Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“அறிவைக் கட்டிப்புடிச்சு முத்தம் கொடுத்திட்டேன்” - சிலிர்க்கும் பேரறிவாளன் நண்பர்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்துவருகிறார் பேரறிவாளன். 26 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு முதன்முறையாக ஒரு மாத கால பரோல் கிடைத்து, தனது சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்குத் திரும்பியிருக்கிறார் அவர்.

பேரறிவாளன்

ஜோலார்பேட்டையில் உள்ள பேரறிவாளனின் இல்லத்திலிருந்து இரண்டு வீடு தள்ளியிருக்கிறது அவரது நண்பரான வெங்கட ரமண பாபுவின் வீடு. விவரம் தெரிந்தநாள் முதல் இருவருமே இணைபிரியா தோழர்கள். பள்ளிப் படிப்பில் ஆரம்பித்து, விளையாட்டு, பொழுதுபோக்கு என்று ஒன்றாகச் சுற்றித்திரிந்தவர்கள். ராஜீவ்காந்தி படுகொலைச் சம்பவம் பேரறிவாளன் வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போட... அதிர்ந்துபோனார் வெங்கட ரமண பாபு. 

கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி இரவு பரோலில் வீடு திரும்பிய பேரறிவாளனைக் கட்டியணைத்து முத்தமழை பொழிந்திருக்கிறார் பாபு. கால் நூற்றாண்டுக்கு முன்பு ஜோலார்பேட்டை வீதிகளில் நண்பன் பேரறிவாளனோடு சுற்றித் திரிந்த பசுமையான நினைவுகளை இங்கே நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் வெங்கட ரமண பாபு...

“2014-ல் எப்படியும் மூவரும் விடுதலையாகிவிடுவார்கள் என்ற செய்தி வந்ததால், அப்போது உற்சாக மிகுதியில், நானும் என் மகனும் அறிவு (பேரறிவாளன்) வீட்டுக்கு முன்பாக வெடிகளைக் கொளுத்த ஆரம்பித்துவிட்டோம். ஆனால், அடுத்தடுத்து வந்த செய்திகள் எங்களை மனமொடிய வைத்துவிட்டன. அதனால், இம்முறையும் நம்பிக்கையில்லாமல்தான் இருந்தோம்.

வெங்கட ரமண பாபு

ஆனால், அந்த இரவு நேரத்தில், போலீஸ் வாகனங்கள் எங்கள் தெருவுக்குள் வந்ததும்தான் நம்பிக்கை வந்தது. காரிலிருந்து இறங்கிய அறிவு, அவ்வளவு கூட்டத்திலும் என்னைப் பார்த்து 'டேய் பாபு'னு கத்திட்டான். ஓடிப்போய் அவனைக் கட்டிப்புடிச்சு நா முத்தம் கொடுத்திட்டேன். தோளுக்கு வளர்ந்துவிட்ட என் மகனையும் மகளையும் அப்போதுதான் முதன்முறையாக அறிவு பார்த்தான். 'டேய் பாபு உனக்கு இவ்வளவு பெரிய பிள்ளைங்களா?' என்று ஆச்சர்யப்பட்டுப்போனான். 

'என்னடா இப்படி மெலிஞ்சிட்ட...?'ன்னு நான் கேட்டதும், 'ஜெயில் சாப்பாடு... பின்ன எப்படியிருக்கும்...?'னு சிரிச்சிக்கிட்டான். அன்னைக்கு நைட் 12 மணிவரையிலும் அவனோடுதான் பேசிக்கிட்டிருந்தோம். 'மட்டன் ஃப்ரை க்ரேவியோடு நாட்டுக் கோழி குழம்பு செஞ்சு எடுத்துட்டு வாடா'ன்னு சொல்லியிருக்கான். நாளைக்குக் கொண்டுவர்றதா சொல்லியிருக்கேன்'' என்று விவரித்தவர், தொடர்ந்து பள்ளி நாள்களில் ஒன்றாகச் சுற்றித்திரிந்த சந்தோஷ நிகழ்வுகளையும் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்.

''ஸ்கூல்ல அவன் என்.சி.சி ஃபர்ஸ்ட் டீம் லீடர். அவங்க அப்பா பி.டி வாத்தியார். அதனால ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதுவுமில்லாம நாங்க ரெண்டு பேருமே வீட்டுக்கு ஒரே ஆம்பளைப் பசங்க. அதனால, சின்ன வயசுல கிணறு, குளத்துக்கு எல்லாம் குளிக்க அனுமதிக்கமாட்டாங்க. ஆனாலும், 'விளையாடப் போறோம்'னு வீட்டுல பொய் சொல்லிட்டு கிணத்துத் தண்ணியில விழுந்து குதிச்சு நீச்சலடிச்சிருக்கோம்.

பேரறிவாளன் குடும்பம்

பக்கத்துல இருந்த பாபு டூரிங் டாக்கீஸ்ல மண் குவிச்சு உக்காந்து 'ஷோலே' படம் பாத்துருக்கோம். நான் அப்போ சத்யராஜ் ரசிகர். ஆனால், அறிவு என்னோட சேர்ந்து படம் பார்ப்பானே தவிர... யாருக்கும் ரசிகனா இருந்ததில்ல. அப்பவே, பெரியார், மார்க்ஸ், லெனின்னு நிறைய படிப்பான்.

அந்தக் காலகட்டத்துல சந்தர்ப்ப சூழ்நிலையில, அவனும் இந்த வழக்குல சிக்கிக்கிட்டான். அதனாலதான் அவனை விசாரிச்ச அதிகாரிகூட, 'அறிவோட வாக்குமூலத்தை அப்படியே நா பதிவு செஞ்சிருந்தா, இந்நேரம் அவன் விடுதலையாகி வெளியே இருப்பான்'னு மனச்சாட்சியோட சொல்லியிருக்காரு.

அறிவோட நல்ல மனசுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் சார்.... அவன் நிரந்தரமா விடுதலையாகி இதே ஊருக்கு வந்து குடும்பம் குழந்தைகள்னு வாழத்தான் போறான். அறிவு, நிச்சயம் நீ வெளியில வருவடா!'' 

- நம்பிக்கையும் ஆதங்கமுமாக தழுதழுத்த குரலில் பேசிமுடிக்கிறார் வெங்கட ரமண பாபு!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement