Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“கப்பல்னா கேப்டன் வேணும்... பொதுக்குழு கூட்ட பொதுச்செயலாளர் வேணும்!” கலகல செந்தில் #HallOfShameADMK

செந்தில்

.தி.மு.க போன்ற ஒரு கட்டுக்கோப்பான கட்சி இந்தியாவில் கடந்த காலத்தில் இருந்ததில்லை. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரையிலும், இந்த அமைச்சர்கள் எல்லாம் பேசுவார்களா அல்லது பிறவியிலேயே பேசும் திறனை இழந்தவர்களா... என்று மருத்துவ சோதனைகள் மூலம்தான் கண்டறிந்திருக்க முடியும். அத்தனை அடக்கமாக உலா வந்தார்கள் அமைச்சர் பெருமக்கள். வானத்தைப் பார்த்து வணக்கம் வைத்து அடக்கத்துக்கு ஒரு புதுப் பொழிப்புரையே எழுதினார்கள் அக்கட்சியின் அமைச்சர்கள். 

திறமைகள் எத்தனையோ இருந்தும்கூட  தங்கள் கட்சியைக் கட்டுக்கோப்புடன் வைத்திருப்பதில், அண்ணாவும் கருணாநிதியும் அவ்வப்போது சறுக்கியதுண்டு. தி.மு.க-வில் இருந்துகொண்டே அக்கட்சியின் பொதுச்செயலாளரான அண்ணாவுக்கு எதிராகத் தீர்மானம் இயற்றினார் ஈ.வெ.கி சம்பத். 90-களின் முற்பகுதியில் கணிசமாக மாவட்டச் செயலாளர்களைத் தன்னோடு அழைத்துச்சென்று அடுத்த பல வருடங்களுக்கு கருணாநிதியின் தூக்கத்தைக் கெடுத்தவர் வைகோ. ஜெயலலிதா இந்த சவால்களை சந்தித்ததெல்லாம் கட்சியைக் கைப்பற்றும் வரையில்தான். கட்சி அவர் கட்டுப்பாட்டுக்கு வந்தபின் அ.தி.மு.க என்றால் ஜெயலலிதா, ஜெயலலிதா என்றால் அ.தி.மு.க என்றானது. அத்தனைக் கட்டுக்கோப்பு. அதை எதேச்சதிகாரம் என்றனர் எதிர்க்கட்சிகள். எந்த வார்த்தையில் அதைச் சொன்னாலும் இந்திய அரசியலில் காணமுடியாத கட்டுப்பாடு அது. 

இதெல்லாம் பழங்கதை இன்று. ஜெயலலிதா மறைந்த 2 மாதங்களுக்குள் அவிழ்த்துவிட்ட நெல்லிக்காய் மூட்டையைப்போல் ஆளுக்கொரு திசையில் அக்கட்சியின் தலைவர்கள் அரசியல் செய்துவருகின்றனர். சசிகலா - ஓ.பி.எஸ் அணி என முதல் அணி அக்கட்சியில் உருவானது. பின்னர் அதுவே ஓ.பி.எஸ் - எடப்பாடி என்றானது. இப்போது எடப்பாடியும் ஓ.பன்னீர்செல்வமும் புது அணியாகக் கைகோத்துக்கொண்டு தினகரன் - சசிகலாவுக்கு எதிராகக் கச்சை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். எடப்பாடியை கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கி உத்தரவிடுகிறார் தினகரன். தினகரன் துணைப்பொதுச்செயலாளரே அல்ல என புன்னகைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. மகன்களைப் பிரித்துவைத்த பக்கத்து வீட்டுக்காரனைத் திட்டித்தீர்க்கும் தகப்பனைப்போல், பி.ஜே.பி-யைக் கவிதைகளாலும் கட்டுரைகளாலும் குதறிப் பழித் தீர்க்கிறது கட்சிப் பத்திரிகையான நமது எம்.ஜி.ஆர். 

சசிகலா

கலைஞர் டி.வி-யே சொல்லாமல் விட்ட இந்த ஆட்சியின் அலங்கோலங்களை ஜெயா டி.வி மணிக்கு ஒருமுறை பட்டியலிடுகிறது. இந்த விசித்திரங்களே தங்கள் விதி என ஒருகையில் எம்.ஜி.ஆர் புகைப்படத்தையும் மறுகையில் ஜெயலலிதா படத்தையும் வைத்தபடி அத்தனையையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் கட்சியின் உண்மையானத் தொண்டர்கள்.  

இரு அணிகளின் பதவி பறிப்பு அரசியலில் புதியதாக பதவி பெற்றவர்களில் நடிகர் செந்திலும் ஒருவர். நேற்று வரை முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா வகித்துவந்த அமைப்புச்செயலாளர் பொறுப்பை தனது தீவிர ஆதரவாளரான செந்திலுக்கு வழங்கியிருக்கிறார் தினகரன். இந்நிலையில், இன்றைய அ.தி.மு.க-வின் ஆடுபுலி ஆட்டம் குறித்து நடிகர் செந்திலிடம் பேசினோம். 

''அமைப்புச் செயலாளர்ங்கறது உங்களுக்குத்தான் பதவிண்ணே. அதனால் ஒரு காபியும் இரண்டு பஜ்ஜியும்தான் கிடைக்கும்'' என எடுத்த எடுப்பிலேயே இயல்பாகப் பேசத் தொடங்கினார் செந்தில். 

''இத்தனைப் பிரச்னையிலும் தினகரனையும் சசிகலாவையும் ஆதரிப்பது எதற்காக?''

''காசு, பணம், பொருள்னு எதையும் வாங்கிட்டு நான் தினகரனை ஆதரிக்கலை. காசு பணத்துக்கு ஆசைப்பட்டும் நான் இந்தக் கட்சிக்கு வரலை.  நான் புரட்சித்தலைவர் ரசிகன். அம்மாவின் தொண்டன். என் மகனோட கல்யாணத்தையே என் சொத்துகளை விற்றுத்தான் பண்ணினேன். இந்த கட்சியால நான் இழந்ததுதான் அதிகம். கட்சி பேரைப் பயன்படுத்தி ஒரு ரூபா கூட நான் தவறா சம்பாதிச்சதில்லை. அம்மாவும் புரட்சித்தலைவரும் கஷ்டப்பட்டு உருவாக்கி வளர்த்த கட்சி நல்லா இருக்கணும். எனக்குப் பிறகு 100 ஆண்டுகள் கழித்தும் அ.தி.மு.க ஆட்சியில் இருக்கும்னு அம்மா சொன்னது நிறைவேறணும்... அதுதான் என் ஆசை. அதுக்காகத்தான் நான் சசிகலா, தினகரனை ஆதரிக்கிறேன்.''

செந்தில்''இப்போது நடப்பதும் அ.தி.மு.க ஆட்சிதானே, தினகரன் வந்துதான் ஜெயலலிதாவின் ஆசையை நிறைவேற்றவேண்டுமா என்ன?''

''இது அம்மா ஆட்சியில்லை. அவர் பெயரில் நடக்கிற ஊழல் ஆட்சி. இந்த ஆட்சியைப்பற்றி கமல்ஹாசன், ஸ்டாலின் சொல்வதெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை. அமைச்சரவையில் அத்தனை அமைச்சர்களும் ஊழல் புரிந்து அம்மாவின் பெயருக்கு களங்கம் கற்பித்து வருகிறார்கள். 

கட்சியில் ஒரு சிறு தவறு நடந்தால் அது ஒன்றிய செயலாளர் அல்லது அமைச்சர் என யாராக இருந்தாலும் உடனடியாக அம்மா நடவடிக்கை எடுப்பார். ஆனால், எடப்பாடி ஆட்சியில் ஓர் அமைச்சர் வீட்டில் வெளிப்படையாக ரெய்டு நடந்து, வழக்கு பதிவான பின்னும் இன்றுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்படி நடவடிக்கை எடுத்தால், அந்த அமைச்சர் தன் ஊழல்களை வெட்டவெளிச்சமாக்கிவிடுவார் என்கிற பயம்தான் காரணம். 

அம்மாவின் ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அமைதி காத்து தன்னை வளர்த்த கட்சிக்குத் துரோகம் செய்தவர் ஓ.பி.எஸ். இதே பன்னீர்செல்வத்தால் ஊழல்வாதி என குற்றஞ்சாட்டப்பட்டவர் எடப்பாடி. இன்று  இரு துரோகிகளும் கைகோத்திருக்கிறார்கள் கட்சியைக் கைப்பற்றுவதற்காக. 

இவர்களது தலைமையில் கட்சியும் ஆட்சியும் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதால்தான் தினகரன் தலைமையேற்க வேண்டும் என்கிறோம். 

சசிகலா கட்சிப்பொறுப்பேற்றால், கட்சியை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வார். கட்சியிலும் ஆட்சியிலும் தவறு செய்ய விடமாட்டார். இதனால் தாங்கள் சம்பாதிக்கமுடியாது என்பதாலேயே அவர்களைத் தவிர்க்கிறார்கள். 

''தினகரனைவிட சீனியர்கள்தானே கட்சியில் பொறுப்பில் இருக்கிறார்கள்...''

''சீனியர்கள்தான். ஆனால் தலைவர்கள் அல்ல. அம்மாவின் ஆசைப்படி கட்சியைக் காப்பாற்ற இவர்களால் நிச்சயம் முடியாது. அம்மாவின் மரணத்துக்குப்பின் காணாமல் போயிருக்கவேண்டிய கட்சியைக் காப்பாற்றி ஆட்சியைத் தொடரச் செய்தவர் சின்னம்மா சசிகலாதான். அவர் இல்லையென்றால், கட்சி - ஆட்சி இரண்டையுமே இழந்திருப்போம். இப்படி கட்சியைக் கட்டிக்காத்தவரை கட்சியிலிருந்து நீக்குவது துரோகம் இல்லையா...? இவர்களாக வலியப்போய் அவரைப் பொதுச்செயலாளர் என அறிவித்துவிட்டு இன்று கட்சியிலிருந்து ஒதுங்கச்சொல்வதை ஏற்கமுடியாது. இரு அணிகளும் இணைந்து ஒற்றுமையாக இருக்க தான் கொஞ்சநாள் ஒதுங்கியிருப்பதாகச் சொன்னால், நீ நிரந்தரமாகப் போ என்றால் என்ன அர்த்தம்...?

அம்மா முகத்துக்குக் கிடைத்த வெற்றியில்தான் இவர்கள் பதவி சுகம் அனுபவிக்கிறார்கள். தங்களுக்கு மக்கள் ஆதரவு உள்ளதாக சொல்லிக்கொள்ளும் இவர்களுக்கு, 'ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கும் தைரியம் உண்டா?'

எடப்பாடி பழனிசாமி

''ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்ததற்காக ஒரு கட்சியையே உரிமை கொண்டாடுவது நியாயம்தானா என்கிறார்களே எதிரணியினர்?''

''சசிகலா, அம்மாவுக்குத் தோழி. ஆனால், வேலையாள் என்றே எல்லா மேடைகளிலும் கே.பி முனுசாமி சொல்லிவருகிறார். அரசு அதிகாரியாக இருந்த நடராஜன் தன் மனைவியை ஒரு வீட்டுக்கு வேலைக்கு அனுப்பியிருப்பாரா? கொஞ்சமாவது சிந்திக்கவேண்டாமா...? அம்மாவின் வெற்றிகளுக்கெல்லாம் காரணமாக இருந்தவர் சசிகலாதான். அம்மா, சேவல் சின்னத்தில் நின்றபோது  சந்தித்தப் பிரச்னைகளைக் கூடவே இருந்து சந்தித்தவர் சசிகலா.  அன்றைக்கு சிலர் அம்மாவை லாரி ஏற்றிக்கொல்ல முயன்றபோது உடனிருந்து அவரைப் பாதுகாத்தவர் சசிகலா. அப்போது இவர்கள் எல்லாம் எங்கே போயிருந்தார்கள்? இப்படி சோதனைகளில் எல்லாம் அம்மாவுக்கு அரணாக இருந்தவரை இன்றைக்கு வேண்டாம்னு சொல்றது அம்மாவுக்கே செய்ற துரோகம் இல்லியா... ஒண்ணா இருங்க தப்பில்லை. அதுக்காக சசிகலா குடும்பமே வேண்டாம்ங்கறது என்ன நியாயம்...?

செந்தில்

''தேர்தல் கமிஷன், 'சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி செல்லாது' என அறிவித்து கட்சியின் சின்னத்தை அவர்களுக்கு வழங்கினால் என்ன செய்வீர்கள்?''

''நிச்சயம் அப்படி நடக்காது. உண்மையில் அவர்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் போலியானவை. பல வருடங்களாகக் கட்சியில இருக்கிற என்னிடமே எந்தக் கையெழுத்தும் எதிலும் பெறவில்லை. மற்றவர்களிடம் இவர்கள் எப்படி கையெழுத்து வாங்கியிருப்பார்கள்? தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியது அத்தனையும் போலி ஆவணங்கள். சட்டப்படி கட்சியும் சின்னமும் எங்களுக்கே வரும். ஒருவேளை அப்படி இரட்டை இலை அவர்களுக்கு சென்றால் நான் கட்சியின் உறுப்பினர் கார்டை துாக்கிப்போட்டுட்டுப் போயிடுவேன்.''

''12ந் தேதி பொதுக்குழு கூட இருக்கிறதே...?''

''அதெப்படி கூட முடியும்? அம்மா, கட்சி விதிமுறைகளை கவனமாக எழுதி வெச்சிருக்காங்க. சட்டப்படி பொதுச்செயலாளர் இல்லாம பொதுக்குழு கூட்ட முடியாது. அப்பா -  அம்மா இல்லாம ஒரு பிள்ளைய ஸ்கூல்ல சேர்க்க முடியுமா...? கப்பல்னா கேப்டன் வேணும்; அதுபோல பொதுக்குழுவைக் கூட்ட பொதுச்செயலாளர் வேணும். எனவே, சசிகலா இல்லாமல் பொதுக்குழுவைக் கூட்ட முடியாது. அதை மீறினால் வரும் சட்டப்பிரச்னைகளை அவர்கள் சந்திக்கவேண்டியிருக்கும்.''

''அமைப்புச் செயலாளர் பதவி கிடைத்திருக்கிறதே... பிஸியாகிட்டீங்களா...?''

''நீங்க வேற...அம்மா இருந்தப்பவே சினிமா, டி.வி-ன்னு பல அமைப்புகள்ல என்னை உறுப்பினரா நியமிச்சிருக்காங்க... அதெல்லாமே அதிகாரம் இல்லாத டம்மி பதவிங்கதான். போற இடத்துல 2 பஜ்ஜியும் ஒரு டீ-யும்தான் கிடைக்கும். இத்தனை வருடமா கட்சியில இருக்கிறேன். இப்படி ஒரு பெரிய பதவியை தினகரன்தான் கொடுத்திருக்காரு. இப்படி கட்சி சீனியாரிட்டியை மதித்து பொறுப்பு தர்ற தினகரன் அ.தி.மு.க தலைமைக்கு வந்தாதான் எல்லோருக்கும் நல்லது. தொண்டர்களும் அதைத்தான் விரும்புறாங்க...''

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement