நீட் தேர்வில் வெற்றியடைந்த பின்னரும் மதுரை மாணவிக்கு வந்த சிக்கல்! | Even after passing NEET, this Madurai student had other problem

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (29/08/2017)

கடைசி தொடர்பு:08:50 (30/08/2017)

நீட் தேர்வில் வெற்றியடைந்த பின்னரும் மதுரை மாணவிக்கு வந்த சிக்கல்!

 

தமிழகம் முழுவதும் பல மாணவர்கள் ப்ளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும்  நீட் தேர்வில் தேர்ச்சிபெற முடியாததால், மருத்துவப் படிப்பைப் படிக்க முடியாமல் தவித்துவருகின்றனர் . இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த சுபிக்‌ஷா என்ற மாணவிக்கு நீட் தேர்வில் தேர்ச்சிபெற்றும் மருத்துவ சீட் கிடைக்காமல் கைநழுவிப்போய்விட்டது, இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மாணவி சுபிக்‌ஷா தாக்கல்செய்த மனுவில், 

"நான் ப்ளஸ் டூ தேர்ச்சிபெற்று, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நடப்பு ஆண்டின் நீட் தேர்வு எழுதினேன். நான், இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்தவர். ஆனால், நீட் தேர்வுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, என் அறியாமையால் ஓ.பி.சி பிரிவைத் தேர்வுசெய்வதற்குப் பதிலாக, யு.ஆர் எனப்படும் அன் ரிசர்வ்டு காலத்தைத் தேர்வுசெய்துவிட்டேன். நான் இதர பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான ஓ.பி.சி சான்றிதழை விண்ணப்பத்துடன் இணைத்திருந்தேன். நீட் தேர்வு முடிவுகள் வெளியானதில் கட்-ஆஃப் மதிப்பெண் 108 பெற்று, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங்கிற்குத் தகுதி உடையவரானேன். ஆனால், கவுன்சலிங்கிற்கான தகுதிப் பட்டியலில் ஓ.பி.சி பிரிவில் எனது பெயரில்லை. ஏன் என ஆய்வுசெய்துபார்த்ததில், நான் விண்ணப்பிக்கும் யு.ஆர் பிரிவைத் தேர்வுசெய்ததே காரணம் எனத் தெரியவந்தது. விண்ணப்பிக்கும்போது நான் அறியாமையால் செய்த தவற்றை மன்னித்து, என்னை ஓ.பி.சி பிரிவில் மருத்துவக் கவுன்சலிங்கிற்கு அனுமதிக்க உத்தரவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்'' என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், மருத்துவ மாணவர் தேர்வுக் குழுவின் மருத்துவக் கல்வி இயக்குநர், மனுதாரரிடம் உரிய ஆவணங்களைப் பெற்று, ஓ.பி.சி பிரிவில் மனுதாரரை மருத்துவக் கவுன்சலிங்கில் அனுமதிப்பதற்காக பரிசீலித்து முடிவு எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.


[X] Close

[X] Close