Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“ஜெயலலிதா கொடுத்த பதவியை பறிக்க தினகரன் யார்?!’’ ஆவேச அமைச்சர் #HallOfShameADMK

தினகரனின் துணைப்பொதுச் செயலாளர் பதவியே செல்லாது என அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் அவரது அறிவிப்புகள் யாரையும் கட்டுப்படுத்தாது என தெரிவித்துள்ளார் அமைச்சர் காமராஜ்.
 

காமராஜ்


அ.தி.மு.க-வின் இரு அணிகளாக செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இணைந்ததையடுத்து கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவை அப்பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளனர். சசிகலாவை நீக்க எடப்பாடி தரப்புக்கு தைரியம் உள்ளதா என சவால் விட்டுள்ளார் அ.தி.மு.க-வின் கர்நாடக மாநில பொறுப்பாளரும் தினகரனின் தீவிர ஆதரவாளருமான புகழேந்தி. சசிகலாவை நீக்கினால் நடப்பதே வேறு என அனல் கக்கியுள்ளார் தினகரனின் இன்னொரு ஆதரவாளரான நாஞ்சில் சம்பத். இந்நிலையில், கட்சியிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் காமராஜ், முன்னாள் அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் உள்ளிட்ட பலரை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கம் செய்துவருகிறார் டி.டி.வி. தினகரன்.  

அமைச்சர் காமராஜை கட்சியிலிருந்து நீக்கியதும், அவரது ஆதரவாளர்கள் தினகரன் கொடும்பாவியை எரித்தனர். திவாகரனுக்கு சொந்தமான பேருந்தை அடித்து நொறுக்கினார்கள். இதனால், தஞ்சையில் பெரும் பதற்றம் நிலவுகிறது. 
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை அறிய அவரைத் தொடர்புகொண்டோம். அப்போது அவர் நமக்கு அளித்த பேட்டி...

உங்களை தினகரன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நீக்கி இருக்கிறாரே...? 

தினகரன் முதலில் அ.தி.மு.க கட்சியிலேயே கிடையாது. அவர் எப்படி என்னைக் கட்சியிலிருந்து நீக்கமுடியும். திருவாரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு 20 வருடம் ஆகிவிட்டது. அதில் பதினேழரை வருடமாக மாவட்டச் செயலாளராக இருக்கிறேன். சிறுதவறு செய்தால் கட்சிப்பதவியிலிருந்து பதவியைப் பறிக்கும் ஜெயலலிதா தலைமையின் கீழ் 17 வருடங்களாக பதவியில் இருந்துள்ளேன். அப்படிப்பட்ட என்னை யாரும் கட்சியிலிருந்து நீக்க முடியாது. அ.தி.மு.க எனும் மாபெரும் கட்சியில், இயக்கத்தில் துணைப்பொதுச் செயலாளரை நியமிப்பதற்கு பொதுச்செயலாளருக்கே தகுதி கிடையாது. அப்படிப்பட்ட தகுதியற்ற ஒருவர் என்னை எப்படி நீக்க முடியும். இதன்மூலம் கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதுதான் அவர் நோக்கமே தவிர, அவருடைய செயல்பாடுகளில் யதார்த்தமும், உண்மையும் இல்லை.
.

அமைச்சர் காமராஜ்

சசிகலாவை நீக்குவோம் என வைத்திலிங்கம் சொல்லியிருக்கிறாரே, அதைப்பற்றி...? 

பொதுக்குழுவைக் கூட்டி முடிவு செய்வோம் என்று சொல்லியிருக்கிறார். அதில் என்ன தவறு இருக்கிறது?

திவாகரனின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் நீங்கள், இப்போது அவருடைய பஸ் கண்ணாடியை உங்கள் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கியிருக்கிறார்களே...?

நான் திவாகரன் ஆதரவாளரோ, தினகரன் ஆதரவாளரோ கிடையாது. நான் மறைந்த ஜெயலலிதாவின் ஆதரவாளர். ஜெயலலிதா சொல்வதை அப்படியே செய்துகொண்டிருந்தேன். அதனால்தான் பதினேழரை வருடங்களாக மாவட்டச் செயலாளராக இருக்க முடிந்தது. ராஜ்யசபா எம்.பி, இரண்டு முறை எம்.எல்.ஏ., இரண்டு முறை அமைச்சர் என எல்லாமே எனக்கு ஜெயலலிதாதான் கொடுத்தார். நான் வாங்கிக் கொடுத்தேன் என்று யாராவது சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜெயலலிதா உயிரோடு இருந்தால் சொல்ல முடியுமா? முதல்வராக இருந்த ஜெயலலிதாவால் மட்டுமே பொறுப்புகள் வழங்க முடியும். தினகரனுக்கு அம்மாதான் பதவி கொடுத்தார். இவர்கள் யாருக்கும் பதவிகள் கொடுக்கவும் இல்லை, பதவிகள் வழங்கவும் முடியாது. அதிகாரம் ஜெயலலிதாவிடம் மட்டும்தான் இருந்தது. இவர்கள் சொல்லி யாருக்கும் ஜெயலலிதா பதவி கொடுக்கவில்லை. எங்களுக்கெல்லாம் ஜெயலலிதா நேரடியாக கொடுத்த பதவிகள் இவை. 

இரு அணிகள் இணைந்திருப்பது மக்கள் மத்தியில், தொண்டர்கள் மத்தியில் எப்படி இருக்கிறது...?

தினகரன்

ஒபிஎஸ், ஈபிஸ் இணைந்திருப்பது பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. நானே மூன்று நாள் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் எழுச்சியைக் கண்டேன். இரட்டை இலைச் சின்னத்தை மீண்டும் பெறுவோம். கட்சியையும், ஆட்சியையும் இருவரும் ஒன்றாக சேர்ந்து வழிநடத்தி வருகிறார்கள். ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட அமைச்சர்களை வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை வழிநடத்தி வருகிறார். 

முதலமைச்சராக தனபாலை மாற்ற வேண்டுமென தினகரன் அணியினர் சொல்லி வருகிறார்களே?

மூத்த நிர்வாகிகள் எல்லோரும் முடிவு செய்துதான் எடப்பாடியை முதல்வராக கொண்டு வந்திருக்கிறோம். இப்போது முதல்வர் மாற்றத்திற்கான வாய்ப்பே கிடையாது. அதில் ஒருசிலருக்கு சின்ன கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். முதல்வரை மாற்ற வேண்டும் என்பதற்கு இப்போது என்ன அவசியம் இருக்கிறது. இப்படி எதையாவது சொல்லி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார் தினகரன். அது ஒருபோதும் நடக்காது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement