திமிங்கிலங்கள் கரை ஒதுங்குவது ஏன்?

பருவநிலை மாற்றத்தினாலும் பிளாஸ்டிக்  மற்றும் பாலித்தீன் பொருள்களைக் கடலில் வீசுவதாலும் அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் அவ்வப்போது உயிரிழந்து கரை ஒதுங்கிவருவது தொடர்ச்சியாக நடந்துவருகிறது.

கரை ஒதுங்கிய கடல் வாழ் அரிய உயிரினமான புள்ளி சுறா

வங்கக்கடலில் உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதி, கடல் வாழ் உயிரினங்களின் சொர்க்கமாகத் திகழ்கிறது. சுமார் 3,600-க்கும் மேற்பட்ட அரியவகை  உயிரினங்கள் இந்தக் கடல் பகுதியில் உலாவுகின்றன.  இவற்றில்,  ஒரு சில இனங்களைத் தவிர, மற்ற அனைத்து உயிரினங்களும் கடலுக்கும், கடலை நம்பியிருக்கும் மீனவர்களுக்கும் நண்பர்களாகவே திகழ்கின்றன. சுமார் 320 கி.மீட்டர் நீளத்தையும், 50 கி.மீட்டர் அகலத்தையும் பரப்பளவாகக் கொண்டிருக்கும் மன்னார் வளைகுடா பகுதியில், 160 கி.மீ தூரம்கொண்ட பவளப் பாறைகளைக் கொண்ட தீவுகள், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கரையோரங்களில் அமைந்துள்ளது. இந்தக் கடல் பகுதியில் திமிங்கிலம், டால்ஃபின், கடல் பசு, வண்ண மீன்கள், கடல் குதிரை, கடல் ஆமை, கடல் அட்டை, கடல் பஞ்சு, முத்துச்சிப்பி, கடல் பாம்பு, புற்கள் எனப் பல்வேறு வகை உயிரினங்கள் உள்ளதால், இதை, 'கடல் வாழ் உயிரின தேசியக் காப்பகம்' எனத் தமிழக அரசு அறிவித்து, வனத்துறையினர்மூலம் பாதுகாத்துவருகிறது.

இந்நிலையில், பருவநிலை மாற்றங்கள், பிளாஸ்டிக், பாலித்தீன் போன்ற பொருள்கள் கடலில் போடுவது, சில மீனவர்களின் முறையற்ற மீன்பிடிப்பு முறை, பாறைகள் மற்றும் படகுகளில் மோதுதல் போன்றவற்றால், பல அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் அருகி வருகின்றன. இவற்றில், கடலில் பெரிய வகை இனமான திமிங்கிலங்களும் அடங்கும். பாம்பன் வடக்கு கடல் பகுதியில், நேற்று மாலை சுமார் 15 அடி நீளமும், 2 டன் எடையும் கொண்ட அம்மணி உழுவை எனக் கூறப்படும் புள்ளி சுறா மீன் உயிருக்குப் போராடிய நிலையில் கரை ஒதுங்கியது. இதைக் கண்ட நாட்டுப்படகு மீனவர்கள் பெரும் முயற்சிசெய்து, அந்த புள்ளிச் சுறாவை ஆழ்கடல் பகுதிக்கு இழுத்துச்சென்று விட்டுள்ளனர். கடந்த சில நாள்களில், இதுபோன்ற புள்ளிச் சுறாக்கள் கரை ஒதுங்குவது அதிகரித்துவருகிறது. ஏற்கெனவே பாம்பன், மரைக்காயர்பட்டினம் என கரை ஒதுங்கிய நிகழ்வைத் தொடர்ந்து, நேற்று மூன்றாவது முறையாக புள்ளிச் சுறா பாம்பனில் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது. உயிருடன் கரை ஒதுங்கியதால், அந்தச் சுறா மீனவர்களால் காப்பாற்றபட்டு கடலில் விடப்பட்டாலும், மாறிவரும் பருவநிலை மாற்றங்களில் சிக்காமல் உயிர் பிழைத்திருக்குமா என இனிமேல்தான் தெரியவரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!