பார்வையற்ற 10 நபருக்கு பசுமை வீடு வழங்கும் பலே திட்டம் ! | Madurai collector received blind people petition for own house

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (29/08/2017)

கடைசி தொடர்பு:19:18 (29/08/2017)

பார்வையற்ற 10 நபருக்கு பசுமை வீடு வழங்கும் பலே திட்டம் !

பிரதமர் மோடியால் ஏற்படுத்தப்பட்ட  ’பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா’ (எல்லோருக்கும் வீடு)  திட்டத்தை அடிப்படையாகக்கொண்டு அண்மையில் மதுரையில்  நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பார்வையற்ற நல சங்கங்கள் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது.

பார்வையற்ற மக்களுக்காக சக்திமங்கலம் கிராமத்தில் இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த இடத்தில் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் வீடு கட்ட மானியம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை உடனடியாகப் பரிசீலித்த மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், முதல்கட்டமாக 10 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவருக்கும் புதிய இல்லம் கட்டுவதற்காக 2,40,450 ரூபாய்க்கான காசோலையை இன்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர் பேசும்போது, மானியம் வழங்கப்பட்ட 10 நபர்களும் தங்களது குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களை முகவரி மாற்றம் செய்ய வேண்டும் எனவும் அவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட பிறகு இவர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 90 திறன் சாரா மனித சக்தி நாள்களுக்கான தொகை மற்றும் கழிப்பறை பட்டியலுக்கான நிதி ஆகியவையும் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்ட 10 மாற்றுத்திறனாளிகளிடமும் இந்த வீட்டைத் தங்களுடைய பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்துவேன் என்று உறுதிமொழியும் பெறப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நவநீதகிருஷ்ணன், உதவி இயக்குநர் லட்சுமி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வராஜ், கிழக்கு வட்டார ஆட்சி அலுவலர்கள் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்த கொண்டனர்.