தொலைத்தூரக் கல்வியில் சேரலாமா? மாணவர்கள் குழப்பம்!

கல்லூரிக்குச் சென்று படிக்க முடியாதவர்களும், அலுவலகப் பணி அல்லது சொந்த வேலையைச் செய்துக்கொண்டிருப்பவர்களும் தங்களுடைய அறிவை மேம்படுத்திக்கொள்ள தொலைத்தூரக் கல்வியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் தொலைத்தூரக் கல்வியில் இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, சான்றிதழ் பட்டயப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

தொலைத்தூர கல்வி

ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தொலைத்தூரச் சேர்க்கை மையத்தை பல்கலைக்கழகத்திலேயே தொடங்கின. அதன் பிறகு வியாபார நோக்கில் ஃப்ரான்சேஸ் அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து உலக முழுவதும் படிப்பு மையத்தைத் தொடங்கின. இதன்மூலம் பட்டப்படிப்புகள் காய்கறி கீரை போல் விற்பனை செய்யப்பட்டன. இதை எதிர்த்து பலரும் நீதிமன்றத்தை நாட, பல்வேறு இடங்களில் படிப்பு மையங்கள் தொடங்குவதற்கு பல்கலைகழக மானியக்குழு (UGC)  தடைவிதித்தது. மேலும், ஒவ்வொரு பல்கலைக்கழகமும் குறிப்பிட்ட எல்லைக்குள்தான் தன் படிப்பு மையத்தை வைத்திருக்க வேண்டும் எனக் கட்டுப்பாடு விதித்திருக்கிறது. இந்த விதிமுறைகளைப் பின்பற்றும் பல்கலைக்கழகங்ளுக்கு மட்டும் அங்கீகரிக்கும் வகையில் பல்கலைக்கழக மானியக்குழு தனது இணையதளத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொலைத்தூரக் கல்வி நிறுவனங்களின் பட்டியலை  http://www.ugc.ac.in/deb/pdf/Recognition%20for%202016-17-%20DEB.pdf வெளியிட்டிருக்கிறது.

இந்தப் பட்டியலில் தமிழ்நாட்டில் முக்கியப் பல்கலைக்கழகங்களாக உள்ள சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜ் பல்கலைக்கழகம்,  பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவை இடம்பெறவில்லை. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், இந்தி பிரசார சபா, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என ஐந்து கல்வி நிறுவனங்கள் மட்டுமே இடம்பிடித்திருக்கின்றன. இந்த நிலையில், மற்ற பல்கலைக்கழகங்களில் தொலைத்தூரக் கல்வியில் சேர்ந்தால் பட்டம் செல்லுமா என்பது குறித்து, மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழகத் தொலைத்தூரக் கல்வி மையத்தின் இயக்குநர் பேராசிரியர் பாஞ்சாலத்திடம் பேசினோம்.

தொலைத்தூர கல்வி

“2015-2016ம் கல்வி ஆண்டில், தொலைத்தூரக் கல்வி வழங்கும் பல்கலைக்கழகங்கள் தங்களுடைய மாநிலங்களுக்கு வெளியிலும் வெளிநாடுகளிலும் படிப்பு மையங்களை வைத்திருந்தால், அதை மூடவேண்டும் என்றும், அவர்களுடைய எல்லைகளுக்குள் தொலைத்தூரக் கல்வியை வழங்கவேண்டும் என பல்கலை மானியக் குழு வலியுறுத்தியிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழகங்கள் நீதிமன்றத்தை நாடின. பல பல்கலைக்கழகங்கள் வழக்குகள் தொடுத்திருப்பதால் அனைத்து வழக்குகளையும் ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்கும் வகையில் டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றப்பட்டது. டிவிஷன் பெஞ்ச் முன்பு இன்னமும் வழக்கு விசாரணைக்கு வரவில்லை. நீதிமன்றத்திலும், பல்கலைக்கழக மானியக்குழுவிலும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் சார்பில்  வெளிநாட்டிலும் வெளிமாநிலத்திலும் நடத்தப்பட்ட மையங்கள் மூடப்பட்டன என்ற விவரங்களை வழங்கியிருக்கிறோம். தற்போது பல்கலைக்கழக மானியக்குழு புதியதாக விண்ணப்பம் வழங்கும்படி கேட்டிருக்கிறது. நாங்களும் விண்ணப்பிக்கத் தயாராகிவருகிறோம். இதனால் தொலைத்தூரக் கல்வியின் மூலம் ஏற்கெனவே படித்துவரும் மாணவர்களுக்கும், புதியதாகப் படிப்பில் சேரவிருக்கும் மாணவர்களுக்கும் எந்த வகையிலும் பிரச்னை இல்லை" என்றார். 

பேராசிரியர்அண்ணா பல்கலைக்கழகத் தொலைத்தூரக் கல்வி இயக்குநர் பேராசிரியர் கீதா “பல்கலைக்கழக மானியக்குழுவின் அனுமதியுடன் தொலைத்தூரக் கல்வியைத் தொடங்கினோம். வெளிமாநிலங்களிலும் படிப்பு மையம் அமைக்கக் கூடாது என்று கட்டுப்பாடு வந்தவுடன் அதையும் கடைப்பிடித்தோம். ஆன்லைன் வழியாக கோர்ஸ்கள் நடத்தக் கூடாது என்று விதிமுறை வந்ததும், அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்ட ஆன்லைன் எம்.எஸ்ஸி., கோர்ஸை நடத்துவதைக் கைவிட்டோம். தற்போது புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்து அதன் அடிப்படையில் விண்ணப்பிக்க, பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியிருக்கிறது. அதன் அடிப்படையில் விண்ணப்பிக்க இருக்கிறோம். இதன்மூலம், தொலைத்தூரக் கல்வியில் ஏற்கெனவே படித்து முடித்த மாணவர்களுக்கும், படித்துக்கொண்டிருப்பவர்களுக்கும், படிப்பில் சேர இருப்பவர்களுக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது" என்கிறார்.

தொலைத்தூரக் கல்வியில் சேர இருப்பவர்கள், பல்கலைக்கழக மானியக்குழுவின் இணையதளத்தைப் பார்வையிட்ட பின் முடிவெடுப்பது நல்லது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!