Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்... தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம்!

ஆட்சியர் சந்தீப் நந்தூரி

திருநெல்வேலியில், டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால், அதைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு இந்த ஆண்டு தீவிரமடைந்தது. குறிப்பாக வள்ளியூர், கடையம், கடையநல்லூர், சுரண்டை உள்ளிட்ட பகுதிகளில் இந்த நோயின் பாதிப்பு அதிகம் இருந்ததால், இதைக் கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத்துறையும் இணைந்து முகாம்களை நடத்தின. இதனால், இந்த நோயின் பாதிப்பு ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 

டெங்கு விழிப்பு உணர்வு

தற்போது, ஆங்காங்கே மழை பெய்துவருவதால், மீண்டும் நெல்லை மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. மாவட்டத்தின் பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமல்லாமல், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் காய்ச்சல் பாதிப்புக் காரணமாக பலர் அனுமதிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். அதையும் மீறி, டெங்கு உயிரிழப்புகளும் அவ்வப்போது நடக்கவேசெய்கின்றன.

ஆனால், டெங்கு நோயால் ஏற்பட்ட உயிரிழப்பை வேறு பாதிப்புக் காரணமாகக் காட்டும் மருத்துவ நிர்வாகம், உண்மையான காரணத்தைத் தெரிவிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாளையங்கோட்டையில் உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 12-ம் வகுப்பு படித்துவந்த மாணவி ஒருவர், டெங்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சை எடுத்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலப்பாளையத்தைச் சேர்ந்த அந்த மாணவிக்கு ஏற்பட்ட டெங்கு பாதிப்புகுறித்த காரணத்தை, மருத்துவ நிர்வாகம் மறைத்து விட்டதாகப் புகார் எழுந்துள்ளது. 

நிலவேம்பு கசாயம்

டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவுவதைத் தடுக்கும் வகையில், மேலப்பாளையம் பகுதியில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக, டெங்கு விழிப்பு உணர்வு முகாம் நடைபெற்றது. மஸ்ஜிதுர் ரகுமான் வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் சுபைர் அஹமது தலைமைதாங்கினார். இந்த முகாமைத் தொடங்கிவைத்து, நிலவேம்புக் கசாயம் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கிவைத்துப் பேசினார். அப்போது, டெங்கு ஒழிப்பில் அனைத்து மக்களும் சுகாதாரத்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அதன் மூலமாகவே டெங்கு நோயைப் பரப்பும் கொசுக்களை ஒழிக்க இயலும் என்றும் தெரிவித்தார்.

பின்னர், பொது மக்களுக்கு நிலவேம்புக் கசாயம் வழங்கப்பட்டது. மேலப்பாளையத்தில் உள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் நிலவேம்புக் கசாயம் விநியோகிக்கப்பட்டது. மொத்தம் 10,000 பேருக்கு கசாயம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. அத்துடன், டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையிலான துண்டுப் பிரசுரங்களும் நகரம் முழுவதும் விநியோகிக்கப்பட்டன. தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மேலப்பாளையம் முழுவதும் ஒரு மாத காலத்துக்கு தொடர்ச்சியாக விழிப்பு உணர்வு பிரசாரம் மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement