உள்ளாட்சித் தேர்தல் வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கின் தீர்ப்பை, வரும் திங்கள்கிழமைக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. 


தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம், கடந்த ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்தது. இதையடுத்து, தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் தொடங்கியது. ஆனால், இடஒதுக்கீடுகுறித்த அறிவிப்பு முறையாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறி, தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி வழக்குத் தொடர்ந்தார். இதனால், உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கத் தனி அதிகாரிகளை தமிழக அரசு நியமித்தது. அவர்களின் பதவிக் காலம், கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், பதவிக் காலத்தை டிசம்பர் 31வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, 'மாற்றம் இந்தியா' அமைப்பின் பாடம் நாராயணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகத் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்துவந்தது. இந்த வழக்கில், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான உத்தேச அட்டவணையை கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி மாநிலத் தேர்தல் ஆணையம், உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்தது. இந்த வழக்கில் இறுதி வாதம் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு, வரும் திங்கள்கிழமை வழங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தற்போது அறிவித்துள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!