இறைபக்தி எத்தனை அவசியம்? - ராமகிருஷ்ண பரமஹம்சர்

ராமகிருஷ்ண பரமஹம்ச கீதையில் வரும் சம்பவம் இது. இதை உற்று நோக்கி உங்கள் வாழ்வை பக்தி மார்க்கத்தில் செலுத்துங்கள். என்னதான் உங்களின் நம்பிக்கை, திறமை, செல்வம், பின்புலம் யாவும் வலுவானதாக இருந்தாலும் பகவானின் மீது நீங்கள் கொண்ட பக்தி உங்களைக் காப்பாற்றும் என்று இந்த உதாரணத்தின் மூலம் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் எத்தனை அழகாக விளக்குகிறார் பாருங்கள். 

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்

ஒரு தகப்பன் இரு குழந்தைகளை அழைத்துக்கொண்டு காட்டு வழியே செல்கிறான். இளைய பிள்ளை தகப்பனின் தோளின் மீது அமர்ந்து கொண்டிருக்கிறான். மூத்த பிள்ளையோ தகப்பனின் கரங்களை பிடித்தபடி நடந்து வருகிறான். சிறிது நேரத்தில் வானத்தில் பெரும் கழுகு ஒன்று பறந்துகொண்டிருந்தது. இதைக்கண்ட மூத்த பிள்ளை 'அப்பா அதோ பாருங்கள், எத்தனை பெரிய கழுகு' என்று கூவி மகிழ்ந்தான். கழுகினைக்கண்ட இளைய பிள்ளை அப்பாவை அழுத்திக் கட்டிக்கொண்டான். இன்னும் கொஞ்ச நேரத்தில் அழகிய பறவைகள் கூட்டம் ஒன்று அவர்கள் தலைக்கு மேலே விரைந்து சென்றது. இதைக்கண்டதும் இரு பிள்ளைகளுமே கைகளை தட்டி மகிழ்ந்தனர்.  வளர்ந்த பெரிய பிள்ளையோ மன மகிழ்ச்சியால் மேலும் துள்ளி குதித்தான். இதனால் அப்பாவின் கைப்பிடியை நழுவ விட்டுவிட்டான். இதனால் கால் தடுக்கி கீழே விழுந்து காயம் அடைந்தான்.

சிறிய பிள்ளையும் கைகளை தட்டி மகிழ்ந்தாலும் அவன் கீழே விழவில்லை. ஏன் என்றால் அவனை தகப்பன் சுமந்துகொண்டிருந்தான். முதல் பிள்ளை தன்னம்பிக்கை கொண்டவன் என்றாலும், இளைய பிள்ளை கடவுளால் அரவணைக்கப்பட்டவன். ஒருமுறை கீழே விழவில்லை என்றாலும், மறுமுறை விழும்போது காயம் அடைந்தான் மூத்த பிள்ளை. இளைய பிள்ளையோ முதலில் பயந்தாலும் எப்போதுமே அவன் தகப்பனின் தோளில் பாதுகாப்பாக இருந்து வருகிறான். யோசித்துப் பாருங்கள் இந்த சிறு சம்பவம் உங்களுக்கு எண்ணற்ற சிந்தனைகளை உருவாக்கித் தரும். அப்போது இறைபக்தி எத்தனை அவசியம் என்பதை உங்களுக்கு உணர்த்தும். சரியா? 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!