‘தினகரன் ஆதரவாளர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 3 அமைச்சர்கள்!’ - அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி | Three ministers in the wedding function of dinakaran's suppoter shocks CM

வெளியிடப்பட்ட நேரம்: 16:31 (01/09/2017)

கடைசி தொடர்பு:16:31 (01/09/2017)

‘தினகரன் ஆதரவாளர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 3 அமைச்சர்கள்!’ - அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி

தினகரன் ஆதரவாளர் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில், மூன்று அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். இது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினகரன்

அ.தி.மு.க-வில் நடந்துவரும் அதிகார போட்டியால் பரபரப்பான அரசியல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்த, தினகரன் ஆதரவாளர்களும் எதிர்க்கட்சியினரும் வியூகம் அமைத்துவருகின்றனர். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர்ராவை சந்தித்து, 'முதல்வரை மாற்ற வேண்டும்' என்று கடிதம் கொடுத்துள்ளனர். தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி-க்களும் குடியரசுத் தலைவரைச் சந்தித்து பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டுவருகின்றன. அதைச் சமாளிக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார். பெருபான்மையை நிரூபிக்க அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களைச் சந்தித்துவருகிறார். அப்போது, ஜெயலலிதா ஏற்படுத்திய ஆட்சி, நம்மால் கவிழக்கூடாது என்று சென்டிமென்ட்டாகப் பேசியுள்ளார். 
இந்தச் சூழ்நிலையில், சசிகலாவால் துணைப் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன், கட்சிப் பதவிகளிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்களை நீக்கிவருகிறார். அதற்கு, சம்பந்தப்பட்டவர்கள் மறுப்பு தெரிவித்துவருகின்றனர். சசிகலா, தினகரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, செப்டம்பர் 12-ம் தேதி பொதுக்குழுவை நடத்த உள்ளனர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர்.

‘பொதுக்குழுவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தரப்பு நடத்த அதிகாரமில்லை' என்று தெரிவித்துள்ளார் தினகரன். அதோடு, தன்னுடைய ஆதரவாளர்கள் யாரையும் பொதுக்குழுவில் பங்கேற்க வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால், பொதுக்குழுவில் எந்தவித இடையூறும் இல்லாமல், சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்புள்ளது. தினகரனின் ஆதரவாளரான பெண் எம்.பி-யின் மகள் திருமண நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அதில், தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு வி.வி.ஐ.பி-க்கான வாழை இலை விருந்து கொடுக்கப்பட்டுள்ளது. 42 பொரியல் வகைகளுடன் சைவ உணவு விருந்தை ருசித்துச் சாப்பிட்டுள்ளார் தினகரன். அப்போது, பருப்புப் பாயசம் சூப்பர் என்று சொல்லியிருக்கிறார். 
இந்தத் திருமண நிகழ்ச்சிக்கு, தமிழக அமைச்சர்கள் மூன்று பேர் சென்றுள்ளனர். அந்த மூன்று பேரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்கள். அவர்கள் திருமண நிகழ்ச்சிக்கு சென்றது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற தினகரன், அரசியல்குறித்து எதுவும் பேசவில்லையாம். மணமக்களை வாழ்த்திவிட்டுச் சென்றுள்ளார். தற்போதைய அரசியல் பரபரப்புகுறித்து அவரின் முகத்தில் எந்தவித பதற்றமும் இல்லை என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். சிரித்த முகத்துடன் பேசிய தினகரனிடம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் நிகழ்ச்சிக்கு வருவதாகத் தகவல் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், அதை அவர் கண்டுகொள்ளவில்லையாம். திருமண நிகழ்ச்சி முடிந்து விருந்து சாப்பிட்ட பிறகு, அவர் புறப்பட்டுச் சென்றுள்ளார். 
 தினகரன், திருமண நிகழ்ச்சியில் இருக்கும் தகவல், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்குத் தெரிந்ததும், அவர்கள் காலதாமதமாகவே சென்றுள்ளனர். மூன்று அமைச்சர்களும் மணமக்களை வாழ்த்திவிட்டுச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வினர், “பெண்  எம்.பி., தினகரன் ஆதரவாளர் என்றாலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுத்திருந்தார். இந்தத் திருமண நிகழ்ச்சிக்கு கட்டாயம் தினகரன் வருவார் என்பதால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பலர் செல்லவில்லை. இருப்பினும் மூன்று அமைச்சர்கள் திருமணத்துக்கு வந்தனர். அவர்கள், அரசியல் எதுவும் பேசவில்லை. மூன்று அமைச்சர்களைப் பார்த்த தினகரன் ஆதவாளர்கள், நட்சத்திர ஓட்டலில் வேறு அறைக்குச் சென்றுவிட்டனர். அமைச்சர்கள் புறப்பட்டுச் சென்றபிறகு மீண்டும் அவர்கள் அங்கு வந்தனர்” என்றனர்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close