Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’பொதுக்குழு கூட்டுவது சட்டவிரோதமானது’ - தினகரன் அதிரடி

செப்டம்பர் 12-ம் தேதி கூடும் பொதுக்குழு சட்டவிரோதமானது என்றும், அதில் அ.தி.மு.க-வின் உண்மைத் தொண்டர்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என்றும் அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். 


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய அணிகள் இணைந்ததற்கு டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் ஆளுநரிடம் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர். இந்த நிலையில், அ.தி.மு.க. தொண்டர்கள் பெரும்பாலானோர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம், சென்னை வானகரத்தில் செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், செப்டம்பர் 12-ம் தேதி கூடும் பொதுக்குழு சட்டவிரோதமானது என்று டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ கழகத்தின் சட்டதிட்ட விதிமுறை 20 பிரிவு 6-ன் படி பொதுக்குழுவையும்,  செயற்குழுவையும் பொதுச்செயலாளர் மட்டுமே கூட்ட முடியும். கழகத்தின் சட்டதிட்ட விதிமுறை 19 பிரிவு 7-ன் படி பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பகுதி எண்ணிக்கையினர் கையெழுத்திட்டு கேட்டுக்கொண்டால், பொதுக்குழுவின் தனிக் கூட்டத்தை அறிவிப்பு கிடைத்த 30 நாள்களுக்குள் பொதுச்செயலாளர் கூட்ட வேண்டும். தேர்தல் ஆணையத்தின் வாயிலாக அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சட்ட திட்ட முறைகளும் இதையே பறைசாற்றுகின்றன. 

ஆகவே, செப்டம்பர் 12-ம் தேதியிட்ட கூட்டம் தொடர்பான அறிவிப்புக்கும், நமது கட்சிக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. தேர்தல் ஆணையத்தின் முன் தாக்கல்செய்துள்ள தங்களின் வழக்கு, பொருண்மைகளுக்கு எதிரான வகையிலேயே வழக்கைத் தொடுத்தவர்கள் செயல்பட்டுவருகிறார்கள் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. பொதுச்செயலாளர் சசிகலாவால் கட்சியின் சட்ட திட்ட விதிமுறைகளின் படி கூட்டப்படும் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்களுக்கு மட்டுமே சட்டபூர்வ அங்கீகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சியின் கோடிக்கணக்கான தொண்டர்களிடையே குழப்பம் ஏற்படுத்தும் கெட்ட நோக்கத்தோடு, கட்சிக்குப் பல சிக்கல்களை உருவாக்க வேண்டும் எனும் கூட்டுச்சதியோடு, 12.09.2017 அன்று பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடக்கவிருப்பதாக, சிலர் திட்டமிட்டு செய்தி பரப்பிவருகிறார்கள். கட்சியின் உண்மைத் தொண்டர்கள் யாரும் இதை நம்ப வேண்டாம். அப்படி நடக்கும் எந்தவொரு கூட்டத்திலும் பங்கேற்க வேண்டாம். மீறி கலந்துகொள்ளும் உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது சட்ட திட்ட விதிமுறைகளின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேற்படி, 12.09.2017 கூட்டம் தொடர்பான சட்டத்துக்குப் புறம்பான அறிவிப்பைச் செய்த நபர்களின் மீது உரிய சட்டபூர்வமான நடவடிக்கையைத் தொடர உள்ளேன். பொதுச்செயலாளர் சசிகலாவின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது’ என்று தினகரன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement