Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''வெளி மாநிலத்தவரின் வேட்டைக்காடானது தமிழ்நாடு..!'' 'நீட் தேர்வு' விபரீதங்களைச் சொல்லும் வேல்முருகன்

வேல்முருகன்

''மருத்துவக் கல்வி இடங்களுக்காகக் குறி வைக்கப்படும் ஒரு வேட்டைக்காடாக மாறியுள்ளது தமிழகம் என்று தெரிவித்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்,  கடந்த 24-ம் தேதி தொடங்கிய மருத்துவ மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வை ரத்து செய்துவிட்டு, தவறுகளைக் களைந்து புதிதாகக் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்றும் நடைபெற்ற முறைகேட்டிற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கெட்ட உள்நோக்கத்தில் நுழைத்த “நீட்” தேர்வு, தில்லுமுல்லுகளையும் முறைகேடுகளையுமே உள்ளடக்கியது என்பது உறுதியாகியிருக்கிறது. மாநிலங்கள் இன்றி மத்திய அரசு ஏது. இந்த உண்மையைப் புறந்தள்ளி, மாநில உரிமையைப் பறித்தே மத்திய மோடி அரசு “நீட்”டை நுழைத்தது. மாநிலங்களில் வேறுபட்ட பாடத்திட்டங்கள் இருந்தும் மத்திய சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே நீட் தேர்வு நடத்தப்பட்டது. வினாத்தாளும் பொதுவாக இருக்கவில்லை; மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டிருந்தது; பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு இலகுவாகவும் மற்ற மாநிலங்களுக்குக் குறிப்பாக தமிழ்நாட்டுக்குக் கடினமாகவும் இருந்தது. வெறும் 8 விழுக்காட்டினரே தேர்ச்சி பெற்றனர். 196, 197 கட்-ஆஃப் பெற்ற மாணவர்கள்கூட தோல்வியுற்றனர். சி.பி.எஸ்.இ மாணவர்களோ 50 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றனர். மேல்தட்டு மாணவர்களான அவர்களால் லட்சங்களைக் கொட்டி “நீட்” கோச்சிங் எடுக்க முடிந்ததுதான் காரணம். இப்படிக் கொட்டிக் கொடுத்து கோச்சிங் போக ஏழை எளிய கிராமப்புற மாணவர்களால் முடியுமா? நீட்டில் அவர்கள் தேறவில்லை. நியாயமே இல்லாத “நீட்” அடிப்படையில்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை என்று ஆகிவிட, அதிலும் தில்லுமுல்லுகள், முறைகேடுகள். அதாவது “நீட்”படி தரவரிசைப் பட்டியலை வெளியிட்டதில், அதில் வெளி மாநில மாணவர்கள் 1,458 பேர் இடம்பெற்றனர்; தமிழ்நாட்டில் அரசு மற்றும் நிர்வாக இடங்களே மொத்தம் 4731 தான்.

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 189 பேர் கேரள மாணவர்கள். இவர்கள் கேரள மாநிலத் தரவரிசைப் பட்டியலிலும் இடம் பெற்றிருந்தனர் என்கிறார்கள். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பித்த வெளி மாநில மாணவர்கள் 1,269 பேர். இதில் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் 188 பேர். தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள் 149 பேர். வேறுபல மாநிலத்தவர் 932 பேர். இவர்கள் பெரும்பாலும் போலி இருப்பிடச் சான்று கொடுத்தே தர வரிசைப் பட்டியலில் இடம்பிடித்தனர். இதுதான் “நீட்” அடிப்படையிலான இந்த மருத்துவ மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வில் நடைபெற்ற துணிகர மோசடி. அப்படி போலி இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து இடம்பெற்ற 9 பேரைக் கண்டுபிடித்துக் காவல்துறையில் புகார் அளித்ததாகவும் அவர்களில் 4 பேர் இப்படி சட்டவிரோதமாகக் கைப்பற்றிய இடத்தைத் திருப்பித் தந்துவிட்டதாகவும் மருத்துவக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். பிற மாநிலங்களில் இந்த மருத்துவ தரவரிசைப் பட்டியல் “நீட்” தேர்வுக்கான 9 இலக்க வரிசை எண்களைக் கொண்டே தயாரிக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் “நீட்”டின் 8 இலக்க பதிவு எண்ணை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. இதற்கான காரணத்தை தமிழக அரசுதான் தெளிவுபடுத்த வேண்டும். போலி இருப்பிடச்சான்றை வருவாய்த்துறை அலுவலர்கள் வாயிலாகத்தானே பெற்றிருக்க முடியும். எப்படி முடிந்தது என்பதையும் தமிழக அரசுதான் தெரியப்படுத்த வேண்டும்?

இந்தத் தில்லுமுல்லுகள், முறைகேடுகளால் தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி இடங்கள் பறிக்கப்பட்டுவிட்டன. சமூக நீதியை ஒழித்துக்கட்டவே “நீட்”டைத் திணித்து தமிழக மாணவர்கள் மருத்துவம் படித்துவிடாதபடி செய்தார் பிரதமர் மோடி. இதனாலேயே மருத்துவக் கல்வி இடங்களுக்காகக் குறி வைக்கப்படும் ஒரு வேட்டைக்காடாக மாறியது தமிழகம். இதில் வெளி மாநிலத்தவர் தில்லுமுல்லு செய்தே நமது மருத்துவக் கல்வி இடங்களைக் கபளீகரம் செய்தனர். இப்படியோர் அவலம் நேரக் காரணமே “நீட்”டை விலக்கத் திராணியில்லாமல், மாணவர் சேர்க்கையை மோடியிடம் எடப்பாடி அரசு கைமாற்றியதுதான். எனவே, கடந்த 24-ம் தேதி தொடங்கிய மருத்துவ மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வை ரத்து செய்துவிட்டு, தவறுகளைக் களைந்து புதிதாகக் கலந்தாய்வு நடத்த வேண்டும். நடைபெற்ற முறைகேட்டிற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement