Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமைச்சர் விஜயபாஸ்கரின் உத்தரவு வீட்டை கொளுத்தும் செயல்! ராமதாஸ் காட்டம்

வாகன ஓட்டிகள் அனைவரும் நாளை முதல் தங்களது மூல ஓட்டுநர் உரிமத்தை கைவசம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவைக் காரணம் காட்டி காவல்துறையினர் அத்துமீறும்போது தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படும் ஆபத்துள்ளது என்று எச்சரித்துள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ்,  இந்த உத்தரவை அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வாகன ஓட்டிகள் அனைவரும் நாளை முதல் தங்களது மூல ஓட்டுநர் உரிமத்தை கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ரூ.500 அபராதம், 3 மாத சிறைத் தண்டனை ஆகிய இரண்டில் ஒன்றோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது நடைமுறை சாத்தியங்களையும், எதார்த்தத்தையும் புரிந்துகொள்ளாமல் பிறப்பிக்கப்பட்ட அபத்தமான ஆணையாகும்.

விதி மீறல்களுக்காக ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டவர்கள் அதன் நகலை வைத்துக்கொண்டு வாகனங்களை ஓட்டுவதாகவும் அதைத் தடுக்கவே அனைத்து ஓட்டுநர்களும் மூல உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார். இது மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தும் செயலுக்கு ஒப்பானதாகும். ஒருவரின் ஓட்டுநர் உரிமம் செல்லுபடியாகும் நிலையில் உள்ளதா? அது ரத்து செய்யப்பட்டு விட்டதா? என்பதை கண்டுபிடிக்க ஏராளமான வழிகள் உள்ளன. போக்குவரத்து துறையிடம் உள்ள ஓட்டுநர் உரிமம் குறித்த தகவல் தொகுப்பை காவல்துறை தகவல் தொகுப்புடன் இணைப்பதன் மூலம் கையடக்கக் கருவியில் ஒருவரின் ஓட்டுநர் உரிம எண்ணை உள்ளிடுவதன் மூலம் செல்லுபடியாகும் நிலையில் உள்ளதா? என்பதை அறிய முடியும். அதற்காக அனைத்து ஓட்டுநர்களும் மூல உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிடுவது தேவையில்லாத ஒன்றாகும்.

அனைத்து ஓட்டுநர்களும் மூல உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்று ஆணையிட்டதன் நோக்கம் வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால், அது நடைமுறை சாத்தியமில்லை. ஓட்டுநர்கள் பணி நிமித்தமாக பல ஊர்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும். அப்போது மூல உரிமம் தொலைவதற்கோ, மழையில் நனைந்து வீணாவதற்கோ வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு தொலைந்தாலோ, சேதமடைந்தாலோ புதிய உரிமம் வாங்கும் வரை ஒரு மாதமோ, இரு மாதங்களோ பணி செய்ய முடியாது. இதனால் அவர்களின் வருமானம் பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி, ஓட்டுநர்கள் பணிசெய்யும் இடங்களில், பாதுகாப்புக்காக அவர்களின் உரிமங்களை வாங்கி வைத்துக்கொள்வார்கள் என்பதால், ஊதியத்துக்கு வாகனம் ஓட்டுபவர்கள் மூல உரிமத்தை கையில் வைத்திருப்பது சாத்தியமற்றது. இந்த உத்தரவைக் காரணம் காட்டி காவல்துறையினர் அத்துமீறும்போது தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படும் ஆபத்துள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் மூல உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை அரசு உடனடியாக திரும்பப்பெற்று இப்போதுள்ள நிலையே தொடருவதற்கு வழிவகை செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement