வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (30/08/2017)

கடைசி தொடர்பு:16:48 (13/07/2018)

'பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் மோசடி': நடவடிக்கை எடுக்க இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகேயுள்ள மைக்கேல்பட்டினம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் நடந்த ரூ.80 லட்சம் மோசடி குறித்தும் அந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
     

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மைக்கேல்பட்டினம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் போலியான ஆவணங்களைத் தாக்கல்செய்து பயிர் காப்பீட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பயிர் காப்பீட்டுக்கான இழப்பீட்டுத் தொகை வந்தவுடன் அத்தொகையை மைக்கேல்பட்டினம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியின் செயலாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் ஆகிய 3 பேரும் சேர்ந்து மொத்தம் ரூ.80 லட்சம் வரை மோசடி செய்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த முறைகேடுகள் தெரிய வந்ததையடுத்து சம்பந்தப்பட்ட கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் உரிய ஆதாரங்களைக் காண்பித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்தபோதும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த மோசடியால் மைக்கேல்பட்டினத்தைச் சேர்ந்த ஏராளமான உண்மையான விவசாயிகள் பாதிக்கப்பட்டு மன வேதனையில் இருந்து வருகின்றனர்.

பயிர் காப்பீடு திட்டத்தில் மோசடி குறித்து புகார் மனு
         

எனவே, மாவட்ட ஆட்சியர், பயிர் காப்பீட்டுத் தொகையில் மோசடி செய்த தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிச் செயலாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் மோசடி செய்துள்ள ரூ.80 லட்சம் பணத்தை மீட்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உரிய நடவடிக்கை இல்லையேல் மக்கள் போராட்டங்களில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை உருவாகும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர்  என்.கே.ராஜன் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.