கும் உரிமையாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு அறுவடைக்கு முன்னே முன்பணம் கொடுத்து நில உரிமையாளரிடமிருந்து வைக்கோலை மொத்தமாக வாங்கிச் சென்றுவிடுகிறார்கள்.

இன்னும் சிலர், அதிக விலைகொடுத்து வைக்கோலை வாங்கி கேரளாவுக்கு ஏற்றுமதி செய்துவிடுகிறார்கள். இதனால் வைக்கோல் தட்டுப்பாடும் விலையும் எகிறிவிட்டது. இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில வியாபாரிகள் ஆந்திராவிலிருந்து வைக்கோலை வாங்கிவந்து, சிறிய வைக்கோல்கட்டு ஒன்றை ரூ.400-க்கு விற்பனை செய்கிறார்கள். விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலையில்லாத காரணத்தால், இவ்வளவு அதிக விலைகொடுத்து வைக்கோல் வாங்கி மாடுகளுக்குப் போட முடியாத நிலையிருக்கிறது.  

இதுபோன்ற வைக்கோல் தட்டுப்பாடு இருப்பதை தமிழக அரசு உணர்ந்து நாகை மாவட்டத்துக்கு மட்டும் ரூ.82 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து வைக்கோலை வாங்கி கால்நடைத்துறை டெப்போ மூலம் மாடு வளர்ப்போருக்கு மானிய விலையில் வழங்க ஏற்பாடு செய்திருக்கிறது.  ஆனால், அதிலும் ஊழல். மானிய விலையில் வைக்கோல் வழங்க கான்ட்ராக்ட் எடுத்தவர்கள், ஒரு டிராக்டரில் வைக்கோலை ஏற்றிவந்து ஒவ்வொரு டெப்போ முன்னாலும் வைத்து விவசாயிகளுக்கு வைக்கோலை வழங்குவதுபோல் புகைப்படம் எடுப்பதோடு முடித்துக்கொண்டார்கள். இதனால் இத்திட்டம் பயனாளிகளுக்கு பயன்படவில்லை.  

விவசாயம் பாதித்து தங்கள் வாழ்வாதாரத்தை நடத்துவதற்கே போராடும் விவசாயிகள், தங்கள் கண்முன்னே தாங்கள் வளர்க்கும் மாடுகள் பசியால் துடிப்பதைக் கண்டு தாங்கமுடியாத சோகத்தில்தான் சந்தைக்குக் கொண்டுவந்து மாடுகளை விற்கிறார்கள். வேதாரண்யம் அருகேயுள்ள செண்பகராயநல்லூரில் சனிக்கிழமை தோறும் நடைபெறும் மாட்டுச் சந்தையில், கடந்த சில வாரங்களாகத் திடீரென அதிகளவில் மாடுகள் விற்பனைக்கு வருவதால் மாடுகளை வாங்கும் தரகர்கள் ஒருசில மாடுகளைத் தவிர மற்றவற்றை கேரளாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக அடிமாட்டு விலைக்கே வாங்குகின்றனர். ஆக, நியாயமாகக் கிடைக்க வேண்டிய விலையும் கிடைக்கவில்லை. வறுமையால் தாங்கள் ஆசையுடன் வளர்த்த கால்நடைகளை விற்பனை செய்யும் அவலம் தொடர்வது வேதனைதான்.  

 


[X] Close

[X] Close