வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (29/08/2017)

கடைசி தொடர்பு:08:34 (30/08/2017)

தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாகிறாரா மனோஜ் பாண்டியன்?

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக முத்துக்குமாரசாமி கடந்தாண்டு ஆளுநரால் நியமனம் செய்யப்பட்டார். தலைமை வழக்கறிஞர் பதவிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அவர் தனது பதவியை திடீர் என இன்று ராஜினாமா செய்துள்ளார். உடல்நலக்  குறைவினால் தன்னால் தொடர்ந்து பணிசெய்ய இயலவில்லை என்று தனது ராஜினாமாவுக்கான காரணத்தைச் சொல்லியுள்ளார்.

மனோஜ் பாண்டியன்

தமிழகத்தில் ஆளுங்கட்சிக்குள்ளேயே குழப்பமான சூழ்நி்லை இருந்துவரும் நிலையில் முத்துக்குமாரசாமியின் ராஜினாமா  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த தலைமை வழக்கறிஞர் யார் என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது. இந்நிலையில், அ.தி.மு.க-வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான மனோஜ் பாண்டியன் தமிழகத்தின் அடுத்த அட்வகேட் ஜெனரலாக நியமனம் செய்யப்படலாம் என்ற தகவல் உலவுகிறது.

சசிகலாவுக்கு எதிராக முதன் முதலில் போர்க்கொடி தூக்கியது மனோஜ் பாண்டியனும் அவருடை தந்தை பி.ஹெச்.பாண்டியனும்தான். அதேபோல் சசிகலாவுக்கு எதிராகப் பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியபோது அவருக்குப் பக்கபலமாக இருந்து சட்ட நுணுக்கங்களை வழங்கி வந்ததும் மனோஜ் பாண்டியன்தான். இப்போது டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி செல்லாது என்பதற்காக தொடர்ந்து தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி வருகிறார். அதற்கான பரிசாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மனோஜ் பாண்டியனுக்கு அட்வகேட் ஜெனரல் என்ற பதவியைத் தருவதற்கு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது டெல்லியில் இருக்கும் மனோஜ் பாண்டியன், தமிழகம் திரும்பியவுடன் அவருடன் ஆலோசனை நடத்திய பிறகு முறைப்படி இதற்கான அறிவிப்பு வந்துவிடும் என்கிறார்கள் அ.தி.மு.க.வின் முன்னணி நிர்வாகிகள்.