Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“திவாகரன் ரொம்பவே மாறிவிட்டார்...!” இது சுந்தரக்கோட்டை பங்களா ரகசியம் #VikatanExclusive

‘அ.தி.மு.க ஆட்சி என்றாலே சென்னையும், மன்னையும் ஒன்றுதான்' என்பார்கள். டெல்டாவைத் தன் கைக்குள் வைத்து ஆட்டம் காண்பித்த திவாகரனை வைத்துதான் இந்தப் பழமொழி கட்சிக்காரர்கள் மத்தியில் எதிரொலிக்கும். திவாகரன் கண் அசைவில்தான் கட்சிக்காரர்களுக்குக் கட்சிப் பதவியோ, அமைச்சர் பதவியோ கிடைக்கும். அப்படிக் கூனிக்குறுகிக் கட்சிப் பதவிக்கு வந்தவர்கள் இன்றும் அதில் நீடித்து வருகிறார்கள். 

திவாகரனைப் பார்க்க மன்னார்குடி சுந்தரக்கோட்டை பங்களாவின் கேட்டுக்கு வெளியே நின்று நாள் முழுக்கக் காத்திருந்து... இறுதியில், கேட்டை மட்டுமே பார்த்துவிட்டுப் போனவர்கள்தான் அதிகம். அப்படிப் போனவர்கள் மீண்டும் திரும்பவும் வந்திருக்கிறார்கள். தனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா... என வெளிமாவட்ட நிர்வாகிகள் முதல் லோக்கல் நிர்வாகிகள் வரை இப்படித்தான் காத்துக்கிடக்க வேண்டும். எப்போது  நம்மையெல்லாம் உள்ளே அழைப்பார் என்று நாள் கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் காத்திருந்து அப்பாய்ன்மென்ட் வாங்கிப் பார்த்தவர்களில் எந்தப் பதவியுமே கிடைக்காமல் போனவர்களும் அதிகம். ஒருமணி நேரம் முதல் ஒருநாள் முழுக்கச் சுந்தரக்கோட்டை பங்களா கேட்டின் வாசலில் நின்று காத்திருந்தவர்களின் பட்டியலில் கட்சி மூத்த நிர்வாகிகளும் அடங்குவார்கள். கட்சித் தொண்டர்கள், அதிகாரிகள் என யார் வந்தாலும் கேட் திறக்கப்படாது. கேட்டின் ஓட்டை வழியாக யார் என்பதைத் தெரிவிக்க வேண்டும். பிறகுதான் போன் வழியாகத் திவாகரனுக்குத் தகவல் தெரிவிக்கப்படும். திவாகரன் நினைத்தால் ஒரு நிமிடத்திலும் கூப்பிடலாம்; கூப்பிடாமலும் போகலாம். இப்படியான அதிகாரத்தில் வலம்வந்தவர்தான் திவாகரன். காவல் துறை அதிகாரிகள் எல்லோரும் திவாகரனிடம் சலாம் போட்டால்தான் காலத்தை ஓட்ட முடியும் என்று மன்னார்குடி அ.தி.மு.க-வின் வரலாற்றில் எழுதப்பட்டிருந்தது.

“ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஓ.பி.எஸ் தனியாகப் பிரிந்து சென்றது, சசிகலா சிறைக்குச் சென்றது என அடுத்தடுத்து அ.தி.மு.க-வில் ஏற்பட்ட மாற்றம் திவாகரனையும் மாற்றியிருக்கிறது” என்கிறார்கள் மன்னார்குடி வட்டத்தினர். 

மன்னார்குடி வட்டாரத்தில் விசாரித்தோம். “அ.தி.மு.க ஆட்சியில் இருக்கும்போது திவாகரனை யாரும் அவ்வளவு எளிதில் பார்க்க முடியாது. முக்கியமானவர்களை மட்டுமே சந்தித்துவந்தார். தனக்கு நெருக்கமானவர்களை மட்டுமே தனது பக்கத்தில் வைத்துக்கொண்டார். நூற்றுக்கு மேற்பட்ட கோயில்களுக்கு குடமுழுக்கு செய்துள்ளார். கோயில்களுக்குச் சென்று வருவார். தனது உறவுகளின் திருமண நிகழ்ச்சிகளுக்கும், முக்கியக் கட்சி நிர்வாகிகளின் திருமணங்களுக்கும் மட்டுமே சென்று வருவார். முது முனைவர் பட்டம் பெற்றவர். சுந்தரக்கோட்டையில் உள்ள தனது கல்லூரிக்குச் சென்று வருவது, மாணவர்களுக்குப் பாடம் நடத்துவது என்பது மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களுக்கு அக்கா சசிகலாவிடம் சிபாரிசு செய்து தன்னை ஒரு பவர் சென்டராகக் காட்டிக்கொண்டார்.  

திவாகரன், divakaran

இப்படி இருந்த திவாகரன் தனது ஆதரவாளர்கள் மட்டுமல்ல, தனது வீட்டைத் தேடி யார் வந்தாலும் கேட் வாசலில் இருக்கும் கேட் கீப்பர் போன் செய்தவுடன் யாராக இருந்தாலும் 'உள்ளே விடு' என்று உத்தரவிட்டிருக்கிறார். திருமண அழைப்பிதழ் கொடுத்தால் அவர்களுக்குத் திருமண உதவித்தொகையாகக் கையில் கிடைத்ததை அள்ளிக்கொடுக்கிறார். கோயில் திருவிழா என்று அழைப்பிதழ் கொடுத்தாலும் நிதி உதவி செய்து வருகிறார். தவறாமல் கோயில் திருவிழாவிலும் கலந்துகொள்வார். கட்சிக்காரராக இல்லாவிட்டாலும் அவர்களது திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறார். பத்திரிகையாளர்களை அழைத்துப் பேட்டியும் கொடுக்கிறார். பத்திரிகையாளர்கள் வீடு தேடி வந்து பேட்டி கேட்டாலும் இல்லையென்று மறுப்பதில்லை. அவரே முன்வந்து தயாராக, 'யு ஆஸ்க் எனி கொஸ்டின்ஸ் இன் பொலிடிக்கல் சிச்சுவேஷன்' என ஆங்கிலம் - தமிழ் கலந்து பொளந்துகட்டுகிறார். 'எனது கல்லூரியில் 100 மாணவர்களுக்கு இலவசமாகக் கல்வி கொடுத்து வருகிறேன். எம்.பில் கைடு, பி.ஹெச்டி கைடு, என்னுடைய மோட்டோ, விஷன் எல்லாமே எம்பவர்மென்ட் ஆஃப் உமன்' என்று சொல்வார். அண்ணன் இப்பவெல்லாம் ரொம்பவே மாறிவிட்டார்'' என்றனர்.

காலம் மாற மாற நாமும் மாறிக்கொள்ள வேண்டியதுதானே...! இல்லையென்றால் காலம் நம்மை ஒதுக்கிவிடும் என்று நினைத்தாரோ என்னவோ...!?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement