நல்லூர் தாக்குதல்: தமிழக அரசு தலையிட சி.பி.எம் வலியுறுத்தல்

காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியான தெற்கு காலனியில் 50 தலித் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி அன்று மாலையில் இப்பகுதி மக்கள் ஒரு விநாயகர் சிலையை அமைத்து வழிபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது கிராமத்தில் வாழும் சாதி இந்துக் குடும்பங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் வேகமாகச் சென்று வழிபாடு நடத்திக்கொண்டிருந்த தலித் மக்களை இடித்துக்கொண்டு சென்றனர். அப்பகுதியில் இருந்த பெரியவர்கள் அவ்வாறு இடித்துக்கொண்டு சென்றவர்களைக் கண்டித்து அனுப்பியுள்ளனர். இதையடுத்து, அன்று இரவு சுமார் 10 மணியளவில் சாதி இந்துக் குடியிருப்புப் பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்டவர்களைக்கொண்ட கும்பல், தெற்கு காலனி தலித் மக்கள் பகுதிக்குள் நுழைந்து மின்சார இணைப்பை துண்டித்துவிட்டு கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

நல்லூரில் எரிந்து நாசமான வீடு

மேலும், தலித் மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து பொருள்களை சேதப்படுத்தியுள்ளனர். ஒரு வீட்டில் திருமணத்துக்காக சேமித்து வைத்திருந்த தங்க நகைகள், ரொக்கப்பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. பல குடிசைகளைத் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். சில வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். சாலையோரம் நின்றுகொண்டிருந்த ஆட்டோக்கள், இருசக்கர வானங்களையும் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். தலித் மக்கள் வழிபட்ட பிள்ளையார் சிலையையும் அடித்து நொறுக்கி சிதைத்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்தவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து, நல்லூரில் தலித் மக்கள் மீதான இக்கொடூரத் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டித்துள்ளது.

நல்லூரில் வைக்கிப்பட்டிருந்த விநாயகர் சிலை

அக்கட்சியின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக அரசும் காவல்துறையும் உடனடியாக நல்லூர் விஷயத்தில் தலையிட்டு வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவுசெய்து கைதுசெய்யுமாறும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி வழங்க வேண்டிய நிவாரணங்களை தாமதமின்றி வழங்கிடுமாறும், தலித் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் வலியுறுத்துகிறோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!