வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (30/08/2017)

கடைசி தொடர்பு:22:08 (30/08/2017)

''ஆசிரமத்துல மோட்சம் கிடைக்காது... மோசமான அனுபவம்தான் கிடைக்கும்!’’ - பெண்களின் வாக்குமூலம் #WhyInGodsName

ஆசிரமம்

டிக்கடி சர்ச்சையில், பிரச்னைகளில் சிக்குவதென்பது ஆசிரமம் அமைத்திருக்கும் சாமியார்களுக்கு வழக்கமாயிருக்கிறது. அந்த வரிசையில் பாலியல் பலாத்கார சர்ச்சையில் சிக்கிய குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 20 வருட சிறைத் தண்டனை கிடைத்திருக்கிறது.  ஆசிரமத்துக்குச் செல்லும் பெண்கள் அங்கேயே தங்கிவிடும் அளவுக்கு ஈர்க்கப்படுவது என்ன காரணத்தால், எப்படி மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள் என்பது போன்ற கேள்விகளோடு, ஆசிரமத்துக்குச் சென்று வந்த சில பெண்களிடம் பேசினோம். (இது எல்லா ஆசிரமங்களையும், சாமியார்கள் பற்றியும் பழி சொல்லும் பதிவல்ல. இன்னும் ஆத்மார்த்தமாக ஆன்மிக ரீதியில் நடக்கும் ஆசிரமங்கள் உண்டு. தவறான ஆசிரமங்களைப் பற்றிய பதிவு மட்டுமே) அடையாளத்தை மறைத்து நமக்காக அவர்கள் பேசிய அனுபவங்களும், விபரங்களும் இதோ... (பெயர், ஊர் விபரங்கள் மாற்றப்பட்டுள்ளன) 

மாலதி - கோவை

''என்னுடைய அம்மா முத்துலட்சுமிக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். எங்க அப்பா இறப்புக்குப் பிறகு மனசளவுல நொடிஞ்சு போயிருந்தாங்க அம்மா. 'ஆலந்தூர் சாமியாரைப் போய் பார்த்தால் எல்லா சரியாகிடும்'னு பக்கத்துல வீட்டுல உள்ளவங்க சொன்னதைக் கேட்ட அம்மா போய்தான் பார்ப்போமேனு சொல்ல, சரிம்மானு நாந்தான் அனுப்பிவைச்சேன். பக்கத்து வீட்டுக்காரங்களோட சாமியாரைப் பார்க்கப் போனாங்க அம்மா. அன்னைக்கு நைட்டே சாமியாரைப் பார்க்கப் போனவங்க எல்லாம் வீட்டுக்கு வந்துட்டாங்க. எங்க அம்மா மட்டும் வீட்டுக்குத் திரும்பவேயில்ல. பதறியடிச்சுகிட்டு ஆசிரமத்துக்குப் போனேன். அங்க என் அம்மா, அந்தச் சாமியாருக்குப் பணிவிடை செஞ்சிட்டு இருந்தாங்க. 'ஏம்மா இங்க இருக்க, வா நம்ம வீட்டுக்குப் போயிடலாம்'னு சொன்னேன். ஆனா அம்மாவோ, 'நான் வரல. நீயும் இங்கேயே தங்கிடு. இந்தச் சாமியார் நமக்கு மோட்சத்தை வாங்கித் தருவார்'னு சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிட்டு இருந்தாங்க. 

அம்மாவை கூப்பிடப் போன எனக்கு, அந்த மடத்துக்குள்ள வீசின ஜவ்வாது வாசம் ரொம்பப் பிடிச்சிருந்தது. அங்க ரொம்ப அமைதியான சூழல் நிலவுச்சு. ஆலந்தூர் சாமியார் நம்ம குடும்பக் கதையை நாம சொல்ல நிதானமா கேட்குறார். மனசுல கவலையைத் தேக்கி வைச்சிருக்கிறவங்ககிட்ட மனசு விட்டுப் பேசினா, எல்லாத்தையும் ஷேர் பண்ணிப்போம்ல. அதைத்தான் அந்த சாமியார் செய்றார். அங்க வந்த எல்லா பெண்களும் தங்க குடும்பக் கதையை ஒளிவு மறைவில்லாம அவர்கிட்ட ஒப்பிக்கிறாங்க. அந்தப் பெண்களோட பின்னணியைத் தெரிஞ்சு வைச்சுகிட்டு அவர் ஆறுதல் சொல்றார். 

எங்க அம்மா மனசை எப்படியாவது மாத்தி வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிடலாம்னு நினைச்சேன். ஆனா முடியல. எங்க அம்மா மாதிரி நிறைய பேர் அங்க இருந்தாங்க. வயசுப் பெண்கள் சிலரும் அங்க தங்கியிருந்தாங்க. அங்க இருக்கிற பெண்கள் யார் வேணும்னாலும் தனக்கு எழுற பாலியல் விருப்பத்தை அந்தச் சாமியார்கிட்ட ஓளிவு மறைவில்லாம சொல்லலாம். அவர் அதை நிறைவேத்தி வைப்பார்னு அங்க போனப்ப சொன்னாங்க. அதிர்ந்து போயிட்டேன். 

அங்க இருக்கிற பெண்களுக்கு அந்த மடத்தைச் சுத்தப்படுத்துறது, சாமியாருக்கு ருசியா சமைச்சுப் போடுறது மாதிரியான வேலைகள் கொடுக்கப்படுது. அதை அவங்க ரொம்ப ஆர்வத்தோட செய்றாங்க. அங்க வர்ற பெரும்பாலான பெண்கள் குடும்பத்தால நிறைய கொடுமைகளை அனுபவிச்சவங்களா இருக்காங்க. அந்த இடமும் அமைதியா இருக்கிறது நம்மளை ஈர்க்கிறதுக்கு ஒரு காரணமா அமையுது. சாமியார் முன்னாடி அந்த அமைதியான சூழல்ல கண்மூடி கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு, பிறகு கண்ணைத் திறக்கும்போது மனசு அமைதியா இருக்கிறதை ஃபீல் பண்ண முடியுது. நான் அதை அனுபவிச்சேன். அந்த அமைதியை சாமியார் தர்றதா நினைச்சு அவரை கடவுள்னு இங்க இருக்கிற மக்கள் கொண்டாடுறாங்க. தனக்கு ஆறுதலா யாரும் இல்லைனு அங்கேயே செட்டிலான என் அம்மாவை ஐஞ்சு வருஷம் கழிச்சே எங்களால மீட்க முடிஞ்சது. அதுவும் உடல்நிலை சரியில்லாம. அங்கிருந்து வந்த கொஞ்ச வருஷத்துலேயே அம்மா இறந்துட்டாங்க. ஆனா சாகுற வரைக்கும் அந்தச் சாமியாரின் பேரைச் சொல்லிட்டேதான் இருந்தாங்க. அந்தளவுக்கு அம்மாவை அவர் மெஸ்மரைஸ் பண்ணிருக்கார்''

ஆசிரமம்

கோமதி - பாண்டிசேரி 

''எனக்குக் கல்யாணம் ஆனபிறகுதான் சோதனை காலமே ஆரம்பமாச்சு. சினிமாவுல காண்பிக்கிற மாதியான மாமியார் கொடுமையை என் வாழ்க்கையில அனுபவிச்சேன். 27 வயசுல கல்யாணம். அடுத்த அஞ்சு வருஷமும் நான் அனுபவிச்ச கொடுமையை விவரிக்கவே முடியாது. தனிக்குடித்தனம் வந்தபிறகும் கொடுமை மறைமுகமா தொடரத்தான் செய்தது. என் பொண்ணை திருமணம் பண்ணிக்கொடுத்து என் கடமைகள் முடிஞ்ச பிறகு வாழ்க்கை விரக்தியா இருக்கிற மாதிரி தோணுச்சி.

அப்பதான் என் தோழி எங்க ஏரியாவுல இருக்கிற ஆசிரமத்தைப் பத்திச் சொன்னா. 'அங்க போன பிறகுதான் என்னை விட்டுப் போன வேலையும், பண வசதியும் வந்துச்சி'னு சொன்னா. அதை நம்பி நானும் அந்த ஆசிரமத்துக்குப் போனேன்.

ஊருக்கு ஒதுக்குப்புறமா, சாலை வசதி இல்லாத ஒரு காட்டுல அந்த ஆசிரமம் இருந்துச்சு. அங்கேயே தங்கிக்க கூரை வீடுகள் கட்டியிருந்தாங்க. அங்க போனதும் ஒரு ஆண் சாமியார், என் தலையில எலுமிச்சம்பழத்தை வைச்சார். 'எலுமிச்சம்பழம் சுத்துதா'னு கேட்டார். நான் அமைதியா இருந்தேன். அதுக்குப் பிறகு, 'உங்களுக்கு வாழ்க்கையில பல சோதனைகள் வந்திருக்குமே'னு கேட்டார். 'ஆமாம்'னு சொன்னேன். ஆனா, நான் என்ன பிரச்னையால பாதிக்கப்பட்டேனு அவர் சொல்லலை.

பிறகு, அந்த எலுமிச்சம்பழத்தைக் கையில கொடுத்து, 'ஒருவாரம் கழிச்சு இந்த எலுமிச்சம்பழத்தோட வாங்க. அப்படியே இருந்துச்சுனா பிரச்னை தீராம இருக்குனு அர்த்தம். கலர் மாறியிருந்துச்சுனா பிரச்னை தீர்ந்திடுச்சுனு அர்த்தம்'னு சொல்லி 501 தட்சணை வாங்கிக்கிட்டார்.

தினமும் 'ஓம் நமஹிரி'னு சொல்ல சொன்னாங்க. அவர் சொன்னபடி பழம் நிறம் மாறலை. ஏதோ ஒரு நம்பிக்கையில அவர் ஆசிரமத்துக்கு மறுபடியும் போனேன். ஆனா, என் வாழ்க்கையில எந்தப் பிரச்னையும் தீரல. அதுக்குப் பிறகு இன்னொரு ஆசிரமம் போனேன். அங்க இரண்டாயிரம் ரூபாய்க்கும் மேல செலவு பண்ணேன். என் கையில விபூதியைக் கொடுத்து நாற்பத்தெட்டு நாள்கள் தண்ணீரில் கலந்து குடிக்கச் சொன்னாங்க. இப்படி என் நாற்பது வயசு வரைக்கும் பல ஆசிரமங்களுக்கு நிம்மதி தேடி போயிட்டிருந்தேன். ஆனா நிம்மதி கிடைக்கலை. இப்போ கோயில், குளம்னு சுத்திட்டு இருக்கேன். 

ஆசிரமத்துக்காக நான் செலவழித்தப் பணத்தை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தியிருந்தாக்கூட புண்ணியம் கிடைச்சிருக்கும்னு இப்போ நினைக்கிறேன். நம்ம கஷ்டத்தை ஆசிரமத்துல உள்ளவங்க தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கிறாங்க. சில நேரங்களில் நம்மை தவறான வழியில அழைச்சுட்டுப் போயிடுறாங்க. நான் பல பேரை சந்தித்தப் பிறகுதான், வாழ்க்கையில் பிரச்னை வர்றது சகஜம்னு புரிஞ்சுக்கிட்டேன். நல்லவேளை நல்லபடியா திருந்தி, திரும்பி வந்துட்டேன்''.

தியானம்

விக்னேஸ்வரி, மேடவாக்கம், சென்னை

''திருவண்ணாமலையில் உள்ள என் தோழியின் சகோதரி கல்யாணத்துக்காக சென்னையிலிருந்து நாங்க பத்து பேர் கிளம்பிப் போனோம். கல்யாணத்துக்கு முதல் நாள் நைட்டே போய்ட்டதால அண்ணாமலையார் கோவில், ரமண மகரிஷி ஆஸ்ரமம்னு பல முக்கிய இடத்தை சுத்திப் பார்த்தோம்.

அப்பதான் அங்க இருக்கிற பிரபல சாமியார் ஆஸ்ரமத்துக்குப் போகலாம்னு என் தோழி கூப்பிட்டா. மத்தவங்க வரமாட்டேனு சொன்னதால அவகூட துணைக்கு நானும் போனேன். கிரிவலம் போற பாதையில அவரோட ஆஸ்ரமம் இருக்கு. உள்ள நுழைஞ்சதும் அவரோட பெரிய சிலையைப் பார்த்தேன். அந்த சிலைக்கு முன்னாடி பலபேர் தியானம் பண்ணிட்டு இருந்தாங்க. அவங்களைக் கடந்து மேடைக்கு போற வழியில ஒரு சீடர் எங்களை கூப்பிட்டார்.  என் கையில் நீர் நிரப்பிய ஒரு சங்கைக் கொடுத்து ஸ்படிக லிங்கத்துக்கு அபிஷேகம் செய்யச் சொன்னார்.  அபிஷேகம் செய்ஞ்சுட்டு நாங்க அவர் முன்னாடி உட்கார்ந்ததும் என் நெத்தியோட மத்தியில அவர் விரல் வைச்சு அழுத்திட்டே பேச ஆரம்பிச்சார்.

''தியானத்தின் மூலம் ஒருவர் எதையும் தன் வயப்படுத்தலாம். நீங்கள் தியானம் செய்து உங்கள் மனதை தூய்மைப்படுத்துங்கள். இதோ, இந்த விரல் மத்தியில் உங்கள் சிந்தனையைக் கொண்டு வாருங்கள். 

எண்ணற்ற சிந்தனைகள் அலைபாயும் இந்த ஜீவனுக்கு ஆத்ம நிம்மதி தேவை. இன்னும் சில தினங்களில் எங்கள் குரு உங்களுக்கு நேரில் வந்து தீட்சை தரவிருக்கிறார். பெங்களுருவில் நடைபெற இருக்கும்  நிகழ்வுக்கு நீங்கள் நேரில் வாருங்கள். ஆத்ம நிம்மதியைப் பெறுங்கள். 

இறையின் ஆசியையும் தீட்சையையும் உங்களால் பரிபூரணமாக உணர முடிந்தால், தொடர்ந்து நீங்கள் அங்கேயே சேவை செய்யலாம். இறைவனுக்கு சேவை செய்யும் பொருட்டே உங்கள் வரவு நிகழ்ந்திருக்கிறது. அதை ஏற்றுக் கொள்ளுங்கள்''னு சொல்லி அந்த சாமி படம் போட்ட பஞ்சாங்கம், பெங்களூர் நிகழ்வுக்கான அழைப்பிதழ் கொடுத்துட்டு என்னோட போன் நம்பரையும் வாங்கிகிட்டார்.

அந்த இடத்துல இருந்தவரைக்கும் மனசு அப்படியே கட்டுப்பட்ட மாதிரி இருந்தது. பிறகு என் ஃப்ரெண்டோட கல்யாணத்துல கலந்துகிட்டதுல எல்லாம் மறந்துபோச்சு. அந்தச் சம்பவத்தைப் பத்தி நினைக்க நேரமில்ல. நான் சென்னை வந்துட்டேன். ஆனா அந்த சாமியார் ஆஸ்ரமத்துலேருந்து தொடர்ந்து போன் பண்ணி தீட்சை வாங்க வாங்கனு தொல்லை பண்ணிட்டே இருந்தாங்க. வீட்ல நடந்ததை சொன்னதும் பெத்தவங்க விட்ட பரேடுல அமைதியாகிட்டேன்.

ஒருவேளை நான் கல்யாணத்துக்குப் போகாம இருந்திருந்தா நிச்சயம் பெங்களூர் நிகழ்வுக்குப் போயிருப்பேன். அவங்க சொன்னபடியெல்லாம் நடந்திருப்பேன். ஆசிரமத்துல நம்மை அப்படியே மெஸ்மரைஸ் பண்றாங்கனு மட்டும் புரிஞ்சது. அதுதான் அவங்க பலமா நினைக்கிறாங்க. நம்ம பலவீனமும் அதுதான். அது உடையாம பார்த்துகிட்டா இந்த சாமியார்கள் கிட்டயிருந்து தப்பிச்சுடலாம்''.


டிரெண்டிங் @ விகடன்