திருச்சிக்கு வந்த சிறிய ரக விமானத்துக்கு “வாட்டர் சல்யூட்” முறையில் வரவேற்பு!

சிறிய ரக விமானம்

திருச்சி விமான நிலையத்துக்கு வந்த புதிய விமானத்துக்கு வாட்டர் சல்யூட் அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது, பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.

திருச்சி முதல் சென்னைக்கு சிறிய ரக விமான சேவை இன்று தொடங்கப்பட்டது. 70 இருக்கைகள் கொண்ட இந்த சிறிய ரக விமானத்தை, ஏர் இந்தியா நிறுவனத்தின் சார்பு நிறுவனமான அலையன்ஸ் ஏர்வேஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. தினசரி சேவையாக தொடங்கப்பட்டுள்ள சிறிய ரக விமானம், இன்று காலை திருச்சி விமான நிலையத்தில் தரை இறங்கியது. சென்னையிலிருந்து வந்து திருச்சியில் தரையிறங்கிய விமானத்துக்கு விமான நிலைய நிர்வாகம் சார்பில், ’வாட்டர் சல்யூட்’ வழங்கி வரவேற்பு வழங்கப்பட்டது. இந்தக் காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், விமான நிலைய இயக்குநர் குணசேகரன் மற்றும் பாதுகாப்புப் படை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சிறிய ரக விமானம்

இந்த விமானம்குறித்து பேசிய அலையன்ஸ் ஏர் அதிகாரிகள், “இந்த புதிய விமானமான அலையன்ஸ் ஏர்வேஸ் சேவை, சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கான விமான சேவையைத் தொடங்கியுள்ளது. இந்த சேவைக்காக அதிநவீன வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள ATR 72-600 ரககுட்டி விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த விமானங்களில் 70 பேர் பயணிக்க முடியும். பெருநகரங்களுடன் சிறு நகரங்களை இணைக்கும் முயற்சியாக இந்த விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தினசரி காலை சென்னையிலிருந்து 7.05 மணிக்கு புறப்பட்டு 8.05 மணிக்கு திருச்சி வந்தடையும். மீண்டும் 9.05 மணிக்கு புறப்பட்டு 10.05 மணிக்கு சென்னை சென்று சேரும். தற்போது கோவை, திருச்சிக்கும் குட்டி விமானங்கள் இயக்கப்படுகிறது. அடுத்த கட்டமாக, சேலம், தூத்துக்குடி நகரங்களுக்கும், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கும் இந்த விமான சேவை விரிவுபடுத்தப்படும்'' என்றார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!