வெளியிடப்பட்ட நேரம்: 08:09 (31/08/2017)

கடைசி தொடர்பு:11:16 (31/08/2017)

“தி.மு.க விடமும் பந்து இருக்கிறது”- ஸ்டாலினின் எச்சரிக்கை யாருக்கு?

MK. Stalin

"முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என்று கருதுவதற்கு இடமில்லை. அது அவர்கள் கட்சியில் நடைபெறும் உட்கட்சி விவகாரம்” என ஆளுநர் தெரிவித்தாக அவரை சந்தித்தவர்கள் கருத்து சொன்னதும், ஆளுநருக்கு எதிராக கொந்தளித்துள்ளார் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின்.

முதல்வர் பழனிசாமியை முதல்வர் பதவியில் இருந்து  எப்படியும் நீக்கிவிட வேண்டும் என தினகரன் அணியினர் தீவிரம் காட்டிவருகின்றனர். தினகரன் அணியை சேர்ந்த 19 சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த வாரம் தமிழக பொறுப்பு ஆளுநரை சந்தித்து “முதல்வர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவருக்கு அளித்துவரும் ஆதரவை நாங்கள் திரும்ப பெற்றுக்கொள்கிறோம்” என்று மனு அளித்துவிட்டுத் திரும்பினர். அ.தி.மு.க வின் சட்டமன்ற உறுப்பினர்களே முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று சொல்லியதும் பெரும்பான்மையை அ.தி.மு.க அரசு இழந்துவிட்டது என்று தி.மு.க தரப்பும் வேகமெடுத்தது. 

தி.மு.க . மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியின் சார்பில் ஆளுநரை சந்தித்து, “சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை அ.தி.மு.க இழந்துவிட்டது. எனவே சட்டசபையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் ஆளுநர் தரப்பிலிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லாமலே இருந்தது. இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் ஆளுநரை சந்தித்து, “ஆளும் கட்சி தனது பெரும்பான்மை இழந்துவிட்டதால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “தற்போதைய சூழ்நிலையில் சட்டப்படி தலையிட முடியாது . அதிமுக இரு குழுவாக பிரிந்துள்ளதால் உள்கட்சி விவகாரத்தில் ஆளுநர் தலையீடு இருக்க முடியாது” என ஆளுநர் சொல்லிவிட்டதாக தெரிவித்துள்ளார். 

கவர்னரிடம் தங்கள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் ஜனாதிபதியை சந்தித்து மனுக்கொடுக்க போவதாக ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்த நிலையில், திருமாவளவன் தெரிவித்த கருத்து ஸ்டாலினுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பி.ஜே.பிக்கு சாதகமாகவே ஆளுநர் செயல்படுவதால்தான் சட்டசபையை கூட்டுவதற்கு அவர் ஆணையிட மறுக்கிறார் என்று தி.மு.க தரப்பு கருதுகிறது. இன்று ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையும் அதனையே உறுதி செய்துள்ளது. 

ஸ்டாலின் அந்த அறிக்கையில் “திரு. எடப்பாடி கே.பழனிசாமியை முதலமைச்சராக நியமிப்பதற்கு ஏற்கெனவே ஆதரவு தெரிவித்து, கடிதம் கொடுத்த சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலில் இந்த 19 சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள். அந்த ஆதரவுக் கடிதத்தின் அடிப்படையில்தான் ஆளுநர், திரு. எடப்பாடி கே.பழனிசாமியை முதல்வராக நியமித்தார். அந்த நேரத்தில் எனக்கும் முதலமைச்சராக ஆதரவு இருக்கிறது என்று கடிதம் கொடுத்த திரு ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேரும் அன்று அதிமுகவில்தான் இருந்தார்கள். ஆனாலும் அன்றைக்கு ஏன் திரு. எடப்பாடி கே.பழனிசாமியை, “15 தினங்களுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு பெற வேண்டும்”, என்று ஆளுநர் அவர்கள் உத்தரவிட்டார்?...

ஏனென்றால், அரசியல் சட்டப்படி முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவைக்குக் கூட்டுப் பொறுப்பு உண்டு. அப்படியுள்ள அமைச்சரவை எப்போதும் சட்டமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்ற அமைச்சரவையாக இருக்க வேண்டும். அந்த நம்பிக்கையானது, பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவின் அடிப்படையில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளவே, முதல்வர் நம்பிக்கை தீர்மானத்தையோ அல்லது எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தையோ கொண்டு வருகின்றன. முதலமைச்சராக நியமிக்கப்படுபவரை சட்டமன்றத்தில் நம்பிக்கை பெற உத்தரவிடுவதும் இந்த அடிப்படையில்தான் என்பதை அரசியல் சட்டப் பதவியில் அமர்ந்திருக்கும் ஆளுநர் அறிந்திருக்கமாட்டார் என்பதை நான் நம்புவதற்கு தயாராக இல்லை.

எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள்

‘ஒரு அமைச்சரவையின் மீது நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பதை முடிவுசெய்ய வேண்டிய இடம் ராஜ்பவன் அல்ல என்றும் சட்டமன்றத்தில் நடத்தப்படும் வாக்கெடுப்பு மூலமே முடிவுசெய்ய வேண்டும்’ என்றும் திரு. எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் கூறப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பையும் ஆளுநர் படித்திருக்க மாட்டார் என்று நான் கருதவில்லை. ஆனாலும் மத்தியில் உள்ள பா.ஜ.க.வின் வற்புறுத்தலின் காரணமாகவும், தானே கைப்பிடித்து இணைத்து வைத்த, இந்த ஊழல் ஆட்சி நீடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவும், தமிழகத்தில் பா.ஜ.க.வின் கொல்லைப்புற அரசியல் பிரவேசத்திற்கு தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளவும் வழியேற்படுத்தி, தனது அரசியல் சட்டக் கடமைகளில் இருந்தும் தார்மீக பொறுப்பிலிருந்தும் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தவறிச் செல்வது ஜனநாயகத்தின் மிகமோசமான இருண்ட பக்கங்களாகவே அமையும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தனது அறிக்கையில் அவர், “மாண்புமிகு ஆளுநரிடம் கடிதம் கொடுத்த 19 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களும், சபாநாயகர் திரு. தனபால் அவர்களும் சட்டமன்ற உறுப்பினர்களின், அரசியல் சட்டம் தந்துள்ள வாக்குரிமையை தடுத்தோ அல்லது பறித்தோ, குறுக்கு வழியில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறும் கால அவகாசம் கிடைக்கும் வரை ஆளுநர் அவர்கள் பொறுத்திருப்பார் என்றால், ஜனநாயகத்தில் இதைவிட வேறு கேலிக்கூத்து எதுவும் இருக்க முடியாது. ஆகவே, தமிழக நலன்களைக் காப்பாற்றுவதற்கு, தன்னிடம் உள்ள பந்தை பயன்படுத்த திராவிட முன்னேற்றக் கழகம் எள் முனையளவும் தயங்காது” என்று ஆளுநருக்கு எச்சரிக்கைவிடும் வகையில் தனது அறிக்கையில்  தெரிவித்துள்ளார் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின். 


டிரெண்டிங் @ விகடன்