சாக்கு உடைகளை அணிந்து நேர்த்தி செலுத்தும் பக்தர்கள்!

உடல் நலம் வேண்டி சாக்கு உடைகளை அணிந்து நேர்த்திக் கடன் செலுத்தும் விநோத பழக்கத்தை கமுதி பகுதி பக்தர்கள் கடைபிடித்து வருகின்றனர்.

சாக்கு வேடம் அணிந்து நேர்த்தி செலுத்திய பக்தர்கள்


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களில் திருவிழாக்களின்போது சகதி மற்றும் சேற்று மண்ணை உடல்களில் பூசிக்கொண்டு நேர்த்திக் கடன் செலுத்துவது போன்ற விநோத பழக்கங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

இவற்றில் ஒரு வகை நேர்த்தி, உடல் முழுவதும் சாக்குகளைச் சுற்றிக்கொண்டு நேர்த்தி செலுத்துவது. கமுதி அருகே உள்ளது செங்கப்படை எனும் கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள அழகு வள்ளி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பொங்கல் விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நடைபெறும் 10 நாள்களிலும் பக்தர்கள் அக்னி சட்டி  எடுத்தல், பால் குடம் எடுத்தல், பூக்குழி இறங்குதல் என பல்வேறு வகையான நேர்த்திகளைச் செலுத்தி அம்மனின் அருள் வேண்டினர்.

 விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று பக்தர்கள் தங்கள் உடல் நலன் வேண்டியும், குழந்தை வரம் வேண்டியும் விநோத நேர்த்திக் கடன் செலுத்தின. இதன்படி சாக்குகளை முழுக்கால் பேண்ட், சட்டை போன்று தைத்துக்கொண்டு அதற்குள் வைக்கோலை திணித்துக்கொண்டும், தலையை சாக்கினாள் மூடிக்கொண்டும் சாக்கு மனிதர்கள் போல் வேடமிட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து அழகு வள்ளி அம்மன் கோயிலில் நேர்த்தி செலுத்தினர்.

இந்த  சாக்கு வேடமணியும் விநோத நேர்த்தியை அம்மனுக்குச் செலுத்துவதாக வேண்டிக்கொண்டால், தாங்கள் நினைத்தது நிறைவேறுவதுடன், நல்ல உடல் ஆரோக்கியமும் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடம் நிலவி வருவதாகவும், நூறு ஆண்டுகளுக்கு மேலாக இதுபோன்ற நேர்த்திகள் அம்மனுக்குச் செலுத்தப்பட்டு வருவதாகவும் இக்கிராம மக்கள் கூறுகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!