வெளியிடப்பட்ட நேரம்: 13:51 (30/08/2017)

கடைசி தொடர்பு:15:20 (30/08/2017)

'ஆசிரியரின் பக்குவமின்மைக்கு விலை ஒரு சிறுமியின் உயிரா?!" - பாளையங்கோட்டை சோகம்

சிறுமி


ந்தச் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, கோட்டூர் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி, இரவு இரண்டு மணிக்குப் பக்கத்து வீட்டு மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனியார் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்புப் படித்த அவளுக்கு ஆசிரியையால் ஏற்பட்ட மன உளைச்சல்தான் சம்பவத்துக்குக் காரணம் எனப் பெற்றோர் கூறியுள்ளனர். 

தற்கொலை செய்துகொள்ளும் முன்பாக அந்தக் குட்டிப் பெண் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், தனது வகுப்பு ஆசிரியை தொடர்ந்து தன்னைத் திட்டியதால் ஏற்பட்ட அவமானத்தால் இந்தத் தற்கொலை முடிவை எடுப்பதாக எழுதியிருக்கிறார். 12 வயது சிறுமி, ஆசிரியை திட்டியதை தாங்கமுடியாமல் தற்கொலை முடிவை எடுத்திருப்பது இன்றைய குழந்தைகளின் மனநிலையை நினைத்து பதற வைக்கிறது. இன்னொரு புறம், அந்தச் சிறுமியின் மாதவிடாய் ரத்தத்தால் வகுப்பு இருக்கையில் கறைபட நேர்ந்ததால், மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியை அவமானப்படுத்தியதுதே அவளை அந்த முடிவை எடுக்கத் தூண்டியிருக்கிறது என்று கூறப்படும் தகவல், ஓர் ஆசிரியரின் பக்குவமின்மைக்கு விலை, ஒரு குழந்தையின் உயிரா என்று மனம்கொதிக்க வைக்கிறது. 

ஆசிரியர்கள் சுடரொளிதிருவள்ளூர் மாவட்டம் கரிக்கலவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை சுடரொளி, இந்தச் சம்பவம் குறித்துப் பேசுகையில், ''சம்பந்தப்பட்ட ஆசிரியை, சிறுமியின் மாதவிடாய் காலத்தில் ஏற்பட்ட ரத்தப்போக்கு வகுப்பறை பெஞ்சில் கசிந்துவிட்டதால் அந்தச் சிறுமியை வகுப்பை விட்டு வெளியே போகச் சொல்லி தண்டித்திருக்கிறார். இதில் என்ன குற்றம் இருக்கிறது தண்டிப்பதற்கு? வளர்ந்த பெண்ணுக்கே இந்த மாதாந்திர அவஸ்தை என்பது துன்பமானது என்ற நிலையில், அந்தக் குழந்தையின் உடலும் மனதும் அதைக் கடக்க எவ்வளவு சிரமப்படும்? உண்மையில் அந்த ஆசிரியர் தந்திருக்க வேண்டியது, அக்கறை, அரவணைப்பு. தண்டனை தந்தது அவரின் குற்றம். 

இப்போது ஆசிரியர் - மாணவர்களுக்கு இடையிலான இடைவெளி ரொம்பவே அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதே ஊரில் தங்கியிருப்பர். அங்கு படிக்கும் மாணவர்களுக்கும் அவர்களுக்கும் இடையில் பெரிய பொருளாதார வேற்றுமை இருக்காது. கண்டிப்பு, தண்டிப்பு இரண்டையுமே அவர்கள் மாணவர்கள் மீதான அக்கறையாக மட்டுமே வெளிப்படுத்துவார்கள். இப்போது ஆசிரியர் வேறு ஊரிலிருந்து வருகிறார். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் மிகப்பெரிய பொருளாதார வேறுபாடு காணப்படுகிறது. ஆசிரியர், மாணவ சமூகத்தில் இருந்தே வேறுபட்டு நிற்கும் நிலையைப் பார்க்க முடிகிறது. அதனால்தான், ஒரு குழந்தையின் மாதவிடாய் துயரத்தைக்கூட புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

முன்பு பெண்கள் பூப்பெய்தும் வயது 14ஆக இருந்தது. இப்போது 10 வயதாகக் குறைந்துள்ளது. 10 வயதில் பூப்பெய்தும் பெண் குழந்தை மாதவிடாய் வலிகளைப் புரிந்துகொள்வது, தன்னைப் பராமரிப்பது இரண்டு விஷயத்திலும் அந்த 10 வயதுக்கு உரிய மெச்சூரிட்டியையே கொண்டிருக்கும் அந்தக் குழந்தைக்கு, 'மாதவிடாய் காலத்தில் உடலிலிருந்து வெளியேறும் ரத்தம் தீட்டு, அது அசிங்கம்' என்பது போன்ற நம்பிக்கைகளை இந்தச் சமூகம் தவறாது புகுத்தியிருக்கும். தான் மாதவிலக்காகி இருப்பது தன்னோடு படிக்கும் மாணவர்களுக்குத் தெரிவதை பெண் குழந்தைகள் அவமானமாக உணர்கிறார்கள். இதுதான் வகுப்பறைகளின் இயல்பாக உள்ளது. 

பெண்ணின் மாதவிடாய் சிரமங்களை ஆண், பெண் குழந்தைகள் அறிவியல்பூர்வமாக புரிந்துகொள்ளும், இயல்பாகக் கடக்கும் மனநிலையை வகுப்பறையில் ஆசிரியரால் ஏற்படுத்த முடியும். அது அவசியமானதும்கூட. மிகக்குறைந்த வயதில் பூப்பெய்தும் குழந்தைகள் மாதவிடாய் காலத்தில் தங்களைப் பராமரிப்பதில் கவனக்குறைவாக இருப்பின் அதை ஆசிரியர் ஒரு தாயின் மனநிலையுடன் அணுக வேண்டும். தேவைப்பட்டால், அவர்களது பெற்றோரையும் அழைத்துப் பேசலாம். மாதவிடாய் என்றில்லை, மாணவர்கள் தொடர்பான எந்தப் பிரச்னைக்கும் இந்த அணுகுமுறையிலேயே தீர்வு காண முயற்சிக்க வேண்டும். வகுப்பறையில், பலர் முன்னிலையில் அவமானப்படுத்துவது ஆசிரிய தர்மமல்ல'' என்கிறார் சுடரொளி. 

சேலத்தைச் சேர்ந்த சங்கீதா, ஒரு பெற்றோராகப் பேசினார். ''பள்ளியில் நடக்கும் பல விஷயங்களும் குறுந்தகவல் மற்றும் மெயில் வழியாக பெற்றோருக்கு இப்போது தெரிவிக்கப்படுகிறது. என் மகன் ஆசிரியர்கள் சங்கீதாபடிக்கும் தனியார் பள்ளியில் மாதம் ஒரு முறை பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடக்கிறது. வகுப்பறையில் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள் பற்றி நாங்களும் பேசுகிறோம். ஆனாலும், 'அட்வான்ஸ்டு' பள்ளிகளிலும் இதுபோன்ற துயரமான சம்பவங்கள் நடக்கக் காரணம் என்ன என்று யோசித்தால், ஒரு விஷயம் புரிகிறது. எங்கள் தலைமுறைகளில் ஆசிரியர் திட்டும்போது அது எங்களுக்கு அவமானமாகவெல்லாம் இருந்ததில்லை. காரணம், அந்தக் கண்டிப்புக்கு இணையான அக்கறையும் அவர்களிடம் இருந்தது. ஆனால், இன்றைய ஆசிரியர் - மாணவர்களிடம் அந்தப் பிணைப்பு இல்லை என்பது வருத்தமான விஷயம். அதனால்தான் அவர்கள் திட்டுவது மாணவர்களுக்கு அவமானமாகப்படுகிறது. இன்னொரு பக்கம், பல ஆசிரியர்களும் அன்பு, அரவணைப்பெல்லாம் இன்றிதான் மாணவர்களை அணுகுகிறார்கள். மாற வேண்டியது முதலில் ஆசிரியர்களே. 'என்னதான் திட்டினாலும் இவங்க நம்ம மிஸ்/சார்' என்ற எண்ணம் மாணவர்களுக்கு வரும் அளவுக்கு இருக்க வேண்டும் ஆசிரியரின் அணுகுமுறை'' என்றார். 

ஆசிரியர்கள்அரசுப் பள்ளிகளுக்கான மொபைல் கவுன்சலிங்கில் ஈடுபட்டு வரும் கவுன்சிலர் பிரவீன்குமார் இது குறித்து கூறுகையில், ''இன்றைய குழந்தைகளுக்குச் சுய கெளரவம் என்ற விஷயம் மிகச்சிறு வயதில் இருந்தே வளரத்தொடங்கி விடுகிறது. யார் திட்டினாலும் பொறுத்துக்கொள்ளும் இடத்தில் குழந்தைகள் இல்லை. இதனால், சின்னச் சின்ன குறைகளைக்கூட வகுப்பறையில் இல்லாமல் தனியாக அழைத்துதான் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும். வளர் இளம் பருவத்தில் உள்ள குழந்தைகள் இன்னும் அதிகமாக சுயமரியாதையை எதிர்பார்ப்பார்கள். மென்ஷுரல் தொடர்பான விஷயங்களை பெண் ஆசிரியைகள் தாயின் அன்புடன் மாணவிகளுக்குப் புரியவைக்க வேண்டிய தேவையும் உள்ளது. மாணவிகளின் மாதவிடாய் சிரமங்களை, அதுகுறித்த மாணவர்களின் மனநிலையை ஒரு வகுப்பறையில் எப்படி அணுக வேண்டும் என்பது பற்றி ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும் என்ற குறிப்பை, தன் மரணத்தின் மூலம் உணர்த்திச் சென்றுள்ளது ஒரு சிறு உயிர்'' என்றார் பிரவீன்குமார் வருத்தத்துடன். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்