வெளியிடப்பட்ட நேரம்: 12:29 (30/08/2017)

கடைசி தொடர்பு:13:08 (30/08/2017)

‘ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒரு நியாயம்... எங்களுக்கு ஒரு நியாயமா?’ - கொதிக்கும் தினகரன் ஆதரவாளர்கள்

 ஜெயலலிதா சமாதியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்

கட்சித் தாவல் சட்டத்தின்படி எங்கள் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பிய சபாநாயகர் தனபால், சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் செயல்பட்டுவருகின்றனர். ஆளுநரைச் சந்தித்துவிட்டு, புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியிருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மீது கட்சித் தாவும் சட்டத்தின்படி நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நோட்டீஸுக்கு ஒரு வார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும்.

அதுதொடர்பாக, சட்ட வல்லுநர்களுடன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனை நடத்திவருகின்றனர். அந்தக் கூட்டத்தில், 'முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த சமயத்தில், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எதிராக வாக்களித்தனர். அப்போது, அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கட்சிக்குத் துரோகம்செய்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி கொடுத்ததைக் கண்டித்தும் முதல்வரை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்திதான் ஆளுநரிடம் மனு கொடுத்தோம். அதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உரிய பதிலைக் கொடுப்போம். சட்டம் என்பது அனைவருக்கும் சமம். ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒரு நியாயம், நமக்கு ஒரு நியாயமாக' என்று கொந்தளித்துள்ளார் எம்.எல்.ஏ. ஒருவர். எம்.எல்.ஏ-வின் கோபத்தைப் புரிந்துகொண்ட மற்றவர்கள், எல்லாவற்றுக்கும் விரைவில் முடிவு வரும் என்று சமரசப்படுத்தியுள்ளனர்.

பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி

புதுச்சேரியில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ-க்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், தினகரனை விட்டு தங்கள் பக்கம் வாருங்கள், எல்லாவற்றையும் பேசி முடிவுசெய்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர். அதற்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களில் சிலர் ஆர்வம் காட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையில், இரட்டை இலை சின்னத்தைப் பெற டெல்லியில் முகாமிட்டுள்ள தமிழக அமைச்சர்களுக்கு, இதுவரை நல்ல செய்தி கிடைக்கவில்லை. இதனால், தமிழக அமைச்சர்கள் அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசித்துவருகின்றனர். இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க முயலும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்தும்விதமாக தினகரன் ஆதரவாளர்கள் தரப்பில் புதிய மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவால் இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

தினகரன் மூலம் ஆட்சிக்கு சிக்கல் வருவதை விரும்பாத முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அடுத்த வியூகத்தை வகுத்துள்ளனர். அது, தினகரனுக்கு அதிர்ச்சி வைத்தியமாக இருக்கும் என்று சொல்லத் தொடங்கியுள்ளனர். ஆனால், அ.தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தமிமுன்அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகிய எம்.எல்.ஏ-க்களின் ஆதரவும் தினகரனுக்குக் கிடைத்துள்ளது. இதனால், தினகரன் ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். எங்கள் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று தினகரன் சொல்லத் தொடங்கியுள்ளார். ஏற்கெனவே, கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், 40-க்கும் மேற்பட்ட எம் .எல்.ஏ-க்கள் பங்கேற்கவில்லை என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-வான தங்க தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு மறுத்துள்ளது.

தினகரன்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களையும் தி.மு.க. எம்.எல்.ஏ-க்களையும் சஸ்பெண்ட் செய்யும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்பினர். அதை சட்டரீதியாக தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் எதிர்கொள்ள உள்ளனர். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்த, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எதிர்கட்சிகள் எடுக்கும் நடவடிக்கைகளை டெல்லி மூலம் முறியடிக்க முடிவுசெய்துள்ளார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று, கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் சந்தித்தனர். பின்னர், அவர்கள் கூட்டாக அளித்த பேட்டியில், 19 எம்.எல்.ஏ-க்களும் அ.தி.மு.க-வில்தான் உள்ளனர். அவர்கள் வேறு கட்சியில் சேர்ந்தால் மட்டுமே பெருபான்மை இழந்துவிட்டதாகக் கருதமுடியும். இதனால், தற்போதைய சூழ்நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று ஆளுநர் கூறியதாகத் தெரிவித்தனர். இதனால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் எதிர்பார்ப்புப்படி முதல்வரை மாற்றுவது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்க வாய்ப்பில்லை. ஆளுநரின் இந்த முடிவையடுத்து, குடியரசுத் தலைவரைச் சந்திப்பது தொடர்பாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ரிசார்ட்டில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அவர்கள் விரைவில் டெல்லி நோக்கி செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


டிரெண்டிங் @ விகடன்