வெளியிடப்பட்ட நேரம்: 20:05 (30/08/2017)

கடைசி தொடர்பு:08:58 (31/08/2017)

’சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ் சட்டப்படி செல்லாது!’ - தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அதிரடி

சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸ் தங்களை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாது என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தெரிவித்தனர். 


அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்குப் பின்னர் ஆளுநரைச் சந்தித்த தினகரன் ஆதரவு நிலைப்பாடு கொண்ட 19 எம்.எல்.ஏ-க்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை இழந்துவிட்டதாகக் கடிதம் அளித்தனர். அவர்கள் தனித்தனியாக அளித்திருந்த கடிதத்தில், முதலமைச்சரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். இதையடுத்து ஆளுநரைச் சந்தித்த 19 எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலுக்குப் பரிந்துரை செய்தார். அந்தப் பரிந்துரையைத் தொடர்ந்து, ஆளுநரைச் சந்தித்தது தொடர்பாக விளக்கமளிக்குமாறு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களான தங்கதமிழ் செல்வன் மற்றும் வெற்றிவேல் உள்ளிட்டோர் சட்டப்பேரவைச் செயலாளரைச் சந்தித்து விளக்கமளித்தனர். 

சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், ‘சபாநாயகர் அனுப்பிய கடிதம் சட்டப்படி செல்லாது. அது எந்தவிதத்திலும் எங்களைக் கட்டுப்படுத்தாது. அந்தக் கடிதம் முறைப்படி அனுப்பப்படவில்லை. இந்த விவகாரத்தில் அடுத்த 2 நாள்களில் நல்ல பதில் கிடைக்கும் என்று நினைக்கிறேன். அவ்வாறு கிடைக்காவிடில், குடியரசுத் தலைவரைச் சந்தித்து முறையிட இருக்கிறோம். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படாதது ஏன்? ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுப் புகார் கூறிய ஓ.பன்னீர்செல்வம் மீது கொறடா புகார் கூறாதது ஏன்? துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரைத் தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள்’ என்று அவர் தெரிவித்தார்.