வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (30/08/2017)

கடைசி தொடர்பு:21:03 (30/08/2017)

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயணன் நியமனம்

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். 

vijaya narayanan


அரசின் தலைமை வழக்கறிஞர் பொறுப்பு வகித்து வந்த ஆர்.முத்துக்குமாரசாமி, தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல்நிலையைக் காரணம் காட்டி, அந்த பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்குமாறு தமிழக அரசுக்கு அவர் நேற்று கடிதம் எழுதியிருந்தார்.  இந்நிலையில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். 

சென்னை லயோலா கல்லூரி மற்றும் சென்னை சட்டக் கல்லூரி மாணவரான அவர், வழக்கறிஞராக கடந்த 1982-ம் ஆண்டு பதிவு செய்துகொண்டார். புகழ்பெற்ற வழக்கறிஞர் குடும்பத்தில் இருந்த வந்தவர் விஜயநாராயணன். இவரது தாத்தா எம்.கே.நம்பியார், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலைமையிலான இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வரையறுக்கும் குழுவில் இடம்பெற்றிருந்தார். இவரது மாமாவும், மூத்த வழக்கறிஞருமான கே.கே.வேணுகோபால், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராகத் தற்போது பணியாற்றி வருகிறார். 


மூத்த வழக்கறிஞராக சென்னை உயர்நீதிமன்றம் இவரை, கடந்த 2014-ல் அங்கீகரித்தது. இவர், சேவை தொடர்பான சட்டங்கள், தொழிலாளர் நலச் சட்டம், அரசியலமைப்புச் சட்டம், நிர்வாக சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டத்துறைகளில் அனுபவம் பெற்றவர். சென்னை இந்திய சட்ட நிறுவனத்தின் செயற்குழு உறுப்பினராகக் கடந்த 2012-ல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியால் நியமிக்கப்பட்டார். திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியின் பொதுக்குழு உறுப்பினராக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியால் கடந்த பிப்ரவரி மாதம் இவர் நியமிக்கப்பட்டார். நாட்டின் பழமையான வழக்கறிஞர் சங்கங்களில் ஒன்றான மெட்ராஸ் பார் அசோசியேஷனின் தலைவராகவும் இவர் தற்போது பதவி வகித்து வருகிறார்.