பொதுக்குழுக் கூட்டத்துக்கு எங்கள் எம்.எல்.ஏ-க்களும் செல்வார்கள்! அதிரடி காட்டும் திவாகரன்

divakaran

'பழனிசாமி கூட்டியுள்ள பொதுக்குழுக் கூட்டத்துக்கு அழைப்பு வந்தால், எங்கள் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் அனுப்பப்படுவர்' என்று அதிரடியாகக் கூறியுள்ள சசிகலாவின் சகோதரர் திவாகரன், 'தினகரன் சார்பில் விரைவில் பொதுக்குழு கூட்டப்படும்' என்று அறிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி, முதல்வர் பழனிசாமி அணியுடன் இணைந்ததைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வில் தினகரன் தரப்பினரால் உச்சகட்ட மோதல் வெடித்துள்ளது. கட்சியின் சின்னத்தைக் கைப்பற்றும் முயற்சியில் பழனிசாமி அணியும் தினகரன் அணியும் ஈடுபட்டுவருகின்றன. இதனிடையே, கட்சியின் பொதுக்குழுவை செப்டம்பர் 12-ம் தேதி கூட்டியுள்ளார் முதல்வர் பழனிசாமி. 'பொதுக்குழுவைக் கூட்டும் உரிமை, பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு மட்டுமே உள்ளது' என்று தினகரன் தரப்பு தெரிவித்துவருகிறது.

இந்தக் களேபரங்களுக்கிடையே, மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன், "முதலமைச்சர் அணி சார்பில் பொதுக்குழுவைக் கூட்டினால், அது செல்லாது. பொதுக்குழுக் கூட்டத்துக்கு அழைப்பு வந்தால், எங்கள் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் அனுப்பப்படுவர்.' தினகரன் சார்பில் விரைவில் பொதுக்குழு கூட்டப்படும். ஊழல் அமைச்சர்கள் கட்சியிலும் ஆட்சியிலும் இருக்கக் கூடாது. பெரும்பான்மையை இழந்ததாக அனைவரும் சொல்லும் நிலையில், ஆளுநர் நல்ல முடிவை எடுக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட ஆவணங்களைத் திரும்பப்பெற முடியாது" என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!