Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தவித்து நின்ற விவசாயக் குடும்பங்கள்.. கைகொடுத்த மாணவர்கள்!

farmers, விவசாயம்

வரலாறு காணாத வறட்சியை தமிழகம் சந்தித்திருக்கிறது. துளி நீர் இல்லாமல் வாடிய பயிர்களைப் பார்த்து கொத்துக் கொத்தாக செத்து விழுந்த விவசாயிகளின் மரண ஓலங்கள் அரசின் காதுகளுக்கு எட்டவேயில்லை. அரசு, கைகட்டி வேடிக்கை பார்த்தது ஒரு குற்றம் என்றால், ‘குடும்பப் பிரச்னையால் தற்கொலை செய்துகொண்டார்கள்’ எனப் பிறழ் சாட்சி அளித்து அவர்களின் மரணத்தையும் கொச்சைப்படுத்தியது உச்சகட்ட அவமானம்! ‘ஒரே நாளில் ஆறு விவசாயிகள் உயிரிழப்பு’ போன்ற செய்திகளை நாம் எளிதாகக் கடந்து போயிருப்போம். ஆனால், அவர்களை இழந்த குடும்பங்களின் துயரக்கதை உலகம் அறியாதது. பொருளாதாரத் தள்ளாட்டத்திலிருந்து கரையேற முடியாமல் தவித்து வரும் அவர்களுக்குக் கைகொடுக்க முன்வந்துள்ளார்கள் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் சிலர். 

வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு எந்த வகையிலாவது உதவ வேண்டும் என்ற விதை இவர்களுக்குள் விழுந்தபோது, பெரிய பொருளாதார உதவிகள் ஏதும் இவர்களுக்குக் கிடைத்துவிடவில்லை. தங்களின் முயற்சியையும், உழைப்பையும் மட்டும் கொட்டியிருக்கிறார்கள். அனஸ் முகமது, வினோத், சுதாகர், செல்வா, கணேஷ் ஆகிய மாணவர்கள் தங்களுடன் படித்துவரும் சக மாணவர்களிடம் விவசாயிகளின் பிரச்னையைக் கடந்த 3 மாதங்களாக எடுத்துச் சொல்லி பிரசாரம் செய்துவந்துள்ளனர். ஒரு குழுவாக உருவான இந்த மாணவர்கள் தங்களிடம் இருந்த 50, 100 ரூபாய்களைக் கொடுத்து நிதி சேர்த்திருக்கிறார்கள். 

farmers, விவசாயம்

மயிலாடுதுறை அருகில் உள்ள செம்பனார் கோயில் பகுதியில் வறட்சியின் காரணமாக இரண்டு விவசாயிகள் உயிர் இழந்ததையும், அவர்களின் குடும்பங்கள் வருமானம் இல்லாமல் தினசரி அடிப்படைச் செலவுகளுக்கே சிரமப்பட்டுவருகிறார்கள் என்பதையும் மாணவர்கள் குழுவில் உள்ள ஒருவர், தெரிவித்துள்ளார். உடனே, தங்கள் சேமிப்பில் இருந்த பணத்தை வைத்து அந்த இரண்டு குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கு உதவியாக தலா  ஒரு பசு மாடும், கன்றுக்குட்டியும் வாங்கித் தந்திருக்கிறார்கள். மேலும், அவர்களது குழந்தைகளின் படிப்புச் செலவு முழுவதையும் ஏற்பதாகவும் உறுதியளித்திருக்கின்றனர். இதனால், அந்தக் கிராமமே இவர்களைக் கொண்டாடி வருகிறது. 

"சமீபகாலத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கை 357. ஆனால், நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு அரசாங்கத்தின் உதவி கிடைத்திருப்பது 82 குடும்பங்களுக்கு மட்டுமே. அரசு உதவி கிடைக்காமல் தவிக்கும் மீதமுள்ள அத்தனைக்  குடும்பங்களுக்கும் உதவ வேண்டும் என்பதே எங்களின் இலக்கு" என்கிறார்கள் இந்த மாணவர்கள். 'தொடர்ந்து விவசாயிகளின் குடும்பங்களுக்கு உதவிகள் செய்யப்போவதாகவும், மற்றக் கல்லூரி மாணவர்களும் இதை ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு இந்தச் செயலை முன்னெடுக்க வேண்டும்' என்றும் இந்த மாணவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இதுபற்றி நம்மிடம் கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட மாணவர் அனஸ் முகமது, “கடந்த மூன்று மாதங்களாக தஞ்சாவூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், கும்பகோணம், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட விவசாயக் குடும்பங்களைச் சந்தித்தோம். அவர்களின் அன்றாட வாழ்க்கைச் சூழலை நேரில் பார்த்தபோது எங்களுக்கு நிறைய அதிர்ச்சி காத்திருந்தன. எங்கள் மனநிலையை முற்றிலும் மாற்றியது அந்தக் காட்சிகள். அவர்களின் பிரச்னையைக் கேட்டுவிட்டு வெறுமனே நகர்ந்துவிடத் தோணவில்லை. அதனால், நாங்கள் ஒன்று சேர்ந்து இதுமாதிரியான உதவிகள் செய்ய முன்வந்தோம். சென்னை போன்ற நகரங்களிலிருந்து வந்த மாணவர்களுக்குக் கிராமத்தின் சூழலே புதிதாக இருந்தது. அங்கு தங்கியிருந்து, வயல்களில் நாற்று நடுவது முதல் நெல் அறுப்பது வரையிலான வேலைகளைத் தெரிந்துகொண்டனர். விவசாயம் செய்ய எவ்வளவு சிரமப்படுகிறார்கள், ட்ராக்டர், பூச்சிக் கொல்லி, ரசாயன உரம், தண்ணீர், மின்சாரம் என எவ்வளவு செலவுகள் ஏற்படும், இதெல்லாம் போக எவ்வளவு தொகை லாபமாகக் கிடைக்கும் என்பதையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டனர்.

விவசாயம், farmers

விவசாயம் நஷ்டமடைய என்ன காரணம்? அரசுகள் ஏன் உதவவில்லை? வறட்சிக்கு அடிப்படைக் காரணம் என்ன? காவேரி நீர் வராதது மட்டும்தான் காரணமா? இல்லை தற்போதுள்ள விவசாய முறையும் அரசின் கொள்கைகளும் காரணமா? இந்த நிலை மாற என்ன வழி? இதுபோன்ற கேள்விகளை இந்தப் பயணத்துக்குப் பின்னர், எங்களுடன் வந்த மாணவர்கள் எழுப்பி வருகின்றனர்” என்றார்.

துயரத்தில் இருக்கும் விவசாயிகளுக்குக் கைகொடுக்க வந்த மாணவர்கள் இப்பொழுது பிரச்னையின் மூலக் காரணத்தையும், அதன் பின்னால் இருக்கும் அரசியலையும் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். சக மாணவர்களிடம் தாங்கள் பார்த்த விஷயங்களையும், அனுபவங்களையும் எடுத்துச் சொல்லி வருகின்றனர். மாணவர்களின் முயற்சிக்கு உறுதுணையாக, 'தமிழ்நாடு நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம்' செயலாற்றி வருகிறது. விவசாயிகளைக் காக்கத் தவறிய அரசாங்கங்களையும், அரசு நிவாரணத்தை உரியவர்களுக்குக் கொடுக்கக்கூட லஞ்சம் கேட்கும் சில அரசு அதிகாரிகளையும் வெட்கப்பட வைத்திருக்கிறார்கள் இந்த மாணவர்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement