Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'பந்து யார் கையில் இருக்கிறது?' - விடை சொல்கிறார் பீட்டர் அல்போன்ஸ் #HallOfShameADMK

'பந்து அ.தி.மு.க கையில்தான் இருக்கிறது; என் கையில் இல்லை' என்று ஆளுநர் வித்யாசாகர் கூறியிருப்பது தமிழக அரசியல் சூழ்நிலையில் எதிர்க்கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 'மத்திய பி.ஜே.பி அரசு, தமிழகத்தை அப்பட்டமாக ஆட்டிப் படைக்கிறது' என்று கொந்தளிக்கின்றனர். இதற்கிடையில், சட்டசபையில் குட்கா விவகாரம் குறித்து கேள்வியெழுப்பிய தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளும் தீவிரமாகியிருப்பது தமிழக அரசியல் அரங்கை சூடேற்றியிருக்கிறது. 
இந்நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலைகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களிடம் பேசினோம்....

பீட்டர் அல்போன்ஸ்


''பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரும் எதிர்க்கட்சிகளிடம், 'அது அ.தி.மு.க உட்கட்சிப் பிரச்னை. நான் ஒன்றும் செய்யமுடியாது' என்று ஆளுநர் பதிலளித்திருக்கிறாரே?''

''அரசியல் சாசன சட்டத்தையும், நெறி சார்ந்த ஜனநாயகத்தையும் பாதுகாக்கக்கூடிய கடமையில் இருப்பவர்தான் ஆளுநர்! ஆனால், அவரே 'குதிரை பேர' அரசியலுக்கு வழிவகுத்துக் கொடுத்திருப்பது தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய துரதிர்ஷ்டம்!
அ.தி.மு.க கட்சிக் கொறடாவே, தங்கள் கட்சியைச் சார்ந்த 19 எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சபாநாயகரிடம் புகார் செய்தபிறகு, அதனை உட்கட்சிப் பிரச்னை என்று ஆளுநர் எப்படி சொல்கிறார் என்று தெரியவில்லை. அ.தி.மு.க ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிலே அவர்கள் புகார் செய்திருந்தால், அதனை உட்கட்சிப் பிரச்னை என்று ஆளுநர் சொல்லியிருக்கலாம். ஆனால், ஆளும் கட்சியின் கொறடாவே, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மீது புகார் செய்து, அந்தப் புகாரை சபாநாயகரும் ஏற்றுக்கொண்டு, அதற்கான முகாந்திரத்தை தெரிவிக்கும்படி சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியபிறகும், ஆளுநர் அதனை 'உட்கட்சிப் பிரச்னை' என்று சொல்வது மிகப்பெரிய அரசியல் விபரீதம்!''

''19 எம்.எல்.ஏ-க்கள் கட்சித் தாவலில் ஈடுபடவில்லை; கட்சியை விட்டு நீக்கப்படவில்லை என்றெல்லாம் காரணம் சொல்லியிருக்கிறாரே ஆளுநர்?''

''19 உறுப்பினர்கள் எண்ணிக்கை இல்லையென்ற உடனேயே  முதல் அமைச்சருக்குப் பெரும்பான்மை இல்லை என்றாகிவிடுகிறது. ஆனால், ஆளுநரோ 'உட்கட்சிப் பிரச்னை' என்று சொல்லி சமாளிக்கிறார். ஓர் உதாரணத்துக்குச் சொல்கிறேன்... இதே தமிழக அரசு, 4 கட்சிகள் சேர்ந்த ஒரு கூட்டணி அரசாக இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். அதில் ஒரு கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் மட்டும் வெளியே வந்து, 'முதல்வர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை' என்று சொன்னால், அதனை 'உட்கட்சிப் பிரச்னை' என்று ஆளுநரால் ஒதுக்கிவிடமுடியுமா?''

ஆளுநர்

''டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 'தற்போதைய முதல்வரை, துணை முதல்வரை மாற்ற வேண்டும்' என்றுதானே கோரியிருக்கிறார்கள். அப்படியென்றால், அது அவர்களது உட்கட்சிப் பிரச்னைதானே?''

''இன்றைக்குப் பெரும்பான்மை இல்லை என்று சொல்லப்பட்டிருப்பது, எடப்பாடி தலைமையிலான தமிழக அரசுக்குத்தான். அ.தி.மு.க அரசுக்கு அல்ல. சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கோரும்போதுகூட, 'எனது தலைமையிலான அரசுக்கு நம்பிக்கை' என்றுதான் கோரியிருக்கிறாரே தவிர, அ.தி.மு.க அரசுக்கு நம்பிக்கைத் தீர்மானம் கோரவில்லை. 
இப்போது உள்ள நிலைமை குதிரை பேர அரசியலுக்கும் அல்லது ஆள்தூக்கி அரசியலுக்கும்தான் வழிவகுக்கும். மிகப்பெரிய ஜனநாயகத்துக்கு விரோதமான இந்தப் பாவச்செயலைச் செய்வதற்கு மத்திய அரசும், ஆளுநரும் வேண்டுமென்றே துணை நிற்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.''

''ஆளுநரின் செயல்பாட்டுக்கும் மத்திய பி.ஜே.பி அரசுக்கும் தொடர்பிருப்பதாக நம்புகிறீர்களா?''

''நேற்றைய தினம் தமிழக அமைச்சர்கள் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் மற்றும் அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்ததற்கும் ஆளுநருடைய செயல்பாட்டிற்கும் இடையே இருக்கும் தொடர்பை சாதாரணக் குடிமகன்கூட அறிவான். மத்தியில் இருக்கிற பி.ஜே.பி அரசு என்ன சொல்கிறதோ, அதனை செயல்படுத்தக்கூடிய ஒரு ஏவலாள் போல ஆளுநர் நடந்துகொண்டால், அது பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு விழுகின்ற மிகப்பெரிய சம்மட்டி அடி.''

எடப்பாடி ஓ.பி.எஸ்

''குட்கா விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் பிரச்னை கிளப்பிய தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 21 பேர் மீது நடவடிக்கை எடுக்க உரிமைக்குழு கூடியுள்ளதே?''

''தமிழ்நாட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை. குட்காவை பகிரங்கமாக விற்பதற்கு ஏற்பாடு செய்து, கையூட்டுப் பெற்றவர்கள் எல்லாம் தேசியக்கொடி பறக்கின்ற-போலீஸ் சல்யூட் வாங்குகின்ற பதவியில் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால், அந்த உண்மையை பொதுவெளிச்சத்துக்கு கொண்டுவந்த உறுப்பினர்கள் பதவி இழக்க வேண்டிய சூழ்நிலையா? இது என்ன ஜனநாயகம்? 
குட்காவை விற்பதற்கு ஏற்பாடு செய்தவர்களும் அதனால் மாதத்துக்கு 40 கோடி ரூபாயை லஞ்சமாகப் பெற்றவர்களும் ஆளுங்கட்சியின் அமைச்சர்களாக இருக்கிறார்கள்; காவல்துறையின் உயர் மட்ட அதிகாரிகளாகவும் இருக்கிறார்கள். ஆனால், இதனை பொதுமக்களின் கவனத்துக்குக் கொண்டுவந்த சட்டமன்ற உறுப்பினர்களைத் தண்டிப்பதென்பது எந்தவகையில் நியாயம்? இதைத்தான் பாரதி அன்றே பாடினான்... 'பேய் அரசு செய்தால், பிணம் தின்னும் சாத்திரங்கள்' என்று. அதுதான் இப்போது நடக்கிறது.
ஒருவேளை தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களேயானால், அந்த செய்தியைப் பிரசுரித்த பத்திரிகைகள், ஒளிபரப்பிய ஊடகம் ஆகியவற்றின்மீதும் நடவடிக்கை எடுப்பார்களா?''

''ஆளுங்கட்சிக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமைக்கும் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மீதான திடீர் நடவடிக்கை முயற்சிக்கும் சம்பந்தம் இருப்பதாக நினைக்கிறீர்களா?''

''நிச்சயமாக... எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்தி, செயற்கையானப் பெரும்பான்மையை உருவாக்குவதற்காக சபாநாயகரைப் பயன்படுத்துகிறது ஆளுங்கட்சி. அதாவது 'காலுக்குத் தகுந்த செருப்பை வாங்குவதற்குப் பதிலாக, செருப்புக்குத் தகுந்தாற்போன்று காலை வெட்டிக்கொள்ளும் முயற்சியிலே ஆளுங்கட்சி ஈடுபட்டிருக்கிறது.' நிச்சயம் நீதிமன்றம் இதில் தலையிடும் என்று நான் நம்புகிறேன்!''

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement