Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஓரிரு நாள்களில் ஆட்சி மாற்றம்' - பகீர் கிளப்பும் மு.க.ஸ்டாலின்

.

சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான பனமரத்துப்பட்டி ராஜேந்திரனின் புதல்வி கார்த்திகாவிற்கும், ரகுநாத்திற்கும் நடைப்பெற்ற திருமண நிகழ்ச்சியில் தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியதோடு தமிழகத்தில் ஓரிரு நாள்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனப் பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.  

இந்தத் திருமணத்திற்கு ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், ஸ்டாலின் சகோதரி செல்வி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஏ.வ.வேலு, பொன்முடி, பொங்களூர் பழனிசாமி சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் வந்திருந்தார்கள். சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜா வரவில்லை.

நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், ''பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் முதலில் இளைஞர் அணி உறுப்பினராக இருந்து மாவட்ட இளைஞரணி பொறுப்பாளராகி பிறகு மாநில இளைஞரணி பொறுப்புக்கு வந்து சட்டமன்ற உறுப்பினராகி தற்போது மாவட்டச் செயலாளர் வரை உயர்ந்திருக்கிறார். என்றைக்கும் தலைவரின் தொண்டனாகவும், என் ஆரூயிர் சகோதரனாகவும் இருந்து வருகிறார்.

அவரைப் பாராட்டுவது என்னைப் பாராட்டுவதற்கு சமம். அன்பு, எளிமை மிக்க மனிதர். அதிர்ந்து பேச மாட்டார். உரத்த குரலில் பேசி பார்த்ததில்லை. அவர் சட்டசபையிலும், பொதுக்கூட்டத்திலும் பேசியதைப் பார்த்து ரசித்திருக்கிறேன். அப்படிப்பட்டவரின் மகளின் திருமண விழாவிற்கு நான் கலந்துகொள்ளுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வெளிப்படையாகச் சொன்னால் இந்தத் திருமண நிகழ்ச்சியில் நான் வரவேற்புரை அல்லது நன்றியுறை ஆற்ற வேண்டும். என்னை வாழ்த்துரை வழங்க சொல்லி விட்டார்கள்.

தந்தை பெரியார் முதன் முதலில் இந்த மாவட்டத்தில்தான் சீர்த்திருத்த திருமணம் செய்து வைத்தார். 1967 அண்ணா முதன் முதலில் சீர்திருத்த திருமணத்திற்கு சட்ட வரைவு கொடுத்து முதல் கையெழுத்தைப் போட்டார். இது சீர்த்திருத்த திருமணம் மட்டுமல்ல சுயமரியாதை திருமணம், தமிழ் முறைப்படி செய்யக்கூடிய திருமணம் அதனால்தான் நான் எப்படி வாழ்த்துகிறேன் என்பது மணமக்களுக்கும் தெரிகிறது. உங்களுக்கும் தெரிகிறது. இத்திருமணத்தை நடத்தி வைக்கின்ற நானும் உணருகிறேன்.

மணமகள் பெயருக்குப் பின்பும், மணமகன் பெயருக்குப் பின்பும் அவர்கள் படித்து வாங்கிய பட்டம் இருக்கிறது. இந்தப் பட்டம் பெற பாடுபட்டது திராவிட இயக்கம். திராவிட இயக்கம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நம்மால் படித்திருக்க முடியுமா? அப்படிப்பட்ட  திராவிட இயக்கத்தை அழிக்க சிலர் நினைக்கிறார்கள். யாராலும் இந்த இயக்கத்தைத் தொடக்கூட முடியாது.

தமிழ்நாட்டில் நிலவும் இந்த அசாதாரண சூழ்நிலையில் நான் தலைநகரில் இருக்க வேண்டும் எனப் பலரும் சொன்னார்கள். ஆனாலும், நான் இங்கு வந்திருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். ஆனால், நான் வரவில்லை என்றால்தான் ஆச்சர்யம். இங்கு பேசும் போது வழக்கறிஞர் பிரிவு தலைவர் தமிழ்மணி 89 எம்.எல்.ஏ-க்கள் 118 எம்.எல்.ஏ-க்களாக மாறாதா என்றார். தலைவர் கலைஞர் எங்களைக் குறுக்கு வழியில் உள்ளே போகச் சொல்லவில்லை. மக்களால் நாங்கள் உள்ளே போக வேண்டும் என்பதையே விரும்புகிறோம். 118 எம்.எல்.ஏ-க்கள் அல்ல 200 எம்.எல்.ஏ-க்களாக மாறும்.

19 எம்.எல்.ஏ-க்கள் கவர்னரைச் சந்தித்து தற்போது இருக்கும் முதல்வருக்குத் தங்களுடைய ஆதரவு இல்லை என்று மனு கொடுத்து இருக்கிறார்கள். நேற்று இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகளும் கவர்னரிடம் மனு கொடுத்து விட்டு வெளியே வந்து பேட்டிகொடுக்கும் போது அவர்கள் சொல்லுகிறார்கள் நாங்கள் கவர்னரிடம் மனு கொடுக்கும் போது அவர்களின் உட்கட்சி பிரச்னையில் நான் எப்படித் தலையிட முடியும் என்றாராம்.

ஓ.பன்னீர்செல்வம் 10 எம்.எல்.ஏ.,வோடு கவர்னரைச் சந்தித்து மனு கொடுத்த உடனே எப்படி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தீர்கள். 19 மட்டுமல்ல அந்த அணியில் 21 லிருந்து படிப்படியாக 40 வரை சேரும் என்று கூறுகிறார்கள். 89 பந்துகள் இருக்கின்றன. அந்தப் பந்துகளும் தாக்கும்.

அதற்காக இன்னும் எவ்வளவு நாள்கள் பொறுமையாக இருப்பீர்கள் என்கிறார்கள். இது எங்கள் சுயநலத்தினால் அல்ல. மக்களின் பொதுநலத்தை கருத்தில் கொண்டு இன்னும் ஓரிரு மாதங்கள் அல்ல ஓரிரு நாள்களிலேயே ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும். நிச்சயம் திருமணம் என்றால் பாயாசம் இருக்கும். தி.மு.க., திருமணம் என்றால் அரசியல் இருக்கும்'' என்றார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement