வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (01/09/2017)

கடைசி தொடர்பு:11:38 (01/09/2017)

சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாள்! - துணை முதல்வர் ஓ.பி.எஸ் பங்கேற்பு

நாட்டின் முதல் சுந்தந்திரப் போராட்ட வீரரான பூலித்தேவன் பிறந்த தினத்தையொட்டி நடைபெறும் விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூன்று அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெல்கட்டும்செவல் கிராமத்தில், சுதந்திரப் போராட்ட வீரர், மாமன்னர் பூலித்தேவன் நினைவு மண்டபம் உள்ளது. இன்று அவரது பிறந்த தினம். இதை அரசு விழாவாகக் கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அரசின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். 

பூலித்தேவன் சிலைஇது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக வெளிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘’விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாளை ஒவ்வோர் ஆண்டும் அரசு விழாவாகக் கொண்டாடுவதற்கு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி, நெல்லை மாவட்டம் நெல்கட்டும்செவலில் பூலித்தேவன் சிலைக்குத் தமிழக அரசின் சார்பில், துணை முத்லவர் ஓ.பன்னீர்செல்வம், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்ராஜு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, கதர் மற்றும் கிராமத் தொழில்கள் அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், நெல்லை மாவட்டத்தின் சட்ட மன்ற உறுப்பினர்களும்  நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர். இந்த விழாவுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்  சமுதாயத் தலைவர்கள், அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த விழாவையொட்டி, நெல்லை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.  

இந்த விழாவையொட்டி, மாவட்டத்தின் முக்கியச் சாலைகளில் போலீஸார் சோதனைச் சாவடிகளை அமைத்து வெளியூரிலிருந்து வரக்கூடிய வாகனங்கள் மற்றும் நபர்களைக் கண்காணிக்கிறார்கள்.