மும்பையில் இயல்புநிலை திரும்புகிறது

மும்பை மழை

மும்பை மாநகரை வெள்ளக்காடாக்கிய மழை புதன் கிழமை அன்று சற்றே ஓய்ந்திருந்தது. கருமேகங்கள் விலகி வெண்மேகங்கள் தலைகாட்டின. இதனால், மும்பை மெள்ள மெள்ள இயல்பு நிலைக்குத் திரும்பிவருகிறது. சாலைகளில் உள்ள குப்பைகள், காற்றில் விழுந்த மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பணியில் மும்பை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பெருமழை காரணமாக, ஒரு குழந்தை உட்பட  ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மாநகராட்சிப் பணியாளர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. உடனே பணிக்குத் திரும்பும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாநகராட்சிப் பணியாளர்கள், மும்பையைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிகள், கல்லூரிகள் புதன் கிழமைவரை மூடப்பட்டிருந்தன. மும்பையின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் விநாயகர் சிலைகள், இன்னும் இரண்டு நாள்களில் கடலில் கரைக்கப்பட உள்ளன. எனவே, சாலைகளை அதற்குள் சரிசெய்யும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிறுத்தப்பட்டிருந்த மின்சார ரயில் போக்குவரத்து முழுவதுமாகத் தொடங்கியுள்ளது. எனினும், மோசமான வானிலை காரணமாக விமானம் வருகை, புறப்பாடு ஆகியவற்றில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சாந்தாகுரூஸ் விமானநிலையத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 33.14 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இது, கடந்த 2005-ம் ஆண்டுக்குப் பிறகு பதிவான அதிகபட்ச மழை அளவாகும். 2005-ம் ஆண்டில் 94 செ.மீ மழை பதிவானது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!