வெளியிடப்பட்ட நேரம்: 21:56 (30/08/2017)

கடைசி தொடர்பு:21:56 (30/08/2017)

பிரதமர் மோடிக்கு தமிழர்கள் சார்பாக ஒரு கேள்வி!

ஆளுநர் மாளிகை

“ ஆளும்கட்சியின் நிலவும் குழப்பம், முதல்வருக்கு எதிராக ஆளுங்கட்சியின் எம்.எல்.ஏ-க்களின் போர்க்கொடி, எதிர்கட்சிகளின் எதிர்பார்ப்பு” என தமிழகத்தின் அரசு இயந்திரமே ஆளுநர் மாளிகையைச் சுற்றி வரும் நிலையில் தமிழகத்திற்கு என நிரந்தர ஆளுநர் பதவி காலியாகி ஒர் ஆண்டு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 

தமிழகத்தின் ஆளுநராக 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமனம் செய்யப்பட்டார் ஆந்திர முன்னாள் முதல்வர் ரோசய்யா. அவருடைய ஐந்தாண்டு பதவிக் காலம் கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் 31ம் தேதியோடு முடிவடைந்தது. அவருடைய பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா விரும்பினாலும்,மத்திய அரசு அதற்கு இடம் கொடுக்காததால் பதவிக்காலம் முடிந்தவுடன் ஓய்வுபெற்றார் ரோசய்யா. கவர்னராக ஒருவர் ஓய்வு பெற்றவுடனே, அடுத்த கவர்னர் குறித்த அறிவிப்பை ஒரு சில நாட்களிலே மத்திய அரசு அறிவிப்பு செய்துவிடும். தமிழகத்தின் கவர்னர் பதவி காலியானவுடன் அடுத்த ஆளுநர் யார் என்ற கேள்வி பலமாக எழுந்தது. ஆனால் இரண்டு நாட்கள் கழித்து மகாராஸ்டிராவின் ஆளுநராக இருக்கும் வித்தியாசாகராவ் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக செயல்படுவார் என்ற அறிவிப்பை மட்டும் மத்திய அரசு வெளியிட்டது. 

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமனம் செய்யபட்ட வித்தியாசாகராவ் தனது மனைவியுடன் மும்பையில் இருந்து சென்னை வந்தார். ஆளுநர் மாளிகையில் பொறுப்பு ஆளுநராக பதவிபிரமாணம் ஏற்றுக்கொண்டு மீண்டும் மும்பை சென்றுவிட்டார். வித்யாசாகரராவ் பொறுப்பு ஆளுநராக பதவியேற்ற இருபது நாட்களில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் தமிழகம் முழுவதுமே பரபரப்பு ஏற்பட்டது. ஜெயலலிதாவிற்கு என்ன ஆனது என்ற கேள்வி  எழுந்த நிலையில் முதல்வர் நிலை குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய ஆளுநர் மும்பை ராஜ்பவனில் பணியாற்றி கொண்டிருந்தது தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. 

முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சில நாட்கள் கழித்து மருத்துவமனைக்கு வந்து ஜெயலலிதாவின் நிலை குறித்து கேட்டறிந்தார். ஆனால், ஆளுநர் கூட ஜெயலலிதாவை நேரடியாக பார்க்கவில்லை என்ற சர்ச்சை வெடித்தது. ஜெயலலிதாவின் மறைவு வரை மும்பைக்கும் சென்னைக்கும் பறந்து கொண்டிருந்தார் ஆளுநர் வித்யாசாகர ராவ். ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமடைந்தபோது, மும்பையில் இருந்து சென்னைக்கு அவசரமாக வந்துசேர்ந்தார் ஆளுநர். அவர் வந்துசேர்ந்த பிறகுதான், ஜெயலலிதாவின் மரண அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்பிறகு பன்னீர் செல்வம் தலைமையி்ல் புதிய அரசிற்கு நள்ளிரவில் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
அதன்பிறகு அ.தி.மு.க வின் சட்டமன்ற உறுப்பினர்கள் சசிகலாவினை முதல்வராக தேர்வு செய்தனர். முதல்வர் பதவியேற்பு விழாவிற்காக சென்னைப் பல்கலைக்கழகத்தின் நுாற்றாண்டு விழா மண்டபத்தில் ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்ட நிலையில், கடிதத்தைப் பெறுவதற்கும் பதவியேற்று விழாவினை நடத்துவதற்கும் ஆளுநர் சென்னை வராமல் இருந்தார். சசிகலா தரப்பில் பதவியேற்பு விழாவை தவிர்ப்பதற்காகவே ஆளுநர் சென்னை வர மறுக்கிறார் என்று விமர்சனம் செய்யப்பட்டது. 

ஆளுநர் வித்யாசகர் ராவ்

ஆளுநர் வருவதற்கு காலதாமதம் செய்த நேரத்தில் பன்னீர்செல்வம் சசிகலாவிற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி பரபரப்பை ஏற்படுத்தினார். அ.தி.மு.க-வும் இரண்டாக உடைந்தது. அதன்பிறகே ஆளுநர் சென்னை வந்துசேர்ந்தார். ஆளுநரை சந்திப்பதற்கு இரண்டு அணியினரும் தயாராக இருந்தபோது, முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்திற்கு முன்னுரிமை கொடுத்து அவரையே முதலில் சந்தித்தார் ஆளுநர். அதன்பிறகு சசிகலா அணியினர் ஆளுநரை சந்தித்தனர். தி.மு.க.உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் ஆளுநரை சந்தித்தனர். பெரும்பான்மையை நிரூபிக்க, சட்டசபையைக் கூட்ட அறிவுறுத்தப்பட்டது.அதே நேரம் சசிகலாவிற்கு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டது. அதனால் எடப்பாடியை முதல்வராக பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். சட்டசபையில் ஸ்டாலின் சட்டை கிழிக்கப்பட்டது. கிழிந்த சட்டையுடன் ஆளுநரை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 

தமிழக அரசியல் நகர்வுகள் பல மாதங்களாக பல்வேறு பரபரப்புகளை சந்தித்து வந்தவேளையில் கூட நிரந்தர ஆளுநர் இல்லாமல் தமிழகம் தள்ளாடி வருகிறது. ஆளுநரை அவசரமாக சந்திக்க வேண்டும் என்றால் கூட மும்பைக்கு விமான டிக்கெட் எடுக்கவேண்டிய பரிதாப நிலை உள்ளது. இந்த நிலையில் தினகரன் எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி, ஆளும் கட்சிக்கு பெரும்பாண்மை இல்லை என்று எதிர்க்கட்சியினரின் உரத்த குரல் என கடந்த சில தினங்களாகவே தமிழக அரசியல் சூழ்நிலை பரபரப்புடன் காணப்படுகிறது. ஆனால், பன்னீருக்கு பதவியேற்பு நடத்திவைக்க உடனடியாக தமிழகம் புறப்பட்டு வந்தவர், பதவியேற்பு விழா முடிந்தவுடனே மும்பை பறந்துவிட்டார். அதே நேரம் 19 எம்.எல்.ஏக்கள் தமிழக முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று ரிசார்ட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். “நாங்கள் கொடுத்த மனுவிற்கு இதுவரை ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை” என்று இப்போதும் புலம்பிவருகின்றனர். “எதிர்கட்சியினர் கொடுத்த மனுவிற்கு இப்போது என்னால் நடவடிக்கை எடுக்க முடியாது” என்று வெளிப்படையாகவே சொல்லியுள்ளார் ஆளுநர். மனு வாங்குவதற்கே விமானத்தில் வந்து செல்லவேண்டிய நிலை பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது. 

மோடி

தமிழக பொறுப்பு ஆளுநராக வித்யாசாகரராவ் பதவிக்கு வந்து ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில் ஆளுநர் மாளிகையில் ஔவையார் சிலையை திறந்தது, பார்வையாளர்களுக்கு ஆளுநர் மாளிகையை சுற்றிப்பார்க்க அனுமதி கொடுத்தது, மூன்று துணைவேந்தர்கள் நியமனம்,உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம், சுதந்திர தினத்திற்கு டீ பார்ட்டி இது தான் ஒரு ஆண்டில் மும்பையில் இருந்து சென்னை வந்து ஆளுநர் மேற்கொண்ட 'முக்கிய' பணிகள்! அதைத் தாண்டி இரண்டு முறை தமிழக அமைச்சரவைக்கு பதவியேற்பு வைபவத்தை நடத்தி முடித்துள்ளார். ஆளுநர் பதவி அலங்கார பதவியாக சொல்லப்பட்டாலும், தமிழக அரசின் நிலையே நிலையற்றத் தன்மையில் இருக்கும் வேலையில் நிர்ந்தர ஆளுநர் ஒருவர் இருந்தால் மட்டுமே இன்றைய தமிழக அரசியல் சூழ்நிலைக்கு சாலச்சிறந்தாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்களும் தமிழக மக்களும். ஆனால், அதை ஏனோ இன்றுவரை தவிர்த்து வருகிறது மத்திய அரசு. 

தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் தகுதியுள்ள ஒரு நிரந்தர ஆளுநரை விரைவில் நியமியுங்கள் மோடி! 


டிரெண்டிங் @ விகடன்