தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்த இரண்டு நாள்கள் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


இதுதொடர்பாக தேசிய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைச் சுட்டிகாட்டி மத்திய அரசு, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, அடுத்த 48 மணி நேரத்துக்கு கிழக்கு ராஜஸ்தான், மேற்கு மத்தியப்பிரதேசம், குஜராத், கோவா, கொங்கன் மற்றும் தெற்கு உட்புற கர்நாடகப் பகுதிகளில் மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் மிக பலத்த மழைப் பொழிவு இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், தமிழகத்தின் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்றும், மோயாறு அணையிலும் நீர்வரத்து உயரும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாள்களுக்கு மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என்றும், அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ளுமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தைத் தொடர்பு கொண்டு பேசினோம். ''காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப்பொழிவு அதிகம் இருக்கும் என்பதால் கோவை, நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள அணைகளுக்கான நீர்வரத்து அதிகரிக்கும். அவைதவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இன்றைய மழை நிலவரத்தைப் பொறுத்தவரையில் கோவை மாவட்டம் வால்பாறையில் மாலை 5 மணி நிலவரப்படி 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கொடைக்கானல், மதுரை, கன்னியாகுமரி  உள்ளிட்ட இடங்களில் தூறல் மழை இருந்தது’ என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி விஜயன் நம்மிடம் விளக்கமளித்தார். மும்பையில் பெய்துவரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!