'பந்து யாரிடம் உள்ளது'?- ஆளுநருக்கு வீரமணி கேள்வி

ஆளும்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவினால் ஆளும் அ.தி.மு.க அரசு தனது பெரும்பான்மையை இழந்துள்ளது. அ.தி.மு.க உறுப்பினர்களே “எங்களுக்கு முதல்வர் மீது நம்பிக்கையில்லை” என்று ஆளுநரைச் சந்தித்து மனு கொடுத்தபிறகும், ஆளுநர் சட்டசபையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடாமல் இருப்பது ஏன்? என்று திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “அ.தி.மு.க.வின் 19 சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் எடப்பாடி தலைமையிலான முதலமைச்சருக்குத் தந்த ஆதரவினை விலக்கிக் கொள்கிறோம் என ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் தனித்தனியே கையெழுத்துப் போட்டு ஆளுநரைச் சந்தித்து மனு கொடுத்துவிட்டனர். ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவரே, தாங்கள் மைனாரிட்டி ஆகியுள்ளோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததோடு, பணம் பாதாளம் வரை பாயும் என்ற முறையில் அதனால் நாங்கள் எங்கள் பலத்தினைக் காட்டுவோம் (குதிரைபேரத்தில் ஈடுபட்டு) என்று திருவாய் மலர்ந்ததெல்லாம் ஆரோக்கிய ஜனநாயகத்தின் அடையாளமா?

இந்நிலையில் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியினர் ஆளுநரைச் சந்தித்துப் பேசியபோது சட்டமன்றத்தைக் கூட்டி பலத்தை ஆளுங்கட்சி, குறிப்பாக முதல்வர் நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று ஆணையிடுவது ஆளுநர் அரசமைப்புச் சட்டப்படி செய்ய வேண்டிய இன்றியமையாத கடமையல்லவா? பந்து யாரிடம் உள்ளது? இது அவர்களின் உட்கட்சி விவகாரம், அதில் நான் தலையிட முடியாது என்று கூறுவது மக்களாட்சி மாண்புகளைச் சிதைக்கும் பொறுப்பு ஆளுநரின் பொறுப்பற்ற பேச்சாக உள்ளதே என்று பொதுமக்கள் கேட்கமாட்டார்களா? இது ஆளுநர் பதவியின் பெருமையைக் குலைப்பதாகாதா. ஓ.பன்னீர்செல்வம் அணியினர் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு இல்லை என்று ஆளுநரிடம் கூறிய நிலையில் Floor Test க்கு - சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆணையிட்டாரே!

அதே நிலைதானே இப்போதும்? இன்னும் கேட்டால் அப்போது, 10 எம்.எல்.ஏ-க்கள் கோரிக்கை; இப்போதோ 19 எம்.எல்.ஏ-க்கள் கோரிக்கை. கூடுதலாக நாங்கள் பெரும்பான்மையை இழந்துவிட்டோம் என்று அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலமும். ஏன் இந்த இரட்டை அளவுகோல்? எதற்காக இப்படி ஒரு முரண்பட்ட அணுகுமுறை? மக்கள் கிளர்ச்சிக்கு இவர்களே தூண்டி விடும் நிலை அல்லவா? அரசியலில் குதிரை பேர நடவடிக்கைகளுக்குத் துணை போவதாக ஆகாதா? இதனால் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!