தேனியில் வாகன ஓட்டுநர்கள் விழிப்புஉணர்வு கூட்டம்!

செப்டம்பர் 1முதல் வாகனம் ஓட்டும் போது, அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் முடிவைப் பல்வேறு தரப்பினர் எதிர்த்து வரும் சூழலில், பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேனி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில், போலீஸ் எஸ்.பி பாஸ்கரன் தலைமையில், வாகன ஓட்டிகளுக்கான விழிப்புஉணர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, தேனி மாவட்டம் முழுவதிலும் உள்ள ஆட்டோ ஸ்டான்களில் இருந்து தலா இருவர் வீதம் அழைக்கப்பட்டிருந்தனர். மேலும் டிராவல்ஸ், வாடகைக் கார், வேன், பஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் வாகனம் ஓட்டும் போது கட்டாயம் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவு பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது கருத்துத் தெரிவித்த ஓட்டுநர்கள், "போக்குவரத்துக் காவலர்கள் சிலர் காரணமே இல்லாமல் தங்கள் ஓட்டுநர் உரிமத்தை வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். இப்படி ஆயிரக்கணக்கான ஓட்டுநர் உரிமங்கள் கைப்பற்றப்பட்டிருக்கிறது. இப்போது கட்டாய ஓட்டுநர் உரிமம் வைத்துக்கொண்டுதான் வாகனம் ஓட்ட வேண்டும் என்ற அறிவிப்பால் பலர் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார்கள்" என்று குற்றம் சாட்டினர்.

அதற்கு பதிலளித்த எஸ்.பி பாஸ்கரன், "குடி போதையில் வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமம் மட்டுமே கைப்பற்றப்படும். காரணம் இல்லாமல் யாரும் ஓட்டுநர் உரிமத்தைக் கைப்பற்ற மாட்டார்கள். அப்படிச் செய்தால் உடனே என்னிடம் புகார் செய்யலாம்." என்று உறுதியளித்தார்.

மேலும் பேசிய பாஸ்கரன், "வாகன ஓட்டிகளின் நலனைக் கருத்தில் கொண்டுதான் கட்டாய ஓட்டுநர் உரிமம் வைத்துக்கொண்டு வாகனம் ஓட்ட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலானோர், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுகிறார்கள். அவர்களால் பல விபத்துகள் ஏற்படுகிறது. இனி விபத்துகளின் எண்ணிக்கை குறைக்கப்படும்." என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!