வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (30/08/2017)

கடைசி தொடர்பு:08:38 (31/08/2017)

'கோட்டையை நோக்கி நகர்வோம்!'- கோவையில் சீறிய கமல்ஹாசன்

'தேவைப்படும்போது கோட்டையை நோக்கிப் புறப்படுவோம்' என்று நடிகர் கமல்ஹாசன் கோவையில் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

கமல்ஹாசன்

கோவையை அடுத்துள்ள ஈச்சனாரியில் கமல்ஹாசன் ரசிகர் மன்றத்தின் அகில இந்தியப் பொருளாளர் தங்கவேல் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் கமல்ஹாசன்.

அப்போது அவர், 'ஓட்டுக்காகப் பணம் பெற்றுக்கொண்டு திருடர்களை அனுமதித்துவிட்டோம். அரசியல் சூழலை இப்படியே விட்டுவைக்காமல் மாற்ற வேண்டியது நம் கடமை. நாம் நம்முடைய வேலையைச் செய்வோம். என்றைக்காவது நமக்குத் தேவை வரும். அப்போது கோட்டையை நோக்கிப் புறப்படுவோம். என்னைப் பார்த்து இந்தச் சமூகத்தில் என்ன செய்தீர்கள்? என்று கேட்டால் எனக்குக் கோபம் வரும். வெறும் சொத்து சேர்த்து வைத்தால் மட்டும் போதாதது அதை மக்களுக்குப் பயன்படுத்த வேண்டும். தொடர்ந்து கேள்வி கேளுங்கள். போராடுங்கள். உங்கள் கையைக் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். தமிழகத்தைக் சுத்தமாக வைக்க போராடுவோம். இந்தச் சமூகத்தின் மீதான கோபம் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. என்னைப் பார்த்து தலைமை ஏற்க தைரியம் வந்துவிட்டதா என்று கேட்கிறார்கள். உங்களுக்குத் தலைமை ஏற்க தைரியம் வந்துவிட்டதா என்று நான் கேட்கிறேன். இதைத் திருமண விழாவாக நான் நினைக்கவில்லை. இது ஆரம்ப விழாவாக எண்ணுகிறோம் என்றார்.

கோவை விமான நிலையத்தில், நான் நேரடி அரசியலுக்கு வந்துவிட்டேன். அது ட்விட்டரில் வந்தால் என்ன? கோவையில் வந்தால் என்ன?' என்றவரிடம், 'விழாவில் கோட்டையை நோக்கிப் புறப்படுவோம் என்று  பேசியிருக்கிறீர்களே?' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, 'சாதாரண லேபர் யூனியன் பிரச்னை என்றால் கூட கோட்டையை நோக்கித்தான் நகர வேண்டும்' என்று பல்டி அடித்தார்.