வெளியிடப்பட்ட நேரம்: 16:31 (29/08/2017)

கடைசி தொடர்பு:16:43 (29/08/2017)

துணை முதல்வர் பதவி! ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு

துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்துக்குப் பதவிப்பிரமாணம் செய்துவைத்த ஆளுநரின் நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்பு விழா


அ.தி.மு.க அணிகள் இணைப்புக்குப் பின்னர், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தின் துணை முதலமைச்சராக கடந்த 21-ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். கிண்டி ராஜ்பவனில் அவருக்குப் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

இந்தநிலையில், தமிழகத்தில் துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வத்துக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்ததைச் செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் இளங்கோவன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ''துணை முதலமைச்சர் பதவி என்பது நியமனப் பதவியே. அந்தப் பதவிக்கு ஆளுநரிடம் ஒருவரை பரிந்துரை செய்ய முடியுமே தவிர, அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது. எனவே, ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததை ரத்துசெய்ய வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது. தனி நீதிபதி முன்னிலையில் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.