'தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது'- எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த ஆளுநர் | Governor rejects opposition parties request over floor test issue

வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (30/08/2017)

கடைசி தொடர்பு:12:16 (30/08/2017)

'தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது'- எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த ஆளுநர்

'சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கைமீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.

வித்யாசாகர் ராவ்


அ.தி.மு.க-வில் உச்சகட்ட மோதல் ஏற்பட்டுள்ளநிலையில், முதல்வர் பழனிசாமி அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் வழங்கினர். இதையடுத்து, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. இது தொடர்பாக, தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஏற்கெனவே ஆளுநரைச் சந்தித்த நிலையில், இன்று  மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் கூட்டாக ஆளுநரைச் சந்தித்தனர். அப்போது, 'முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்குப் பெரும்பான்மை இல்லாததால், பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்' என்று எதிர்க்கட்சிகள் ஆளுநரிடம் கோரிக்கை வைத்தனர்.

எதிர்க்கட்சிகள்

இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள், "பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், 'தற்போதைய சூழலில் இந்த விவகாரத்தில் சட்டப்படி தலையிட முடியாது. என்னால் இதில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. 19 எம்.எல்.ஏ-க்கள் அ.தி.மு.க-விலிருந்து விலகினால்தான் நடவடிக்கை எடுக்க முடியும். இரு குழுக்களாகப் பிரிந்துள்ள நிலையில், கட்சி விவகாரத்தில் நான் ஒன்றும் செய்ய முடியாது' என்று கூறினார். ஆளுநர் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறியுள்ளதால், அடுத்தகட்டமாக ஜனாதிபதியைச் சந்தித்து முறையிடத் திட்டமிட்டுள்ளோம்" என்றனர்.


அதிகம் படித்தவை