வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (30/08/2017)

கடைசி தொடர்பு:22:30 (30/08/2017)

’சேலம் கலெக்டருக்கு சிலை வைப்பேன்’: கூட்டத்தில் பொங்கிய விவசாயி!

சேலத்தின் முதல் பெண் ஆட்சியராக நேற்று முன் தினம் (28.8.2017) புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்டார் ரோகிணி ராம்தாஸ் ஐ.ஏ.எஸ். மிகவும் சுறுசுறுப்பாகவும், விரைந்தும் தன் பணிகளை செய்துகொண்டிருக்கிறார். அதிகாரிகள் இவர் நடந்துசெல்லும் வேகத்தில் கூட ஓட முடியவில்லை என்று புலம்புகிறார்கள்.

முதல் நாள் பொறுப்பேற்ற உடனே கலெக்டர் அலுவலகம் முழுவதையும் சுற்றிப் பார்த்துவிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். மாற்றுத் திறனாளிகள் தங்கள் மனுக்களை எழுந்து நின்று தர முடியாதக் காரணத்தால் கலெக்டர் கீழே முட்டியிட்டு மனுக்களை வாங்கிக் கொண்டு, நடவடிக்கை எடுப்பதாக உறுதி கொடுத்து அனுப்பினார்.

சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு அதிகம் பேர் பலியான ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு நேரடி விசிட் சென்று மருத்துவமனையில் இருந்த குடிநீர் டேங்குகளை டார்ச் லைட் அடித்துப் பார்த்து சோதனையிட்டார். டெங்கு பாதித்தக் குழந்தை அருகே அமர்ந்து ஆறுதல் கூறி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தார்.

இதைத்தொடர்ந்து இன்று நடந்த விவசாயக் கூட்டத்தில் பேசிய கலெக்டர், 'நான் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த பெண். விவசாயிகளின் பிரச்னைகள் எனக்கும் தெரியும். ஊருக்கே உணவளிக்கும் ஒருவர் பசியால் இருக்கக் கூடாது என்ற பழமொழி இருக்கிறது. அதனால் விவசாயிகளின் பிரச்னைகளை முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுப்பேன்' என்றார்.

அதற்கடுத்த பேசிய விவசாயி ஒருவர், ‘இதுநாள் வரையில் சின்னதொரு அரங்கத்தில் நடந்து வந்த விவசாயிகள் குறைதீர்ப்பு முகாம் கூட்டங்கள் தற்போது மிகப் பெரிய அரங்கத்துக்கு மாற்றப்பட்டிருப்பதிலேயே தெரிந்துகொண்டோம். அம்மன் பராசக்தி போல் எங்கள் குறையைத் தீர்க்க வந்துள்ளீர்கள். எங்கள் பிரச்னைகள் தீர்ந்தால் உங்களுக்கு சிலை வைப்பேன்’ என்றார். இதற்கு சிரித்தபடியே, 'தனி நபருக்கு சிலை வைக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது’ எனக் கூறினார் ஆட்சியர் ரோகிணி.