Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"ஆளுநரின் மௌனத்துக்கு எதிராகப் போராட நேரிடும்!’’ - முத்தரசன் எச்சரிக்கை #HallOfShameADMK

முத்தரசன்

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசுக்கு அளித்த ஆதரவை டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் விலக்கிக் கொண்டிருப்பதையடுத்து, இந்த அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

சேலத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், ''தமிழகத்தில் ஜனநாயகக் கேலிக்கூத்தாக வெறும் 75 எம்.எல்.ஏ-க்களை மட்டுமே வைத்துக் கொண்டு ஈ.பி.எஸ். ஆட்சி செய்கிறார். அதற்கு துணை போகிறார் தமிழக ஆளுநர். பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லுங்கள். இல்லையென்றால் ஆட்சியைக் கலைத்து விடுங்கள். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முதல்வர், அமைச்சர்கள் செல்லும் இடமெல்லாம் கருப்புக்கொடி காட்டுவோம்'' என்று எச்சரித்தார்.

எடப்பாடி அரசையும், மத்திய அரசையும் ஒரு விளாசு விளாசினார் முத்தரசன். மேலும் அவர், ''செப்டம்பர் ஒன்று முதல் 10-ம் தேதிவரை 10 நாட்கள் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஊராட்சி, பேரூராட்சி, ஒன்றிய, மாவட்ட மற்றும் மாநகர அளவில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் நடைப்பயணம் மேற்கொள்கிறோம். சேலத்தில் 200 குழுக்களாக, குழுவிற்கு 10 பேர் வீதம் இந்த நடைப்பயணத்தில் சென்று மக்களைச் சந்திக்க உள்ளோம். அப்போது, மத்திய அரசின் தவறான கொள்கைகளையும், அதற்குத் துணைபோகும் மாநில அரசைக் கண்டித்தும் பிரசாரம் செய்ய உள்ளோம்.

காவிரிப் பிரச்னையிலும், நீட் தேர்வு விவகாரத்திலும் மாநில அரசின் உரிமையை எடப்பாடி தலைமையிலான அரசு பறிகொடுத்துள்ளது. ஜி.எஸ்.டி. வரியால் சேலத்தில் வெள்ளி தொழில் முடங்கி விட்டது. கடந்த மூன்று மாதத்தில் டீசல் விலை ஆறு ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதனால், அத்யாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் பதவியை தக்கவைத்துக் கொள்வதிலேயே தற்போதைய ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்.

எப்போதும் இல்லாத அளவுக்கு ஜனநாயகம் கேலிக் கூத்தாகிவிட்டது. இந்த அரசு பெருமான்மையை இழந்து விட்டது. தினகரனுக்கு ஆதரவாக 21 எம்.எல்.ஏ-க்கள் செயல்படுகிறார்கள். 19 பேர் ஆளுநரைச் சந்தித்து எடப்பாடி அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். ஆனால் இன்று வரை ஆளுநர், அந்த கடிதத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆளுநரின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் சேர்ந்து அ.தி.மு.க-வின் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் கூட்டத்தை நடத்தினார்கள். அந்தக் கூட்டத்திற்கு தினகரன் ஆதரவாளர்களைத் தவித்து, 110 எம்.எல்.ஏ.-க்கள் வந்திருக்க வேண்டும். ஆனால், 75 எம்.எல்.ஏ.-க்கள்தான் பங்கேற்றனர். 35 எம்.எல்.ஏ-க்கள் ஏன் வரவில்லை? எடப்பாடி அரசுக்கு எதிரான மனநிலையில் அவர்கள் இருக்கிறார்கள். எனவே,  இந்த அரசு 75 எம்.எல்.ஏ-க்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஆட்சி செய்து வருகிறது. 

தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர், ஆளுநரைச் சந்தித்து மனு கொடுத்திருக்கிறார்கள். ஆளுநர் ஜனநாயக முறைப்படி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும். இல்லையென்றால், தமிழகத்தில் இந்த ஆட்சியைக் கலைக்க வேண்டும். ஆனால், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார். 

தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலாவை சட்டசபைக்குள் கொண்டு சென்றதாகக் கூறி, தி.மு.க., எம்.எல்.ஏ.-க்கள் மீது சட்டசபை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேர்தலில் பணம் கொடுப்பதாகக் கூறி, நாடாளுமன்றத்தில் பணத்தைக் கொட்டினார்கள். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுபோன்றதுதான் பான்மசாலா, குட்கா விவகாரமும். எதிர்க்கட்சி இல்லாமல் ஆட்சி செய்யலாம் என்று அ.தி.மு.க., நினைக்கிறது.

ஆளுநர் தொடர்ந்து இதுபோன்று செயல்படுவாரேயானால், ஆளுநர் மாளிகை, சட்டசபை முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தும். முதல்வர், அமைச்சர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் கருப்புக் கொடி காட்டுவோம். .

அ.தி.மு.க., என்ற நெல்லிக்காய் மூட்டை தற்போது உடைந்து சிதறி விட்டது. அந்தக் கட்சியை வைத்து, தமிழகத்தில் காலூன்ற பி.ஜே.பி. முயற்சிக்கிறது" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement