Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச் செயலர் குமரியில் திடீர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் ராமச்சந்திரன் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்த்து ஆய்வு செய்த அவர், இதைத் தெரிவித்தார். 


கன்னியாகுமரி மாவட்டத்தில், டெங்கு காய்ச்சல் பரவிவருகிறது. கேரள எல்லைப் பகுதியில் இந்த மாவட்டம் அமைந்துள்ளதால், டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. டெங்கு பாதிப்புகுறித்து இன்று தமிழகத் தகவல் தொழில்நுட்பத்துறையின் முதன்மைச் செயலாளர் ராமச்சந்திரன் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லுரி மருத்துவமனைக்குச் சென்று ஆய்வுசெய்தார். அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள டெங்கு பாதிப்பு நோயாளிகள்குறித்து விவரங்களைக் கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர், 'கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு மற்றும் பணிகள் தொடர்பாக ஆய்வுசெய்துவருகிறேன். இந்த மாவட்டத்தில், டெங்கு காய்ச்சல் காரணமாக 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. டெங்கு காய்ச்சல் தடுப்பு மருந்துகள் தேவையான அளவு கையிருப்பு உள்ளன. கேரள மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் கன்னியாகுமரி மாவட்டம் உள்ளதால், டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க ஒவ்வொரு கிராமத்திலும் குழுக்கள் அமைக்கப்பட்டு, நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடுத்தடுத்து   இரண்டு நோயாளிகள் போதிய சிகிச்சை இல்லாமல் இறந்ததுகுறித்து விசாரணை நடத்தப்படும்' என்று தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்ட பின்,  மாவட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின், அவரது முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவான் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பல்வேறு அரசுத் துறைகளைச் சார்ந்த மாவட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், வளர்ச்சிப் பணிகள் மற்றும் செயல்பாடுகள்குறித்து விவாதிக்கப்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement