வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (01/09/2017)

கடைசி தொடர்பு:13:15 (01/09/2017)

இந்த லட்சணத்தில் இருந்தால் கோவை எப்படி ஸ்மார்ட் சிட்டி ஆகும்? - கொதிக்கும் தி.மு.க-வினர்

கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட  தி.மு.க-வினரால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை தி.மு.க

 

கோவை மாநகராட்சியின் 100 வட்டங்களிலும் 'வரி சீராய்வு' என்ற பெயரில்  புதிய வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. அதை எதிர்த்து, கோவை சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ., கார்த்திக் தலைமையில் நூற்றுக்கணக்கான தி.மு.க-வினர் இன்று காலை கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது பேசிய எம்.எல்.ஏ., கார்த்திக், " மாநகராட்சியில் எந்த வசதிகளையும் செய்து தராத மாநகராட்சி நிர்வாகம்,  கோவையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வரி சீராய்வு என்ற பெயரில் புதிய வரிகளைப் போட்டிருக்கிறார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.  மாநகராட்சிகளில் பத்துப் பதினைந்து நாள்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வழங்குகிறார்கள். அதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

குப்பைகளைச் சரியாக அள்ளுவது கிடையாது. கோவை மாநகர் முழுக்க ,ஆங்காங்கே குப்பைகள் குவிந்துகிடக்கின்றன. மழை பெய்தால்  எங்கும் தண்ணீர் தேங்கிநிற்பது வாடிக்கையாகியிருக்கிறது. மழை நீர் வடிகால்களைத் தூர் வாருவதில் யாரும் துளியும் அக்கறை காட்டுவதில்லை. இதனால், டெங்கு உள்ளிட்ட மர்மக் காய்ச்சல்கள் பரவுகின்றன. பாதாள சாக்கடைப் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட குழிகளால் பல இடங்களில் சாலைகள் சிதிலமைடைந்துகிடக்கின்றன. இதை, மாநகராட்சி ஏறெடுத்துக்கூட பார்ப்பதில்லை.

மாநகராட்சியில் வேலை செய்த கட்டுமானப் பணியாளர்களுக்குச் சம்பளம் தராமல் இழுத்தடிக்கிறார்கள். கோவை மாநகராட்சி முழுக்க 10,000-க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் எரியாமல் பழுதாகியுள்ளன. இதையெல்லாம் கண்டுகொள்ளாத மாநகராட்சி, வரி விதிப்பதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருக்கிறது. வரி சீராய்வு என்பவர்கள், தங்கள் பணிகளைச் சீராய்வுசெய்ய மாட்டேன் என்கிறார்கள். இப்படியான அடிப்படை வசதிகளையே சரிவர செய்துதராத கோவையை எங்கிருந்து இவர்கள் 'ஸ்மார்ட் சிட்டியாக' மாற்றப்போகிறார்கள் என்று  கேள்வி எழுப்பிய கார்த்திக், இந்த வரி உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால், எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.